Published:Updated:

`சுபஸ்ரீ வரும் நேரம் பார்த்தா பேனர் விழவேண்டும்?’- `விதி' என விவரித்த பிரேமலதா

பேனர் வைக்கக் கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதை முதலில் பின்பற்றி நடைமுறைப்படுத்தியது தே.மு.தி.க-தான். இதற்கு ஆவடி பொதுக் கூட்டமே சாட்சி.

premalatha vijayakanth
premalatha vijayakanth

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள் கடந்த மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள் விழா, நலத் திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா மற்றும் தே.மு.தி.க 15-ம் ஆண்டு தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

premalatha vijayakanth
premalatha vijayakanth

இதில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன், கட்சியின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மக்களுக்குத் தையல் மிஷின், புடவை என பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது பேசிய பிரேமலதா, ``தமிழகத்தின் எந்த மூலையில் தே.மு.தி.க சார்பில் சிறிய கூட்டம், கொடியேற்றுதல் போன்ற எது நடந்தாலும் அங்கு வந்த மக்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்படும். தன் மக்களுக்கு அனைத்து உதவிகளும் சென்று சேரவேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருந்து இதைச் செய்துவருகிறார். ஆவடியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஒரு பேனர்கூட வைக்கப்படவில்லை.

premalatha vijayakanth
premalatha vijayakanth

பேனர் வைக்கக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதை முதலில் பின்பற்றி நடைமுறைப்படுத்தியது தே.மு.தி.க-தான். இதற்கு ஆவடி பொதுக்கூட்டமே சாட்சி. பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ, அவரது வீட்டுக்கு ஒரே குழந்தை. அவர் இறந்த பிறகு அந்தக் குடும்பத்தை நேரில் சந்தித்த விஜய பிரபாகரன், ‘என்னை மகனாக நினைத்துக்கொண்டு எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கலாம்’ என ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்துள்ளார்.

ஒரு பேனர் விழுந்ததால் உயிர் போகிறது என்றால் அந்த பேனர் நமக்குத் தேவையில்லை. சுபஸ்ரீ மீது அ.தி.மு.க பேனர் விழுந்ததால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதை மிகப் பெரிய விஷயமாக்கிவிட்டார். அதுவே தனியார் பேனர் அல்லது கோயில் பேனர் விழுந்திருந்தால், இவ்வளவு பெரிய விஷயம் ஆகியிருக்காது. சுபஸ்ரீ உயிரிழப்பு எதார்த்தமாக நடந்த ஒன்றுதான்.

premalatha vijayakanth
premalatha vijayakanth

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பேனர் வைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சுபஸ்ரீ அந்த நேரத்தில் அங்கு வரவேண்டும். அவர் வரும் நேரம் பார்த்து பேனர் காற்றில் ஆடி கீழே விழ வேண்டும். அதேநேரத்தில் சுபஸ்ரீயின் பின்னால் தண்ணீர் லாரி வந்து இடித்து அவர் உயிரிழக்க வேண்டும் என்பது விதியாக இருந்துள்ளது. இது உண்மையில் மிகவும் வருத்தமான விஷயம். பெண்கள் வெளியில் செல்லும்போது கவனமாக பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.

`முன்பே செய்திருந்தால் சுபஸ்ரீ நம்முடன் இருந்திருப்பார்’ - பேனர் விவகாரம் கடந்து வந்த பாதை!

தி.மு.க, முதலில் இந்தி எதிர்ப்பு எனக் கூறி பெரிய போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தது. ஸ்டாலின் ஆளுநரைச் சந்திக்கச் செல்லும் முன் வீர வசனம் பேசியபடி உள்ளே சென்றார். ஆனால் வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் முகத்திலிருந்த மரண பயத்தை ஒட்டுமொத்த தமிழகமும் பார்த்தது. ஒரு கொள்கையை முடிவாக எடுத்தால், அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

premalatha vijayakanth
premalatha vijayakanth

அன்று கலைஞர் ஓடாத ரயில் பாதையில் தலை வைத்து இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற நாடகத்தை நடத்தினார். அதை இன்று வரை தி.மு.க சொல்லிக்காட்டி வருகிறது. தமிழை வியாபாரமாக்கிய ஒரே கட்சி தி.மு.க” எனக் கடுமையாக விமர்சித்தார்.