Published:Updated:

புதுச்சேரி: `பழுதாகி நின்ற லிஃப்ட்; சிக்கிக்கொண்ட முதல்வர், அமைச்சர்!’ -ஜிப்மரில் 20 நிமிட திக் திக்

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அமைச்சருடன் ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் நாராயணசாமி அங்கிருந்த லிஃப்டில் சிக்கிக்கொண்டார். 20 நிமிட போராட்டத்துக்குப் பிறகும் லிப்ஃடை சரிசெய்ய முடியாததால், அதை உடைத்து அவர்களை வெளியேற்றினார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தீவிரமாகப் பரவிவந்த கொரோனா தொற்று காரணமாக இதுவரை 612 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த சில நாள்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று மற்றும் இறப்பின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது சுகாதாரத்துறை. புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் அருண், சுகாதாரத்துறையின் செயலர் பொறுப்பையும் கூடுதலாக வகித்துவருகிறார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், விடுப்பில் சென்று வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறார். இந்தநிலையில் நேற்று மாலை முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் தலைமைச் செயலர் அஸ்வானி குமார் ஆகியோர் அவரை நலம் விசாரிப்பதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது ஆட்சியர் அருண் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி இணைப்பு - 2 கட்டத்தின் லிஃப்டில் ஏறினார்கள். ஆனால், சிறிது நேரத்தில் அந்த லிஃப்ட் பழுதாகி நின்றிருக்கிறது.

பொதுவாக மின்சாரம் தடை காரணமாக லிஃட் நின்றுவிட்டால் அது தானாகவே அடுத்த தளத்துக்குச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் லிஃப்ட் நகராமல் அதே இடத்தில் நின்றுவிட்டதால் முதல்வர், அமைச்சர், செயலர், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பதறிப்போனார்கள். மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொண்டது. அதன் பிறகு மருத்துவமனை ஊழியர்களும், லிஃப்ட் ஆபரேட்டர்களும் சுமார் 20 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் போராடி, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.

Vikatan

அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரை அழைத்த முதல்வர் நாராயணசாமி, பொதுமக்களும் நோயாளிகளும் பயன்படுத்தும் லிஃப்ட் விவகாரத்தில் பொறுப்பில்லாமல் இருக்கலாமா என்று டோஸ் விட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு