Published:Updated:

`கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் கண்டித்திருப்பார்!'- கொந்தளித்த ஆதித்தமிழர் கட்சித் தலைவர்

ஆதித்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ஆதித்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

`கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் இந்த நிகழ்வைக் கண்டித்திருப்பார்' என்று ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

தி.மு.க எம்.பியும் அமைப்புச் செயலாளருமான ஆர்எஸ் பாரதியின் பேச்சைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் கல்யாண சுந்தரம் பேசுகையில், ``தி.மு.க-வுக்கு ஆதரவாக இருந்த தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை தி.மு.க நிர்வாகி கேவலமான வார்த்தைகளால் பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால், இந்த நிகழ்வைக் கண்டித்திருப்பார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து மன்னிப்பு கேட்க வைத்து தலித் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பார்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. எதுவும் நடக்காததுபோல் காட்டிக்கொண்டிருக்கிறார். அவரின் இத்தகைய செயல்பாடு தலித், தாழ்த்தப்பட்ட மக்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை தி.மு.க காப்பாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுவதும் போய்விட்டது. மேலும், பத்திரிகை மீடியாக்களையும் அவதூறாக கேவலமான வார்த்தைகளால் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும். அவரை போலீஸார் கைது செய்ய வேண்டும்’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் மாறன், துணைப் பொதுச்செயலாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ராமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் புகாரளித்தார். அதன்பேரில் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு