Published:Updated:

புதுச்சேரி: "மருத்துவர்கள் வெள்ளை உடை அணிந்த தேவதைகள்!" -துணைநிலை ஆளுநர் தமிழிசை!

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

” கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதற்குப் பின்னால் அவர்கள் அனைவரின் தியாகமும் இருக்கிறது. சிலநேரங்களில் அவர்களின் தியாகங்கள் மறைக்கப்படுகிறது” -புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

நாடு முழுவதும் இன்று தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது. சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் அருண், மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் உதயசங்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கொரோனா பெருந்தொற்று சூழலில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

மருத்துவர்கள் தினம்
மருத்துவர்கள் தினம்

விழாவில் பேசிய அவர், “அடிப்படையில் நான் ஒரு மருத்துவராக இருப்பதால், மருத்துவர்களின் சிரமங்களை நான் புரிந்து வைத்திருக்கிறேன். மருத்துவராக இருப்பது உண்மையில் ஒரு சவாலான காரியம். மாண்புமிகு பாரதப் பிரதமர் கூறியதைப் போல மருத்துவர்கள் மற்றவர்கள் உயிரைக் காப்பாற்றும் கடவுளின் தூதர்கள். கொரோனா பெருந்தொற்றில் நாம் சுமார் 1,500 மருத்துவர்களை இழந்துவிட்டோம். நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்கள் தங்கள் நலனையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

நம் அனைவர் உயிரையும் காப்பாற்றும் மருத்துவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். புதுச்சேரியை பொறுத்தவரை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறைச் செயலர் அருண் மற்றும் மருத்துவர்களின் ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருந்தது. பொதுமக்கள் சந்தித்த சிரமங்கள் குறித்து நள்ளிரவில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினால்கூட அதனை உடனே நிவர்த்தி செய்து கொடுத்தார்கள்.

புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி
புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி

அதற்காக அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். வெள்ளை உடை அணிந்த தேவதைகளாக மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதற்குப் பின்னால் அவர்கள் அனைவரின் தியாகமும் இருக்கிறது. மருத்துவர்களின் குடும்பங்களிலும் சிலர் பாதிக்கப்பட்டிக்கலாம். நோயாளிகளையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள். சிலநேரங்களில் மருத்துவர்களின் தியாகங்கள் மறைக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள்தான் சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை. அதனால் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். நம் பிரதமர் அவர்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு 'ஆயுஷ்மான் பாரத்' என்ற மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்து மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தார். பிரதமர் அவர்கள் மருத்துவர்களை மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார். குஜராத்தில் இருந்தபோது 'சஞ்சீவி' என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் எந்த மருத்துவமனையிலும் சேர்ந்து சுகப்பிரசவம் பார்த்துக் கொள்ளலாம். அரசு அதற்கான கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும்.

புதுச்சேரி: 'ஒன்றிய' சர்ச்சை; ஆளுநர் தமிழிசை உரையும் விளக்கமும்! - ஒரு பார்வை!

புதுச்சேரி அரசு மருத்துவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. மருத்துவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டு நோயாளிகளைப் பாதுகாக்க வேண்டும். கோவிட் சூழலில், மருத்துவர்கள் எவ்வளவு மன அழுத்தத்தில், எவ்வளவு நிர்பந்தத்தில் இருந்தார்கள் என்பது தெரியும். துணைநிலை ஆளுநராக அல்லாமல், உங்களோடு இணக்கமாகப் பணியாற்றிய ஒரு சக மருத்துவர் என்ற முறையில் மருத்துவர்கள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு