Published:Updated:

`கேட்கக்கூடாத வார்த்தைகளைக் கேட்டுவிட்டேன்!'- தி.மு.க-வில் இணைந்த பி.டி.அரசகுமார்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துகொண்டார் தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார்.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

புதுக்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழா அண்மையில் நடந்தது. இதில், தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசியவர், ``உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே இரவில் கூவத்தூர் விடுதிக்குள் புகுந்து முதல்வர் பதவியைத் தட்டிப் பறித்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. காரணம், அவர் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயகத்தின் வாயிலாகப் பெற வேண்டும் எனப் பொறுமையைக் கடைப்பிடித்து வருகிறார். அவர் முதல்வராகும் திருநாள் அரங்கேறப்போகிறது" என்றார்.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க நீடித்துவரும் சூழலில், பி.டி.அரசகுமாரின் பேச்சு அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் நரேந்திரன் அகில இந்தியத் தலைமைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், `பி.டி அரசகுமாரின் பேச்சு கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் மீறும் செயல். தேசிய தலைமையிலிருந்து தகவல் வரும் வரையிலும் அவர் எந்தவித பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளகூடாது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

`சிக்கவைக்க சதி..  விளக்கமளித்தேன்!' -ஸ்டாலினைப் புகழ்ந்தது குறித்து பி.டி.அரசகுமார்

இந்தநிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துகொண்டார் பி.டி.அரசகுமார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ``புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் நான் வெளிப்படுத்தினேன். ஸ்டாலின் குறித்து பேசியதற்காக, என் வாழ்நாளில் கேட்கக்கூடாத வார்த்தைகளை எதிர்கொண்டேன்.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

மனம் சோர்ந்து இருந்த நேரத்தில் தற்போது தி.மு.க-வில் இணைந்துள்ளேன். இன்னும் சில காலத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமையும். அதற்காக நான் உழைப்பேன். பா.ஜ.க தேசிய தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை. தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ளேன்'' என்றார்.

`தலைமைக்குக் கடிதம்; கூட்டங்களுக்குத் தடை!' -அரசகுமாருக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழக பா.ஜ.க