Published:Updated:

நியூசிலாந்தில் முதன்முறை: அமைச்சரவையில் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன்!

பிரியங்கா ராதாகிருஷ்ணன்
பிரியங்கா ராதாகிருஷ்ணன்

நியூசிலாந்து நாட்டில், முதன்முறையாக இந்திய வம்சாவளிப் பெண்ணான பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நியூசிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்தவர் அமைச்சர் பதவிக்கு வருவது இதுவே முதன்முறை.

நியூசிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டுப் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றிருக்கிறார்.

பிரதமர் ஜெசிந்தா முதல்கட்டமாக ஐந்து அமைச்சர்களுடன் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். இதுவரை, இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட யாரும் நியூசிலாந்து அரசில் அமைச்சராக இருந்ததில்லை என்ற நிலையில், ஜெசிந்தாவின் புதிய அமைச்சரவையில் இந்தியாவைப் பூர்வீமாகக்கொண்ட, சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

யார் இந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்?

1979-ம் ஆண்டு சென்னையில், மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். சென்னையில் பிறந்து, சில ஆண்டுகள் அங்கேயே வளர்ந்த பிரியங்கா, அதன் பிறகு குடும்பத்தோடு சிங்கப்பூருக்குச் சென்றார்.

பிரியங்கா ராதாகிருஷ்ணன்
பிரியங்கா ராதாகிருஷ்ணன்

சிங்கப்பூரில் தன் பள்ளிப்படிப்பை முடித்த பிரியங்கா, மேற்படிப்புக்காக நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். அங்கு சென்று வெலிங்டனிலுள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார் பிரியங்கா.

நியூசிலாந்தில் பட்டப்படிப்பு முடித்த பிரியங்கா, வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆதரவற்ற மக்கள் என அனைவருக்கும் ஆதரவுக் குரலாக வாதிடுவதையே தனது பணியாகத் தேர்வு செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்.

கேரள மாநிலத்தின் தீவிர இடதுசாரி இயக்கத்திலும், கேரள மாநிலம் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றிய தன் கொள்ளுத் தாத்தாவால் ஏற்பட்ட தாக்கத்தில் 2006-ம் ஆண்டு நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் இணைந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன், கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் மவுங்காகேக்கி தொகுதியில் போட்டியிட்டார்.

தொடர்ந்து, 2019-ம் ஆண்டில் சமூகங்களுக்கான துறையின் தனியார் செயலாளராக நியமிக்கப்பட்டார் பிரியங்கா. அந்தப் பகுதியில் அவர் செய்த பணிகள், பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் இன சமூகங்களுக்கான அமைச்சரின் புதிய பாத்திரத்துக்கான தளத்தை உருவாக்க உதவின. இது தவிர, அவர் சமூக மற்றும் தன்னார்வத்துறை அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சராகவும் பதவிவகித்தார்.

பிரியங்கா
பிரியங்கா

இந்தநிலையில், 2020-ம் ஆண்டில் சமூகம் மற்றும் தன்னார்வத்துறை, பன்முகத்துறை, இன விவகாரத்துறை, இளைஞர் நலத்துறை, சமூக நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகியவற்றின் அமைச்சராக பிரியங்காவை நியமித்திருக்கிறார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

புதிய அமைச்சர்களின் பெயர்களை அறிவித்த பிரதமர் ஜெசிந்தா, ``திறமையான புதிய நபர்களை அமைச்சராக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய துறைகளில் பணிபுரியும் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்" என்றார்.

பிரியங்கா
பிரியங்கா

மேலும், ``நாட்டின் பொதுத் தேர்தலில் எமது தொழிலாளர் கட்சி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்த அமைச்சரவை தகுதியையும், நிர்வாகத்திறனையும் கொண்ட அமைச்சரவை. புதிய நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்பார்கள். அதைத் தொடர்ந்து அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும்" என்றார்.

``புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படாவிட்டால் நிச்சயம் அதற்கேற்ப பதவி பறிக்கப்படும்” என்றும் பிரதமர் எச்சரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு