Published:Updated:

புதுச்சேரி: `பிறந்த அன்றே தலைமறைவு வாழ்க்கை!' – இடதுசாரி சிந்தனையாளர் தோழர் சி.ஹெச்.பாலமோகனன் மறைவு!

சி.ஹெச்.பாலமோகனன்

தொழிற்சங்கத் தலைவராக மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், புதுச்சேரியின் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர் சி.ஹெச்.பாலமோகனன். குறிப்பாக, புதுச்சேரி-தமிழக இணைப்பு எதிர்ப்பு போராட்டத்திலும் இவரின் பங்கு மிக முக்கியமானது.

புதுச்சேரி: `பிறந்த அன்றே தலைமறைவு வாழ்க்கை!' – இடதுசாரி சிந்தனையாளர் தோழர் சி.ஹெச்.பாலமோகனன் மறைவு!

தொழிற்சங்கத் தலைவராக மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், புதுச்சேரியின் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர் சி.ஹெச்.பாலமோகனன். குறிப்பாக, புதுச்சேரி-தமிழக இணைப்பு எதிர்ப்பு போராட்டத்திலும் இவரின் பங்கு மிக முக்கியமானது.

Published:Updated:
சி.ஹெச்.பாலமோகனன்

புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கௌரவத் தலைவராக இருந்தவர் சி.ஹெச்.பாலமோகனன். `சி.ஹெச்.பி’ என்று தோழர்களால் அழைக்கப்பட்ட இவர், புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான மாஹேவை பூர்வீகமாகக்கொண்டவர். 1948-ல் பிரெஞ்சு - இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த நேரமது. இவரின் தந்தை குஞ்சிக்கண்ணன், மாஹே பகுதியின் அப்போதைய பிரெஞ்சு அரசின் அலுவலகத்தைத் தீவைத்து எரித்த வழக்கில் தலைமறைவானார். அந்த நேரத்தில்தான் பாலமோகனன் பிறந்தார். தலைமறைவாக இருக்கும் குஞ்சிக்கண்ணனைக் கைதுசெய்வதற்காக பிரெஞ்சு அரசாங்கம் தன்னை பணயக் கைதியாக்கலாம் என்று நினைத்த அவர், மனைவி குன்னம்மாள், பிறந்த ஒருநாள் குழந்தையான பாலமோகனனை தூக்கிக்கொண்டு காட்டில் தலைமறைவானார்.

போராட்டக் களத்தில் பாலமோகனன்
போராட்டக் களத்தில் பாலமோகனன்

மாஹேவில் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தபோது, தான் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் மாணவர்களுக்குத் தனிக் கழிவறை மற்றும் மாஹேவில் மேற்படிப்புக்காக கல்லூரி என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய மாணவர் போராட்டத்தையும், ஊர்வலத்தையும் முன்னெடுத்தவர். 16 வயதில் இவர் முன்னேடுத்த அந்தப் போராட்டம் கவர்னர் மாளிகையின் கதவுகளைத் தட்டியது. அப்போது கவர்னராக இருந்த பி.டி.ஜட்டி அரசுமுறைப் பயணமாக மாஹே சென்றிருந்தபோது, அவரிடம் தங்களின் கோரிக்கைகளை மனுவாகக் கொடுக்க மாணவர்களுடன் சென்றார். அந்த மனுவை படித்துப் பார்த்த கவர்னர், ‘இது நியாயமான கோரிக்கை’ என்று பாலமோகனனைப் பாராட்டியதுடன் உடனடியாக மாணவர்களுக்கெனத் தனிக் கழிவறைகள் அமைக்க உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அத்துடன் மேற்படிப்புக்காக உடனே கல்லூரி தொடங்கப்படும் என்று வாக்குறுதியும் கொடுத்தார். 19-வது வயதில் இளநிலை எழுத்தருக்கான தேர்வை எழுதி, மாநில அளவில் முதலிடம் பிடித்து, புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். அது 1975-ம் ஆண்டு. பணியில் சேர்ந்தவுடனேயே ஊழியர்களிடையே நிலவிய ஊதிய முரண்பாடுகளை மையப்படுத்தி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து அப்போது முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
vikatan

ஒருகட்டத்தில் `மாநில அரசு ஊழியர்களுக்காக ஏன் மத்திய அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறீர்கள்?’ என்று தலைமைச் செயலாளர் அப்போது எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது உருவானதுதான் `புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளனம்.’ அதன் முதல் பொதுச்செயலாளராகப் பதவியேற்றார் பாலமோகனன். மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்தபோது, அனைத்து மாநிலங்களிலும் இயங்கிவந்த அரசு ஊழியர்கள் சங்கங்கள் ’பிரதமரின் 20 அம்சத் திட்டத்தை வரவேற்கிறோம்’ என்று அறிக்கை வெளியிட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன் பிரதமரின் கரங்களை வலுப்படுத்தும்விதமாக தங்கள் வேலை நேரத்தைவிடக் கூடுதலாக அரை மணி நேரம் வேலை செய்கிறோம் என்றும் வலிந்து சென்றன. அதனடிப்படையில் பாலமோகனனை அழைத்த அப்போதைய தலைமைச் செயலர், கூடுதல் நேரம் வேலை செய்வதாக அறிக்கை வெளியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பாலமோகனன், ’அவசரநிலைக்காக நாங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டுமென்றால், நீங்கள் சுற்றறிக்கை அனுப்புங்கள். நாங்களாகவே ஏன் அறிக்கை தர வேண்டும்?’ என்று கேட்டதால் உஷ்ணமானார் தலைமைச் செயலர்.

பாலமோகனன்
பாலமோகனன்

அப்போது மாஹே தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த கே.வி.ராகவன் மீது ஒரு கொலை வழக்கு பதிவானதால் அவர் தலைமறைவானார். அவரையும், அவரைப்போல தலைமறைவாக இருந்த, கேரளாவில் மிகப்பெரிய நக்சலைட் தலைவரான அஜிதாவையும் சந்திக்கிறார் என்று குற்றம்சுமத்தி கைதுசெய்தது காவல்துறை.

இரண்டு நாள்கள் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்த காவல்துறை, இருவரையும் சந்தித்ததாக ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது. அதன் உச்சகட்டமாக போலீஸார் அவரை சாக்கு மூட்டையில் கட்டி பழைய துறைமுகத்தில் கடலில் இறக்கி மிரட்டினர். ஐஸ் கட்டிகளின் மீது நிர்வாணமாகப் படுக்கவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். ஆனால் ’சந்திக்காதவர்களைச் சந்தித்ததாக நான் ஏன் பொய்யாக வாக்குமூலம் தர வேண்டும்?’ என்று கூறியதால், மூன்றாவது நாள் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்குதான் தமிழை எழுதுவதற்கும் படிப்பதற்கும் கற்றுக்கொள்கிறார். ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியடைந்து, மிசா சட்டம் நீக்கப்பட்ட பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார். இந்தக் காலக்கட்டம்தான் அவரை புதுச்சேரியின் தொழிற்சங்கத் தலைவராக அடையாளப்படுத்தியது.

தொழிற்சங்கத் தலைவராக மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், புதுச்சேரி மாநிலம் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். அதில் புதுச்சேரி தமிழக இணைப்பு எதிர்ப்பு போராட்டத்திலும் இவரது பங்கு மிக முக்கியமானது. இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவரான பாலமோகனன். 10 நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் மாஹேவுக்குச் சென்றார். கடந்த 8-ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். இன்று அதிகாலை புதுச்சேரிக்கு எடுத்துவரப்பட்ட அவரது உடல், முத்தியால்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் பெரியார் நகர், மூவேந்தர் வீதியிலுள்ள சம்மேளன அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு மேல் புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, 5 மணிக்கு கருவடிக்குப்பம் இடுகாட்டில் அஞ்சலிக் கூட்டமும், நல்லடக்கமும் நடத்தப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism