Published:Updated:

புதுச்சேரி: ``மக்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன்!" - தரையில் அமர்ந்து குறைகேட்ட அமைச்சர்!

புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார்
புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார்

தொகுதிப் பிரச்னைக்காகத் தன்னைச் சந்திக்க வந்த மக்களை அமரவைக்கப் போதுமான இருக்கைகள் இல்லாததால், அவர்களுடன் தரையில் அமர்ந்து கோரிக்கைகளைக் கேட்டார் புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க ஆறு இடங்களில் வெற்றிபெற்றது. அவற்றில் ஊசுடு (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சாய் ஜெ.சரவணகுமார். அதையடுத்து பா.ஜ.க சார்பில் வெற்றிபெற்ற நமச்சிவாயமும், சாய் ஜெ.சரவணகுமாரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். சாய் ஜெ.சரவணகுமாருக்கு புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டன.

மக்களிடம் தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்கும் அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார்
மக்களிடம் தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்கும் அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார்

அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் இவர், தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறைகளில் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். இந்தநிலையில், நேற்று அவரைச் சந்திப்பதற்காக அவரது ஊசுடு தொகுதி மக்கள் சட்டப்பேரவைக்கு வந்தார்கள். அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமாரைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அவர்களுடன் தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்டறிந்தார் அவர். அமைச்சரின் அந்தச் செயல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதற்கான காரணம் குறித்து நம்மிடம் பேசிய அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார், ``எனக்கு வாக்களித்த மக்கள் கோரிக்கைகளுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்களில் வயதில் பெரியவர்களும் நிறையபேர் இருந்தார்கள். அவர்களை நிற்கவைத்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. மனதுக்குள் நெருடலாக இருந்தது. அவர்கள் அனைவரையும் அமரவைப்பதற்கான இருக்கைகளும் என் அறையில் இல்லை. அதனால் அனைவரையும் தரையில் அமரவைத்துவிட்டு நானும் அவர்களுடன் அமர்ந்தேன். `உங்களில் ஒருவன்தான் நான். நீங்கள் கொடுத்த வேலையைச் செய்ய வந்தவன்தான் நான்.

புதுச்சேரி: முதன்முறையாக சபாநாயகர் பதவியைக் கைப்பற்றிய பா.ஜ.க! - பதவியேற்றார் எம்.எல்.ஏ செல்வம்

அதனால் எந்தவித பயமுமின்றி என்னிடம் பேசுங்கள்’ என்று கூறி அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டேன். அவர்களும் அமைச்சர் என்ற தயக்கமின்றி என்னிடம் சகஜமாகத் தங்கள் குறைகளைக் கூறினார்கள். அமைச்சரானதும் ஆணவம் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். மக்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். அவர்களிடம் கெஞ்சி, கூத்தாடி இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று கூறித்தான் வாக்குகளை வாங்கினோம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால் அவர்களில் ஒருவனாக இருந்துவிட்டால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு