Published:Updated:

”பிரதமரும், உள்துறை அமைச்சரும் புதுச்சேரியைப் புறக்கணிக்கிறார்கள்!’' - முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``தேசத் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்களின் செல்போன்களெல்லாம் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கிற வேலை. தனிப்பட்ட ரகசியத்தைக் காப்பதைக் குழிதோண்டிப் புதைக்கிற வேலை.”

”பிரதமரும், உள்துறை அமைச்சரும் புதுச்சேரியைப் புறக்கணிக்கிறார்கள்!’' - முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

``தேசத் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்களின் செல்போன்களெல்லாம் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கிற வேலை. தனிப்பட்ட ரகசியத்தைக் காப்பதைக் குழிதோண்டிப் புதைக்கிற வேலை.”

Published:Updated:
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘``நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத காரணத்தால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விவாதம் இல்லாமல் அவசரச அவசரமாக மத்திய அரசு பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இஸ்ரேல் நிறுவனத்தின் என்.எஸ்.ஓ அமைப்பு பெகாசஸ் என்ற மின்பொருளை பல நாடுகளுக்குக் கொடுத்து, சுமார் 50,000 பேர்களுக்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை அதிகாரபூர்வமாக அந்தச் செய்தியை வெளியிட்டது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதை ஆதாரமாகவைத்து நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பெகாசஸ் மென்பொருளை இந்திய நாட்டுக்கு யாரிடம் கொடுத்தார்கள்... யார் அதை விலைக்கு வாங்கியது... அதற்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தம் உண்டா என்பது தொடர்பாக விளக்கத்தைச் சொல்ல வேண்டுமென்று கோரிக்கைவைத்து போராட்டம் நடத்தினர். ஆனால், மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு மத்திய ராணுவத்துறை இணை அமைச்சர், ``ராணுவத்துறை என்.எஸ்.ஓ அமைப்போடு எந்தவிதப் பணப் பரிவர்த்தனையும் வைத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அந்த மென்பொருளைப் பெறவில்லை’’ என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் உள்துறை, வெளியுறவுத்துறை, தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தினார்களா... அதற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது என்பதற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்று பதில் அளிக்க வேண்டுமென கோரிக்கைவைத்தார்கள். ஆனால் பிரதமர், உள்துறை அமைச்சர் இருவரும் இன்றுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்து தெளிவாக இந்திய அரசு, பிரதமர் உத்தரவின் பேரிலும், உள்துறை அமைச்சரின் மேற்பார்வையின் பேரிலும் தேசத் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்களின் செல்போன்களெல்லாம் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கிற வேலை. தனிப்பட்ட ரகசியத்தைக் காப்பதைக் குழிதோண்டிப் புதைக்கிற வேலை. இது மிகப்பெரிய தேச குற்றம். இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் இருவரும் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

பெகாசஸ் ஸ்பைவேர்
பெகாசஸ் ஸ்பைவேர்

நாடாளுமன்றத்தில் அள்ளித் தெளித்த கோலம்போல அவசர அவசரமாக கடல் மீன்வள மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மீனவ சமுதாயத்தினர் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது. மீனவர்களின் மடியில் கையைவைக்கிற இந்த மத்திய அரசு, தூக்கி எறியப்பட வேண்டும். நரேந்திர மோடி அரசு சர்வாதிகாரமாக மீனவர்களின் வாழ்வாரத்தைக் குறைக்கும் வகையில் இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மீனவர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்க அமைச்சரவையில் முடிவெடுத்து, அரசு ஆணையாக வெளியிட்டோம். ஆனால், அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதைத் தடுத்து நிறுத்தினார். மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் தரவில்லை. பிறகு நீதிமன்றம் சென்றோம். தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசிடமிருந்து பெற முயற்சி எடுக்க வேண்டும். பட்ஜெட்டுக்கான கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். தேர்தல் நேரத்தில், `ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம், 15-வது நிதி கமிஷனில் இணைப்போம், கடனை ரத்து செய்வோம், பஞ்சாலைகளை திறப்போம், தேவையான நிதி பெறுவோம்’ என்று வாக்குறுதி தந்தனர். மக்களும் நம்பி வாக்களித்தனர்.

மாநில அந்தஸ்துக்காகத்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கிறோம் என்று கூறிய ரங்கசாமி மெளனம் காக்கிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்... கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதலுக்கான கோப்புகள் ஒரு மாதம் மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அதே நிலை முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்பட்டுள்ளது. மாற்றமில்லை. எங்கள் ஆட்சியை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்ததுபோலவேதான் தற்போதைய ஆட்சியையும் புறக்கணிக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் புதுச்சேரியைப் புறக்கணிக்கிறார்கள். மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஏற்க மாட்டோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism