Published:Updated:

மோடியின் திடீர் தமிழ்ப்பாசத்துக்குக் காரணம் என்ன?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடந்த சில மாதங்களாக, இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் தமிழ் மொழி குறித்து பிரதமர் மோடி பேசிவருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், குறிப்பாக பிரதமர் மோடியும் சமீப காலமாக தமிழ் மொழி மீது அதிக ஈடுபாடு காட்டிவருவதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. ஒரே நாடு, ஒரே சட்டம் எனப் பன்மைத்துவம் நிறைந்த தேசத்தை ஒற்றைத்தன்மையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியாவில், 'தேன் கூட்டில் கல்லை எறிந்தது' போல வந்து விழுந்தது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்தி மொழி சம்பந்தமான பதிவு. இந்தி திவாஸ் அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் உலகத்திற்கு அடையாளமாக காண்பிக்க ஒரு மொழி இருக்க வேண்டும். அப்படி இந்தியாவை ஒரு மொழி இணைக்க முடியுமென்றால், அது பெரும்பான்மையினரால் பேசப்படக்கூடிய இந்தி மொழிதான்” என்று பதிவிட்டிருந்தார்.

அமித் ஷா
அமித் ஷா

மேலும், “இந்த நாட்டு மக்கள் அனைவரிடமும் நம் தாய் மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பதோடு, இந்தி மொழியின் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தேசத்திற்கு ஒரு மொழி தேவை என்கிற காந்தி மற்றும் சர்தார் வல்லபபாய் பட்டேல் ஆகியோரின் கனவுகளை நனவாக்குவோம்” எனப் பதிவிட்டிருந்தார். இது இந்திய அளவில், குறிப்பாக தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "மீண்டுமொரு மொழிப் போராட்டத்துக்கு வித்திட வேண்டாம். இந்த முறை அது தமிழகத்தோடு மட்டுமில்லாமல் தேசிய அளவிலானதாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் என அமித் ஷாவின் கருத்துக்குப் பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் மீதும் தமிழின் மீதும் பா.ஜ.க -வின் அணுகுமுறை மாறியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

செப். 23 அன்று, அமெரிக்காவில் நடைபெற்ற ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பேசிய மோடி, 'தமிழ், உலகில் பழைமையான மொழி' என்றும், 'இந்தியாவில் எல்லாம் சௌக்கியம்' என இந்தியைத் தொடர்ந்து தமிழிலும் அதையே குறிப்பிட்டார்.

செப் 27 ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய மோடி, தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்கிற புகழ்பெற்ற கவிதை வரிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மோடி தமிழ்ப்பற்று
மோடி தமிழ்ப்பற்று

செப். 29 அன்று சென்னையில் உள்ள ஐஐடி-யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய மோடி, "நாம் தனித்துவம் மிக்க தமிழ்நாட்டில் இருக்கிறோம். உலகின் மிகவும் பழைமையான தமிழ் மொழியின் பூமி இது. அமெரிக்கா முழுவதும் தமிழின் பெருமை ஓங்கி ஒலிக்கிறது" என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் 11, 12 ஆகிய இரு தினங்களில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் முறைசாரா சந்திப்பின்போது சீன அதிபரை மோடி தமிழில் வரவேற்றதாக செய்திகள் வெளியாகின. அப்போது மோடி, தமிழரின் பாரம்பர்ய உடையான வேட்டி - சட்டை அணிந்திருந்தார். மேலும், மாமல்லபுரம் கடற்கரையில் தான் எழுதிய கவிதையையும் தமிழில் மொழி பெயர்த்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, மோடியின் சமீபத்திய தாய்லாந்து பயணத்தில், நவம்பர் 2-ம் தேதியன்று திருக்குறள் நூலின் 'தாய்' (தாய்லாந்து மொழி) மொழிப்பெயர்ப்பை வெளியிட்டிருந்தார்.

பிரதமரின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழ் மொழியின் மீதான ஆர்வமே என பா.ஜ.க-வினரும், இவையெல்லாம் அமித் ஷாவின் கருத்துக்கான எதிர்வினையே என்று எதிர்தரப்பினரும் வினையாற்றிவருகின்றனர். ஆனால், யதார்த்த நிலை என்ன? பா.ஜ.க ஆட்சி தற்போது 6வது ஆண்டில் இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழுக்காக பா.ஜ.க செய்தது என்ன என்பன பற்றி இருதரப்பினரிடமும் பேசினோம்.

மணியரசன்
மணியரசன்
`மக்கள் ஆதரவு இல்லாததாலேயே தி.மு.கவின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது!' - வானதி சீனிவாசன்

தமிழ்த் தேசிய பேரியகத்தின் தலைவர் பெ. மணியரசன் பேசுகையில், "பா.ஜ.க மற்றும் மோடியின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் அடையாளபூர்வமானது மட்டுமே. மத்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி மையத்திற்கு இயக்குநரைகூட நியமிக்காமல்தான் இன்னும் இருக்கின்றனர். இவர்கள் புதிதாகச் செய்வது இருக்கட்டும். ஏற்கெனவே சட்டத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி பார்ப்போம். அரசியலமைப்புச் சட்டத்தின் 348 -வது பிரிவு, மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அந்தந்த மாநில மொழியை வைக்கலாம் எனக் கூறியுள்ளது. இது தொடர்பான மாநில அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தாலே போதும். ஆனால் அதைச் செய்யாமல், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்க மத்திய அரசு அனுப்பியது, இது சட்டத்திலே இல்லாத ஒன்று. 1976-ம் ஆண்டில் மத்திய அரசு அலுவல் மொழி சட்டத்திருத்தத்தின்படி, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாம் என்றுள்ளது. அதையும் அவர்கள் செய்யவில்லை.

ஸ்வச் பாரத், சர்வ சிக்ஷ அபியன் மாதிரியான திட்டங்களின் பெயரை தமிழ்நாட்டில் தமிழில் பயன்படுத்தினால், மத்திய அரசு மானியம் கிடையாது என்று இருக்கிறது. 2011- மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 25,000 பேர்தான் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆனால், மத்திய அரசு, சமஸ்கிருத வாரம், இந்தி வாரம் மட்டும் கொண்டாடி அம்மொழிகளின் வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துவருகிறது. அனைத்து அட்டவணை மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், இரண்டு மொழிகளுக்கு மட்டுமே இன்று வரை முக்கியத்துவம் தரப்படுகிறது. சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் ஆச்சர்யத்தைவிடவும் அச்சத்தையே தருகின்றன. இந்தித் திணிப்பு அப்பட்டமாக நடந்துவருகிறது. திரைக்குப் பின்னால் இவர்கள் எதை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை" என்றார்.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்
‘நவம்பர் 9’ அயோத்தி தீர்ப்பும்... பெர்லின் சுவர் வீழ்ச்சியும் - உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மோடி!

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஶ்ரீனிவாசன் பேசுகையில், "தமிழர் நலம் மீது பா.ஜ.க -விற்கு என்றுமே அக்கறை உண்டு. குமரியில் திருவள்ளுவருக்கு சிலைவைக்க வேண்டும் என்கிற திட்டத்தை முதலில் முன்மொழிந்தவர் ஆர்.எஸ்.எஸ்- ஐ சேர்ந்த ஏக்நாத் ரனடேதான். அமித் ஷா சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை. அதில் அவர் பின்வாங்கவும் இல்லை. இந்தியர்கள் தங்களுக்குள்ளாகப் பேசுகையில் இந்தியைப் பயன்படுத்துங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். இந்தி வாரம் என்பது ஆட்சிமொழி வாரம். மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி இருப்பதால், மத்திய அரசு இந்தி மொழியைக் கொண்டாடுகிறது. மாநில அரசுகள் அவர்களின் ஆட்சி மொழிக்கு வாரம் கொண்டாடலாம். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே, திருக்குறள் குஜராத்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. தமிழ் மீது பா.ஜ.க-விற்கு அக்கறை இல்லை என்பது தவறான கருத்து" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு