Published:Updated:

“புதுச்சேரியில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது!”

தி.மு.க முன்னாள் அமைச்சர் நாஜிம் அதிரடி...

பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரியில் நான்கு முறை ஆட்சியமைத்த தி.மு.க., அதன் பிறகு கடந்த 24 வருடங்களாக வனவாசத்தில் இருக்கிறது. 1996-ல் முதல்வராக இருந்த ஆர்.வி.ஜானகிராமனுக்குப் பிறகு, அந்தக் கட்சி அரியணையை நினைத்துக்கூடப் பார்க்க முடிய வில்லை. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்பதற்குக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸே காரணம் என்றெல்லாம் உடன்பிறப்புகள் புலம்பியதை, தனிப்புத்தகமாகவே எழுதலாம். காரைக்காலில் 25 வருடங்கள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி்பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ஏ.எம்.ஹெச்.நாஜிம், கடந்த தேர்தலில் வெறும் 20 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். முத்தியால்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் தோற்கடிக்கப்பட்டார். இவையெல்லாம் சில உதாரணங்கள்... இதனாலேயே வரும் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸைக் கழற்றிவிடலாமா என்று யோசிக்கிறது தி.மு.க. இப்படியான சூழலில்தான் முன்னாள் அமைச்சரும், புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளர்களில் ஒருவருமான ஏ.எம்.ஹெச்.நாஜிமைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“புதுச்சேரியில் இதுவரை காங்கிரஸ் கூட்டணியால் தி.மு.க கற்ற படிப்பினை என்ன?”

“தலைவர் கலைஞர் எந்தக் கட்சியுடன் கூட்டணிவைத்தாலும், செயல்திட்டம் ஒன்றை வகுப்பார். தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு, ஆட்சியில் பங்கேற்பு ஆகியவை அதிலிருக்கும். இதில் கண்ணியமும் சத்தியமும் மரபாகப் பின்பற்றப்பட்டுவந்தன. ஆனால், சமீபகாலமாகக் கூட்டணி தர்மம் கற்பித்த பாடங்களை நன்றாகவே உணர்ந்துவிட்டோம். புதுவையைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை!”

“மக்களுக்குப் பயனில்லாத ஆட்சிக்கு தி.மு.க துணை நிற்பது ஏன்?”

“கலைஞர் அடிக்கடி ‘உறவுக்குக் கை கொடுப்போம்... உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்பார். எந்த ஆட்சிக் கலைப்புக்கும் தி.மு.க துணைபோனதில்லை. அதேநேரத்தில், ஆளுங் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பாமல் இருந்ததில்லை. நாங்கள் என்ன பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியா... அ.தி.மு.க. போல அடிமையாக இருப்பதற்கு? புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்தியது, கொரோனாவிலும் பள்ளிகளைத் திறந்தது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறோம்.”

நாஜிம்
நாஜிம்

“முதல்வர் நாராயணசாமி, ‘துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் செயல்பாடுகளால்தான் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை’ என்று கூறுவது பற்றி..?”

“இரண்டு பக்கமும் தவறுகள் இருக்கின்றன. இதனால் புதுவை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.”

“கடந்த 2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவர்கள் சிலர் தோற்கடிக்கப்பட்டிருக்கி றார்கள். 25 வருடங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற நீங்களும்கூட சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக் கிறீர்கள். என்ன காரணம்?”

“யார் எங்களை உடனிருந்து சாய்த்தார்கள் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள். எங்களைத் தோற்கடிக்கலாம்... ஆனால், ஒருபோதும் தி.மு.க-வைத் தோற்கடிக்க முடியாது. 2016 தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியமைக்க தி.மு.க அஸ்திவாரமாக இருந்தது. நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமியை வெற்றிபெறவைத்து அவரை முதல்வராக்கினோம். காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸைக் கரையேற்றினோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை அமோக வெற்றிபெற வைத்தோம். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளர் வெங்கடேசன் வெற்றிபெற்றிருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில், புதுச்சேரியில் தி.மு.க அமோகமாக வெற்றிபெறுவதற்கான அச்சாரம் இது.”

“2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க தனித்துப் போட்டியிடுமா, கூட்டணி அமைக்குமா?”

“காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது. அ.தி.மு.க., காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுடன் தேர்தல் களம் காண தி.மு.க. தயாராகிவருகிறது. இது குறித்து புதுவை மாநிலத் தேர்தல் பார்வையாளர் ஜெகத்ரட்சகனிடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்.”

“ஆனால், புதுவை அரசியல்வாதிகள் காலையில் ஒரு கட்சி... மாலையில் ஒரு கட்சி... என்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டேயிருக்கும் நிலையில் தி.மு.க ஆட்சி அமைப்பது சாத்தியமா?”

“1983-லிருந்து இன்றுவரை தி.மு.க தொண்டனாக இருக்கிறேன். என்னைப் போலப் பலரும் இருக்கிறார்கள். இன்று எம்.எல்.ஏ-க்களாக உள்ள கமலக்கண்ணன், ஜான்குமார், ஜெயமூர்த்தி, பாலன், நமச்சிவாயம் ஆகியோரெல்லாம் தி.மு.க-வில் தங்களை வளர்த்துக் கொண்டு, இன்று வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தாய்க் கட்சிக்குத் திரும்பவும் வாய்ப்புள்ளது. எனவே, எங்கள் வெற்றியை எதுவும் பாதிக்காது.”

“புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறதா?”

“நல்ல அரசு என்பது மக்களுக்குத் தேர்தலில் தந்த வாக்குறுதியை நாணயத்துடன் காப்பாற்றுவது தான். செய்ய முடிந்ததைத்தான் வாக்குறுதியாகச் சொல்ல வேண்டும். அப்படி வாக்குறுதி தந்துவிட்டால், எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றிவிட வேண்டும். இதைத்தான் கலைஞர் ‘சொன் னதைச் செய்வோம்... செய்வதைச் சொல்வோம்’ என்றார். ஆனால், கலைஞரின் ஆசியால் அரியணை யேறிய புதுச்சேரி அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. அதனால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு அரியணையைத் தரும் மனநிலையில் இருக்கிறார்கள் புதுச்சேரி வாக்காளர்கள்.”

“என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தி.மு.க முயல்வதாகத் தகவல்கள் வருகின்றனவே..?”

“உண்மைதான். உடன்பட முன்வந்தால் தலைமைக்குச் சொல்வோம்.”

“ஆனால், கடந்த 24 வருடங்களாக தி.மு.க ஆட்சியமைக்க வில்லையே?”

“வெட்ட வெட்ட துளிர்ப்பதுதான் தி.மு.க-வின் இயல்பு. 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் ஆட்சியமைத்தே தீருவோம். அதுவே எங்களின் ஒரே இலக்கு. தமிழகத்தில் தளபதி அரியணையேறும் அதேநேரம் புதுச்சேரியிலும் தி.மு.க-வின் மகுடாபிஷேகம் நடக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு