Published:Updated:

அறிக்கை அரசியல் மட்டுமே செய்யும் எதிர்க்கட்சி! - புதுச்சேரியில் முடங்கிப்போனதா தி.மு.க?

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

தீபாவளிக்கு அரசு அறிவித்த இலவச அரிசி, சர்க்கரை, பொங்கல் பண்டிகைக்கு அறிவித்த பரிசுத் தொகுப்புகள் இன்னும் முழுமையாக மக்களுக்குச் சென்றடையவில்லை.

அறிக்கை அரசியல் மட்டுமே செய்யும் எதிர்க்கட்சி! - புதுச்சேரியில் முடங்கிப்போனதா தி.மு.க?

தீபாவளிக்கு அரசு அறிவித்த இலவச அரிசி, சர்க்கரை, பொங்கல் பண்டிகைக்கு அறிவித்த பரிசுத் தொகுப்புகள் இன்னும் முழுமையாக மக்களுக்குச் சென்றடையவில்லை.

Published:Updated:
புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் புதுச்சேரியில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க., மக்கள் பிரச்னைகள் எதற்குமே போராடாமல், வெறும் அறிக்கை அரசியல் மட்டுமே செய்து தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளைப் பெறும் கட்சியே, பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைப் பெறும். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி அவற்றுக்குத் தீர்வு காண்பதும், ஆளும் அரசின் மக்கள் விரோதப் போக்கைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. ஆனால், புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க., அதை மறந்துவிட்டு வெறும் அறிக்கை அரசியல் மட்டுமே செய்துகொண்டிருக்கிறது.

இது பற்றி நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி 2021 அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ததாக அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம். இதையடுத்து, ‘அரசிடம் கலந்தாலோசிக்காமல் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்த மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை அரசின் அனுமதியின்றி மாநில தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக ரத்துசெய்ய முடியாது என்பதுதான் உண்மை. அதனால், ‘அந்த அறிவிப்பின் பின்னணியில் அரசின் தலையீடு இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பியிருக்கவேண்டிய தி.மு.க., அமைதியாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது.

அறிக்கை அரசியல் மட்டுமே செய்யும் எதிர்க்கட்சி! - புதுச்சேரியில் முடங்கிப்போனதா தி.மு.க?

புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத்துறையின் தலைவராக முதல்வர்தான் இருப்பார். முந்தைய காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டபோது, அந்தப் பதவி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் சென்றது. தற்போதுவரை அதன் தலைவராக துணைநிலை ஆளுநரே இருப்பதால், அவர்தான் கொரோனா தொடர்பான அனைத்துக் கூட்டங்களையும் நடத்திவருகிறார். இது குறித்தும் தி.மு.க வாய்திறக்கவில்லை.

அரசின் ஹோலோகிராம் ஸ்டிக்கர்களை போலியாக அச்சடித்தும், கணக்கைக் குறைத்துக்காட்டியும் முறைகேடு செய்ததாக பிரீமியர் டிஸ்டில்லரீஸ் மற்றும் ரவிக்குமார் டிஸ்டில்லரீஸ் ஆகிய மதுபான நிறுவனங்களுக்கு சீல் வைத்து அதன் உரிமங்களை ரத்துசெய்த அன்றைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ‘இரு நிறுவனங்களும் சுமார் 282 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருக்கின்றன. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தார். ஆனால், புதிய அரசு அமைந்தவுடன் ரவிக்குமார் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை மட்டும் அபராதமாக விதித்துவிட்டு, செயல்பட அனுமதித்த கலால் துறை, பிரீமியர் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதற்கும் தயாராகிவருகிறது. இந்த விவகாரத்திலும் ‘கப்சிப்’ ஆகிவிட்டது தி.மு.க. இதேபோல ‘மக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத கட்டுமானம்’ என்று சொல்லி கிரண் பேடியால் சீல் வைக்கப்பட்ட இரண்டு ஜவுளி நிறுவனங்களுக்கும் இப்போதைய ஆளும் அரசு அனுமதி வழங்கிவிட்டது. இந்த விவகாரத்திலும் வேடிக்கை மட்டுமே பார்த்தது தி.மு.க.

அறிக்கை அரசியல் மட்டுமே செய்யும் எதிர்க்கட்சி! - புதுச்சேரியில் முடங்கிப்போனதா தி.மு.க?

தீபாவளிக்கு அரசு அறிவித்த இலவச அரிசி, சர்க்கரை, பொங்கல் பண்டிகைக்கு அறிவித்த பரிசுத் தொகுப்புகள் இன்னும் முழுமையாக மக்களுக்குச் சென்றடையவில்லை. நகர்ப்புற, கிராமப்புற சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இந்த விவகாரங்களில் களத்தில் இறங்கிப் போராடவேண்டிய தி.மு.க., வெறும் கண்டன அறிக்கைகளுடன் நிறுத்திக்கொள்கிறது. பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயத்தின் தொகுதியிலிருக்கும் அரசுப்பள்ளி வளாகத்தில் சிறுவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி கொடுத்த விவகாரத்தில், அந்த அறிக்கையைக்கூட வெளியிடவில்லை தி.மு.க. இதேபோல சபாநாயகர் செல்வம் மரபை மீறி பா.ஜ.க கட்சித் தலைவரைப்போல அரசியல் செய்துவரும் நிலையில், அதையும் கண்டிக்கவில்லை தி.மு.க’’ என்று பட்டியலிட்டவர்கள், ‘‘ஒருவேளை என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி உடைந்தால், என்.ஆர்.காங்கிரஸுடன் கைகோத்துவிடலாம் என்று தி.மு.க நினைக்கிறது. அந்தக் கட்சியின் மௌனத்துக்கு அதுதான் காரணம்’’ என்று உள்நோக்கத்தையும் சொன்னார்கள்!

சிவா
சிவா

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரான சிவா எம்.எல்.ஏ-விடம் விளக்கம் கேட்டோம். ‘‘புதிய அரசு பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் முடியும்வரை அரசுக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் நடத்த வேண்டாம் என்று எங்கள் தலைவர் அறிவுறுத்தியிருந்தார். அதேசமயம், அரசின் தவறுகளை அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டும்படி உத்தரவிட்டிருந்தார். அதைத்தான் நாங்கள் செய்துவந்தோம். இப்போது தலைமை எங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டது. பிப்ரவரி 23-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அன்று முதல் இந்த அரசு செய்துவரும் அனைத்து முறைகேடுகளையும் அம்பலப்படுத்துவோம்’’ என்றவரிடம், ‘‘என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இடம்பிடிக்கத்தான் தி.மு.க அமைதியாக இருக்கிறதா?’’ என்று கேட்டோம்... ‘‘அப்படியோர் எண்ணம் தி.மு.க-வுக்கு இல்லை’’ என்றார்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்


வள்ளுவரின் இந்தக் குறள், மன்னராட்சிக்கு மட்டுமல்ல... மக்களாட்சிக்கும் பொருந்தும் என்பதை உணருமா தி.மு.க?