Published:Updated:

மதுரை: குடியுரிமை பற்றிய கேள்வி... பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டமான பதில்!

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

``குடியுரிமை விவரம் பற்றி ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற விண்ணப்பித்துள்ளேன். அதில் இது தெரியவந்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்."

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு இடையேயான கருத்து மோதல் திடீரென்று முடிவுக்கு வந்துள்ளது.

இனி, ஜக்கி வாசுதேவ் பற்றிப் பேசுவதாக இல்லை என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், அறநிலையத்துறையில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று ஜக்கி வாசுதேவும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

பி.டி.ஆர்.தியாகராஜன்
பி.டி.ஆர்.தியாகராஜன்

இந்தநிலையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் குடியுரிமை பற்றி ஹெச்.ராஜா பிரச்னையை கிளப்பியிருப்பதும், அதற்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதிலும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

சில நாள்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேட்டி அளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முட்டாள்தனமானது. இந்தக் கோரிக்கையை விடுப்பவர்கள் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க நினைப்பவர்கள். இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கும் ஜக்கி வாசுதேவ் ஒரு விளம்பரப் பிரியர்.

இந்தப் பிரச்னையை வைத்து பணம் சம்பாதிக்க மற்றொரு வழியைப் பார்க்கிறார். கடவுளை மட்டும் நினைக்கும் ஒருவர் எப்படி சிவராத்திரி விழாவுக்கு ஐந்து லட்சம், ஐம்பதாயிரம் என்று டிக்கெட் விற்பனை செய்ய முடியும்? ஜக்கி வாசுதேவ் தன் வணிகச் செயல்பாட்டுக்கு மதத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்" என்று காட்டமாகப் பேட்டி அளித்திருந்தார்.

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜக்கி வாசுதேவின் ஆதரவாளர்களும், பா.ஜ.க-வினரும் சமூக ஊடகத்தில் பி.டி.ஆருக்கு எதிர்வினை ஆற்ற ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு எதிராக தி.மு.க-வினரும் எதிர்வினை ஆற்றினார்கள்.

அதில் பா.ஜ.க ஆதரவாளர்கள், 'பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவர் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர். தேர்தலில் நின்றதே குற்றம்...' என்ற ரீதியில் கருத்துகளைப் பதிவு செய்ய, இந்தப் பிரச்னை மீண்டும் பரபரப்பானது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஹெச்.ராஜா, "கோயில் ஆக்கிரமிப்புகளைப் பற்றிக் கேள்வி கேட்ட சத்குருவை பி.டி.ஆர்.தியாகராஜன் மிரட்டுகிறார். காருண்யாவுக்கு எதிராகப் பேச எந்த அமைச்சருக்காவது முதுகெலும்பு உள்ளதா... மீனாட்சியம்மன் கோயில் சொத்துகளை மீட்பேன் என்று பி.டி.ஆர்.தியாகராஜனால் சொல்ல முடியுமா? இந்து சாதுக்கள், சந்நியாசிகளைப் பற்றி யார் விமர்சித்துப் பேசினாலும் அவர்களின் பின்னணி கிளறப்படும்" என்று ஒரு மாதிரி பொடிவைத்துப் பேசியிருக்கிறார்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், "ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் வேலையல்ல. அதைப் பற்றி இனி பேச மாட்டேன். ஜக்கி வாசுதேவ் பற்றி எந்தவொரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. முதலமைச்சரின் வழிக்காட்டுதலில், மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்போகிறேன்" என்று பழனிவேல் தியாகராஜன், விரிவாக தனது கருத்தைக் கடந்த 19-ம் தேதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜக்கி வாசுதேவும் அறநிலையத்துறையில் தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

பிரச்னை இப்படிச் சுமுகமாகப் போன நிலையில், 'பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வெளிநாட்டு குடியுரிமை பற்றிய பின்னணி விசாரிக்கப்படுவதால், ஜக்கி வாசுதேவுக்கு எதிரான விஷயத்தில் பின்வாங்கிவிட்டார். அவர் இந்தியக் குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ளார். அவர் OCI CARD HOLDER. அவர் நம் நாட்டுத் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படி இருக்கும்போது எப்படி போட்டியிட்டார்? இதுபோல் ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது' என்று பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தார்கள்.

இது பற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் முத்துக்குமார், "இவருடைய குடியுரிமை விவரம் பற்றி ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற விண்ணப்பித்துள்ளேன். அதில் இது தெரியவந்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்" என்றார்.

பி.டி.ஆர்.தியாகராஜனின் ட்வீட்
பி.டி.ஆர்.தியாகராஜனின் ட்வீட்

குடியுரிமை பற்றிச் சந்தேகம் தெரிவித்து, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் கணக்கில் டேக் செய்தவருக்கு, "இந்த முட்டாள்களுக்கு மாட்டு மூத்திரம் குடித்துக் குடித்து பைத்தியம் பிடித்துவிட்டது. OCI, வாக்களிக்கக்கூட முடியாது விஞ்ஞானி..." என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இது பற்றி பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் நாம் தொடர்பு கொண்டதற்கு ட்விட்டரில் கூறியிருக்கும் பதிலை அனுப்பியவர், ''விரைவில் விரிவாக பதில் அளிக்கிறேன்" என்றும் தெரிவித்தார்.

அவ்வளவு சீக்கிரத்தில் இந்த விவகாரம் முடியாதுபோலிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு