Published:Updated:

`மருத்துவக் கல்லூரி; தனி மாவட்டம்!' - அமைச்சர் ஓ.எஸ்.மணியனைப் பதறவைத்த மயிலாடுதுறை எதிர்ப்பு

அமைச்சருக்கு எதிர்ப்பு
அமைச்சருக்கு எதிர்ப்பு

மயிலாடுதுறைக்கு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று வருகை தந்தார். இதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை முற்றுகையிட்டு கண்டன குரல் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலைமை மோசமானதும் போலீஸார் அமைச்சரை பாதுகாப்பாக மாற்று வழியில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை அருகே நீடுரில் அமைக்க நீடூர் அரபிக் கல்லூரி அறக்கட்டளை இலவசமாக 22 ஏக்கர் நிலம் கொடுத்தது. இருப்பினும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை அருகே ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரியை அமைப்பதில் தீவிரமாக உள்ளார். ஓ.எஸ்.மணியன் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கெனவே பதவி வகித்திருக்கிறார். நாகையில் மருத்துவக் கல்லூரியை அமைக்க முயன்றுவரும் அமைச்சருக்கு மயிலாடுதுறை பகுதியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்த முடிவை எதிர்த்து மயிலாடுதுறையில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தி.மு.க சார்பில் இப்பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று நீடூர் பகுதிக்கு வந்தார். அவரை எதிர்த்து கண்டனப் போராட்டம் நடத்த பொதுமக்கள் திரண்டனர்.

அமைச்சருக்கு எதிர்ப்பு
அமைச்சருக்கு எதிர்ப்பு

தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் போலீஸார் போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாகனம் வேறுபாதை வழியாகத் திருப்பி விடப்பட்டது.

இதைக் கண்ட போராட்டக்காரர்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வந்த பாதையை நோக்கிச் சென்று போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், அவர்களை மயிலாடுதுறை பள்ளிவாசல் அருகே போலீஸார் சுற்றிவளைத்து தடுத்து நிறுத்தினர்.

அமைச்சருக்கு எதிர்ப்பு
அமைச்சருக்கு எதிர்ப்பு

ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள், மருத்துவக் கல்லூரி, மயிலாடுதுறை தனி மாவட்டம் எனப் பல்வேறு விவகாரங்களில் அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறி அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மாற்று வழியில் சென்று மற்ற பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அடுத்த கட்டுரைக்கு