Published:Updated:

கூடங்குளம் விஸ்வாமித்திரர் கோயிலில் பிரேமலதா ரகசிய யாகம்!- என்ன காரணம்?

பி.ஆண்டனிராஜ்

விஜயகாந்த் முழுமையாகக் குணமடைவதற்காக நெல்லை மாவட்டம் விஜயாபதியில் உள்ள விஸ்வாமித்திரர் கோயிலில் பிரேமலதா ரகசிய யாகம் நடத்தினார்.

கோயில் வாசலில் குரூப் போட்டோ
கோயில் வாசலில் குரூப் போட்டோ

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமமான விஜயாபதியில் மகாலிங்கசுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. தமிழகத்தில் விஸ்வாமித்திரருக்காக அமையப்பெற்ற தனிக்கோயில் இது மட்டுமே. இந்த இடத்தில் யாகம் செய்ததன் மூலமாக விஸ்வாமித்திரர் தன்னுடைய இழந்த சக்தியை மீட்டு மீண்டும் பிரமரிஷியானதாக நம்பிக்கை.

விஸ்வாமித்திரர் கோயில்
விஸ்வாமித்திரர் கோயில்

அதனால் இந்த இடத்தில் இருக்கும் கோயிலில் வழிபட்டால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் என்றும் இழந்த சக்திகளை எல்லாம் மீண்டும் பெற முடியும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கோயில் ஒரு பரிகார ஸ்தலமாகக் கருதப்படுவதால் 64 விதமான தோஷங்களுக்கான பரிகாரம் செய்யும் இடமாக விளங்குகிறது.

Vikatan

விஸ்வாமித்திரர் கோயில் பற்றி அறிந்த விஜயகாந்த், சில வருடங்களுக்கு முன்பு பிரேமலதாவுடன் இங்கு வந்து வழிபட்டுச் சென்றார். அதன் பின்னர், அரசியலில் உச்சம் அடைந்த அவர் எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றார். தற்போது விஜயகாந்த் உடல்நலக்குறைவில் இருக்கும் நிலையில், அவர் சார்பாக பிரேமலதா இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கு வந்துள்ளார்.

யாகத்தில் பங்கேற்ற பிரேமலதா
யாகத்தில் பங்கேற்ற பிரேமலதா

கோயிலில் நவக்கல்ய பூஜையுடன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதில், பிரேமலதா கலந்துகொண்டார். அதன் ஒருபகுதியாக விஸ்வாமித்திரர் கட்டடம் அமைந்துள்ள கடலில் குளித்துச் சிறப்புப் பூஜைகளை மேற்கொண்டார். வளாகத்தில் உள்ள விஸ்வாமித்திரர், சிவன், காளி கோயில்களில் சிறப்புப் பூஜைகளையும் யாகத்தையும் பிரேமலதா நடத்தினார்.

Vikatan

பிரேமலதா இந்தக் கோயிலுக்கு வருவது குறித்துக் கட்சியினருக்குக்கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. அவருடைய வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாகக் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், பிரேமலதாவை அடையாளம் கண்டுகொண்டார்கள். விஜயகாந்த் பூரண குணமடையச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

யாகத்தை முடித்து வெளியே வந்த பிரேமலதா
யாகத்தை முடித்து வெளியே வந்த பிரேமலதா

யாகம் மற்றும் பூஜைகளை முடித்த பின்னர் அப்பகுதி மக்களிடம் பிரேமலதா சகஜமாகப் பேசிக் கொண்டிருந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த யாகம் நடந்தபோது அவர் மிகுந்த உருக்கத்துடன் வேண்டியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.