Published:Updated:

`அரசு பங்களாவைக் காலிசெய்ய நோட்டீஸ்!’ - நிலுவைத் தொகையை செலுத்திய பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

உ.பி சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பிரியங்கா, லக்னோவுக்கு குடிபெயர்வார் என்ற தகவலும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தான் தங்கியிருந்த அரசு பங்களாவுக்கான வாடகைத் தொகையை ஆன்லைனில் செலுத்தி உள்ளார். பிரியங்கா காந்திக்கு 1997-ம் ஆண்டு சிறப்புப் பாதுகாப்புப்படை காவல் (Special Protection Group) வழங்கப்பட்டது. அப்போது, டெல்லியில் உள்ள எண் 35,லோதி பங்களாவும் இதனுடன் அளிக்கப்பட்டது. அங்கு, பிரியங்கா காந்தி பிப்ரவரி 21, 1997-ம் தேதி முதல் வசித்து வருகிறார். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு, பிரியங்கா காந்தி அவர் தாய் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புப் பாதுகாப்புப் படை காவலை நீக்கியது. அதற்குப் பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியது.

ஆனால், Z ப்ளஸ் பாதுகாப்பின் கீழ் அரசு பங்களா வழங்கப்படாது. இதிலும், விடுதிகள் தொடர்பான அமைச்சரவை குழுவின் (Cabinet Committee on Accommodation - CCA) ஒப்புதல் படியே விதிவிலக்கு அளிக்கப்படும். இதற்குத் தகுந்த பாதுகாப்பு காரணங்களை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் 07.12.2000-ம் ஆண்டு நடந்த விடுதிகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, `சிறப்புப் பாதுகாப்புப் படை காவல் வழங்கப்படாத நபர்கள், பாதுகாப்பின் பேரில் அரசு பங்களாவைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு சந்தை விலையைவிட 50 மடங்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படும்’ என முடிவெடுக்கப்பட்டது. ஆனால். இந்த முடிவானது 2015-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசால்தான் அதிகாரபூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இந்நிலையில் சிறப்பு பாதுகாப்புப் படையின் காவல் விலக்கப்பட்டதால், பிரியங்கா காந்திக்கு எஸ்டேட் துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதன்படி, 1.7.2020 முதல் அரசாங்க விடுதிக்கான வசதி வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், விதிகளின்படி ஒரு மாத அவகாச காலமாக 1.8.2020 வரை வாடகை செலுத்தி இருக்கலாம் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு மேல் இருந்தால் கூடுதல் அபராதம் செலுத்த வேண்டிய நிலை வரும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தற்போது, பிரியங்கா காந்தி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான 3,46,667-ஐ செலுத்தி உள்ளார். இதனை வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். `பிரியங்கா காந்தி, 30.06 2020 வரை செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தி விட்டார்’ என்று அவர் கூறினார்.

தற்போது, ஒரு மாதத்திலேயே பிரியங்கா காந்தி லோதி பங்களாவை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. `இதே, பி.ஜே.பி அரசு எந்த நாடாளுமன்ற பதவியும் வகிக்காத அத்வானிக்கு வாழ்நாள் முழுமைக்கும் அரசு பங்களாவில் வசிக்க அனுமதி அளித்துள்ளது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் மற்றொரு பி.ஜே.பி தலைவரான முரளி மனோகர் ஜோஷிக்கும் ஜூன் 25, 2022 வரை அரசு பங்களாவைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சிறப்புப் பாதுகாப்புப்படை காவல் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்வானி
அத்வானி

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங்,``மத்திய அரசு, பிரியங்கா காந்தி சிறப்புப் பாதுகாப்புப்படை காவலை திரும்ப வழங்க வேண்டும். இதோடு, திரும்ப பெறப்பட்ட அரசு பங்களாவுக்கான ஒதுக்கீட்டையும் பாதுகாப்பின் பேரில் பிரியங்கா காந்தி குடும்பத்துக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ``பிஜேபி அரசுக்கு காங்கிரஸ் தலைமையின் மீது இருக்கும் வெறுப்புணர்வும் கசப்பும் இதன் மூலம் வெளிப்படுகிறது. அரசு பங்களாவைக் காலி செய்யுமாறு வழங்கப்பட்ட நோட்டீஸானது பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் மனநிலையே விளக்குகிறது. சர்வாதிகார அரசின் விரக்தியடைந்த முடிவுகளைக் கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்’’ என்றார். இந்தநிலையில், உ.பி சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பிரியங்கா, லக்னோவுக்கு குடிபெயர்வார் என்ற தகவலும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு உ.பி சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா கடும் சவால் அளிப்பார் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு