Published:Updated:

புதுச்சேரி ஊரடங்கு நீட்டிப்பு : `திரையரங்கம், பார் மேலும் எவற்றுக்கெல்லாம் அனுமதி ?'

புதுச்சேரி ஊரடங்கு
புதுச்சேரி ஊரடங்கு

புதுச்சேரியில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்துவருவதையடுத்து தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது அந்த மாநில அரசு.

புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் பல்வேறு தளர்வுகளை அளித்து ஊரடங்கை நீட்டித்துவருகிறது புதுச்சேரி அரசு. அதன் அடிப்படையில் ஜூலை 31 வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. தற்போது தொற்றின் விகிதம் குறைந்துவருவதால், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கான தடைகள் தொடர்கின்றன. அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்கள் இயங்கலாம். அனைத்துவிதமான கடைகளும் வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை குளிர்சாதன வசதியின்றி இயங்கலாம்.

கொரோனா அலர்ட்: `தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு!'
கொரோனா ஊரடங்கு தளர்வு
கொரோனா ஊரடங்கு தளர்வு

காய்கறி, பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பெரிய மார்க்கெட்டிலுள்ள அனைத்துக் கடைகளும் எப்போதும்போல செயல்படலாம். அதேபோல அனைத்துவித உணவகங்கள், தங்கும் விடுதிகள், தேநீர், பழச்சாறுக் கடைகள், மதுபானக் கடைகளுடன் கூடிய பார்கள் 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்கலாம். சில்லறை மதுக்கடைகள் மற்றும் சாராயக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம்போல் இயங்கலாம். சரக்குப் போக்குவரத்துக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்படும். அரசு, தனியார் பேருந்துகளும், ஆட்டோ டாக்ஸி உள்ளிட்டவையும் இரவு 9 மணி வரை இயங்கலாம். பூங்காக்கள், கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேரும், இறுதிச் சடங்குகளில் இருபது பேரும் கலந்துகொள்ளலாம். அனைத்து விளையாட்டுகளுக்கும் பார்வையாளர்கள் இன்றி அனுமதி அளிக்கப்படும்.

உடற்பயிற்சிக் கூடம், யோகா பயிற்சி போன்றவற்றுக்கு 50% பேருடன் அனுமதி அளிக்கப்படுகிறது. சினிமா படப்பிடிப்பு மற்றும் புதுச்சேரி சுற்றுலாத் தலமான சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகள் வழக்கம்போல் 50% பொதுமக்களுடன் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அத்துடன் தற்போது புதிய தளர்வாக சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் 50% பேர்களுடன் இரவு ஒன்பது மணி வரை இயங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு