இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறவிருப்பதால், நாடு முழுவதும் 200 நகரங்களில், பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்துவருகிறது. இதையொட்டி புதுவை மாநிலத்தில் ஜி20 தொடக்கநிலை மாநாடு இன்று தொடங்கியது. புதுவை 100 அடி சாலையிலுள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின்கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது.

மாநாட்டுக்கு இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமைவகித்தார். மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, இந்தோனேஷியா ஆகிய 11 நாடுகளிலிருந்து 15 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், இந்தியாவிலுள்ள பல ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 50 வல்லுநர்களும் பங்கேற்றனர். மாநாட்டில் மாற்று எரிசக்தி, உலகளாவிய சுகாதார வசதிகள், அறிவியலுடன் சமுதாயம், கலாசாரத்தை இணைப்பதற்கான திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுவருகிறது.
அறிவியலில் ஒருங்கிணைந்த நிரந்தர வளர்ச்சிக்கு வழி நெறிமுறை, திட்டங்களை வகுப்பது குறித்தும் ஆராயப்பட்டது. மாலை 3:30 மணியுடன் மாநாடு நிறைவுபெறுகிறது. தொடர்ந்து மாநாட்டு விவாதங்கள், தீர்மானங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்குகின்றனர். மாநாடு நடைபெறும் மரப்பாலம் சுகன்யா கன்வென்சன் சென்டரைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், சுகன்யா கன்வென்சன் சென்டரை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டுப் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல், ரிசார்ட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரப் பகுதி முழுவதும் போலீஸார் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மாநிலத்தின் எல்லைப் பகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். புதுவைக்கு வந்திருக்கிற மாநாட்டுப் பிரதிநிதிகள் நாளை ஆரோவில் செல்கின்றனர். ஆரோவில்லைப் பார்வையிட்டு, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கின்றனர்.