Published:Updated:

ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத அனுமதி கேட்கும் வேதாந்தா! - கொந்தளிக்கும் போராட்டக்குழுவினர்

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி கூடுதல் அவகாசம் கேட்டால் அனுமதி அளிக்கக் கூடாது’’ என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடியில், `வேந்தாந்தா’வின் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசு, ஆலையை சீல் வைத்து மூடியது. தொடர்ந்து, ஆலையைத் திறக்க நீதிமன்றங்களின் கதவுகளைப் பலமுறை தட்டியும், `ஆலையை திறக்கக் கூடாது’ என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்துவருகிறது. இந்தநிலையில், தற்போதைய கொரோனா இரண்டாவது அலையாக கோரத் தாண்டவம் ஆடிவந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. பல தனியார் அமைப்புகள் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கிவந்தன.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இந்தநிலையில், ’ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாகத் தரத் தயாராக இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியதுடன், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தது வேதாந்தா. பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்துவந்ததால், வேதாந்தாவின் நீதிமன்ற முறையீடு கவனம்பெற்றது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. ஆட்சியரின் முன்பே ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டனர். கல்வீச்சுத் தாக்குதலும் நடந்தது. ``ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க 95 சதவிகிதம் மக்களின் எதிர்ப்பு உள்ளது” என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டது. இதையடுத்து, அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி யூனிட்
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி யூனிட்

அதில், ’ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கலாம்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழக அரசும் அனுமதி அளித்தது. அத்துடன், உச்ச நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதி அளித்ததுடன் ஐந்து பேர் கொண்ட நிபுணர்குழுவுடன், மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஸ்டெர்லைட் போராளிகளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த மே 5-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆலையிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, இதுவரை சுமார் 650 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனும், 350 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூலை 31-ம் தேதியுடன், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடையவிருக்கிறது. இந்தநிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் ஆறு மாதங்கள் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது வேதாந்தா.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த எதிர்ப்பு போராளிகள்
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த எதிர்ப்பு போராளிகள்

இதையடுத்து, மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி கூடுதல் அவகாசம் கேட்டால் அனுமதி அளிக்கக் கூடாது” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``காற்றையும் மண்ணையும் நச்சாக்கிய இந்த ஆலை, ஆயிரக்கணக்கான மக்கள் போராடியும், 13 பேர் உயிரை பலி கொடுத்த பிறகும்தான் மூடப்பட்டிருக்கு.

‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை’ என முந்தைய ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரே கூறிவந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மூடிக் கிடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்ததே தவறானது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுத்தது, அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்குச் செய்த பச்சைத் துரோகம். சரி, அனுமதி கொடுத்தது கொடுத்துவிட்டார்கள். தற்போது கொரோனா இரண்டாவது அலையின் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக தற்போதைய ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிவருகிறார். ஆக்சிஜன் அதிகம் தேவையில்லாத தற்போதைய சூழலில், ஆக்சிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் கூடுதலாக ஆறு மாதங்கள் அனுமதி கேட்டிருக்கிறது வேதாந்தா நிறுவனம்.

மாவட்ட ஆட்சிரிடம் மனு அளித்த எதிர்ப்பு  போராளிகள்
மாவட்ட ஆட்சிரிடம் மனு அளித்த எதிர்ப்பு போராளிகள்

படிப்படியா காப்பர் உற்பத்தியை ஆரம்பிக்கணும்கிறதுதான் அவர்களின் நோக்கம். வரும் ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு எந்தவொரு காரணத்தைக் காட்டியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அப்படி அனுமதி அளித்தால், மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும். இதே ஆலைக்கு அனுமதி கொடுத்து, அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்ததும் அதே அரசியல் கட்சிகள்தான். அதற்குப் பிறகு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தினார்கள். தற்போது ஒன்று சேர்ந்துகொண்டார்கள். கட்சிகளை நம்பியோ, அவர்களின் ஒத்துழைப்புடனோ இந்த ஆலைக்கு எதிராக நாங்கள் போராடவில்லை.

தூத்துக்குடி மக்களின் பாதுகாப்புக்காக சைக்கிள் பேரணியாகச் சென்று முதல்வரைச் சந்திக்கவிருக்கிறோம். நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, அன்று ஸ்டெர்லைட் ஆலைத் திறப்பை ஆதரித்த தி.மு.க., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள், இன்று தாமாக முன்வந்து சட்டரீதியாகவும், களத்தில் நின்றும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கப்போகிறார்களா அல்லது அமைதிகாத்து வேதாந்தாவுக்கு விலை போகப் போகிறார்களா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பில் பேசினோம். ``கொரோனா தொற்று பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், மருத்துவ சிகிச்சைக்காக ஆக்சிஜன் தேவை இருக்கத்தான் செய்கிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த எதிர்ப்பு போராளிகள்
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த எதிர்ப்பு போராளிகள்

பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக உதவிடும் வகையில்தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க அரசுகளிடமும், நீதிமன்றத்திடமும் அனுமதி கேட்டோம். மிகுந்த சிரமமான சூழலில் மக்களின் சிகிச்சைக்காக உதவும் ஒரு வாய்ப்பாகவே இதை நினைக்கிறோம். ஆக்சிஜன் உற்பத்தி மட்டும்தான் எங்களின் இலக்கு. எங்களின் இலக்கான 1,000 மெட்ரிக் டன் உற்பத்தியை அடுத்த சில நாள்களில் எட்டி விடுவோம். ஆலையை மீண்டும் திறப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம். குறுக்குவழியில்தான் ஆலையைத் திறக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்குக் கிடையாது” என்றனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஒரே நாளில் கோரிக்கையை ஏற்று  பணிநியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்
அடுத்த கட்டுரைக்கு