Published:Updated:

`எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்; ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா?' - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

`தேசியக்கொடிக்கு உரிய மரியாதை செலுத்தாமல் ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’

தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை அக்கட்சித் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடிவருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த விஜயகாந்த், தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடினார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``கொரோனா சூழலால் விஜயகாந்த் இந்தமுறை யாரையும் சந்திக்கவில்லை. அவரின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறோம். அடுத்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக இருக்கும். அப்போது அவர் உங்கள் அனைவரையும் சந்திப்பார். தேர்தலுக்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது. இப்போ வரைக்கும் கூட்டணியில்தான் இருக்கிறோம். எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதைக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். ஆனால், தொண்டர்களின் விருப்பம் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே.

மதுரை: `விஜயகாந்த் பிறந்தநாள் பேனரை அகற்றிய அ.தி.மு.க-வினர்?’ - கொதிக்கும் தே.மு.தி.க

தேசியக்கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர்மீது வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்மீதும் வழக்கு தொடரப்பட்டது. எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்; ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? முதன்முறையாக அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றியிருக்கிறார்கள். அவர் உட்பட, அவருடன் இருந்த யாரும் கொடிக்கு மரியாதை செலுத்தவில்லை.

எஸ்.வி.சேகர் - ஸ்டாலின்
எஸ்.வி.சேகர் - ஸ்டாலின்

அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். தேசியக்கொடிக்கு உரிய மரியாதை செலுத்தாமல் ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

"உடல்நலம் தேறியாச்சு மக்களே!"- உற்சாகத்தில் விஜயகாந்த் #Vijayakanth

அ.தி.மு.க-வில் நடைபெற்றுவரும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதம் தொடர்பான கேள்விக்கு, ``அது அந்தக் கட்சியின் உட்கட்சி விவகாரம். நாட்டுக்கான பிரச்னை கிடையாது. எனவே, அதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது’’ என்று பிரேமலதா பதிலளித்தார்.

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, ``எங்களைப் பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்னையில்லை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

உலகம் முழுவதும் யாரும் எதிர்பார்க்காமல், பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது கொரோனா வைரஸ். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாகவே எடுத்துவருகிறது. இதுவரை இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது நல்லதுதான். இப்போது பாருங்கல், இ-பாஸ் தளர்வு அறிவித்ததும், சென்னையை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் தமிழகத்தைவிட்டு கொரோனாவை விரைவில் விரட்டிவிடலாம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு