Published:Updated:

புதுச்சேரி: ’அலுவலகம் செல்லாத 500 கல்வித்துறை ஊழியர்கள்!’- சம்பளத்தைப் பிடிக்கக் கோரிக்கை!

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

”புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களில் ஒருவர்கூட அலுவலகம் செல்லாத நிலையில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது”

புதுச்சேரியில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது அரசுத் துறைகள் 50% ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது புதுச்சேரி அரசு. அதன்படி சுகாதாரத்துறை, நகராட்சி, காவல்துறை, வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகள் தவிர்த்து அனைத்து அரசுத் துறைகளும் 50% ஊழியர்களுடன் செயல்பட்டு வந்தது. ஆனால் இந்தக் கால கட்டத்தில் ஒருநாள்கூட வேலைக்குச் செல்லாத கல்வித்துறை ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

புதுச்சேரி கல்வித்துறை
புதுச்சேரி கல்வித்துறை

இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், “புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த காலங்களில் நலவழித்துறை, நகராட்சிகள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை போன்ற முக்கியத் துறைகள் தவிர்த்து பிற துறைகள் அனைத்தும் 50 சதவிகித ஊழியர்களைக் கொண்டு சுழற்சி முறையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் எங்கள் அமைப்பின் சார்பில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒரு மனுவை அளித்தோம். 30 நாட்களுக்குள் அவர்கள் தகவல் தராததால் மேல் முறையீடு செய்தோம்.

அதனடிப்படையில் 18.06.2021 அன்று பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் ‘பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் 10.05.2021 முதல் 14.06.2021 வரை ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு காரணமாக முற்றிலும் மூடப்பட்டுவிட்டதால் உரிய காலத்தில் தகவல் தர இயலவில்லை’ என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் இந்த அலுவலகத்தில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த காலகட்டத்தில் ஒருநாள்கூட பணி புரியாத நிலையில் முழு ஊதியத்தையும் அரசு அளித்திருப்பது ஏற்புடையது இல்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் இயங்கிய நிலையில், கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களில் ஒருவர் கூட அலுவலகம் செல்லாத நிலையில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பொதுவாக ஏதோ ஒரு காரணத்திற்காக முழுமையாக செயல்படாத அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Lay Off அடிப்படையில் 50% ஊதியம் வழங்குவதுதான் வழக்கம்.

குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொரோனா காலத்தில் 50% ஊதியம்தான் வழங்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முழு ஊதியம் அளிக்கப்பட்டது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருக்கிறார். மேலும் ஊரடங்கு காலங்களில் ஏழை எளிய பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றவர்கள் வருமானமின்றி தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்தனர்.

`பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு; ஆன்லைன் மூலம் தேர்வு!’ - புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர்

அந்த நிலையில்கூட பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையோ, அறிவித்த நிவாரணத் தொகையையோகூட நிதிச் சிக்கலை காரணம் காட்டி வழங்கவில்லை. அப்படி இருக்கும்போது ஒருநாள்கூட வேலை செய்யாத கல்வித்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது எப்படி ? இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு ‘நாம் வேலை செய்யாவிட்டாலும்கூட சம்பளம் வந்துவிடும்’ என்ற எண்ணம் மேலோங்குமே தவிர வேலையின் மீதான நாட்டம் குறைந்துவிடும். அதனால் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தைப் போல ஊரடங்கு காலத்தில் முற்றிலும் செயல்படாத அரசுத் துறைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தில் 50 சதவிகிதத்தைப் பிடித்து அதனை கொரோனா நிவாரன நிதிக்கு பயன்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு