Published:Updated:

`ரூ.2 கோடி நிலுவை; டீசல் கிடையாது!'- காரை ஒப்படைத்துவிட்டு பேருந்தில் பயணித்த புதுவை அமைச்சர்

பெட்ரோல், டீசல் வழங்கியதற்கு சுமார் 2 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனுடைய அரசு வாகனத்துக்கு டீசல் போட ஊழியர்கள் மறுத்திருக்கிறார்கள்.

அமைச்சர் கமலக்கண்ணன்
அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி அரசு நிறுவனமான அமுதசுரபி பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிர்வாக சீர்கேடுகளால் இந்த நிறுவனம் தத்தளிக்கிறது. பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் கவர்னரிடம் புகார் சென்றுள்ளது. அரசுத் தரப்பு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கியதற்கு சுமார் 2 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி இருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில்தான் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனுடைய அரசு வாகனத்துக்கு டீசல் மறுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் கமலக்கண்ணன்
அமைச்சர் கமலக்கண்ணன்

இதுதொடர்பாக அமைச்சர் கமலக்கண்ணனின் செய்தித் தொடர்பாளரான முருகபூபதியிடம் பேசினோம். `` டீசல், பெட்ரோல் வழங்கியதற்காக 2 கோடி ரூபாய் நிலுவைத்தொகை இருப்பதால், கடந்த 1-ம் தேதி முதல் அரசுத்தரப்பு வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல் தருவதில்லை என்று அமுதசுரபி நிறுவனத்தினர் முடிவெடுத்திருக்கிறார்கள். அமைச்சரும் அவர்களது நியாயமான காரணங்களைப் புரிந்துகொண்டு இரண்டு, மூன்று தடவை சொந்த பணத்திலிருந்து டீசல் நிரப்பியிருக்கிறார்.

`பலகோடி ரூபாய் வீட்டுமனை; போலி பிரமாண பத்திரம்!' - சிக்கலில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ

உண்மை நிலை இப்படியிருக்க அமைச்சரின் கார் டிரைவரான கதிர்வேலு டீசல் தரவில்லை என்பதற்காக அந்த பெட்ரோல் நிலையத்தில் தகராறு செய்ததாக தவறான செய்தியை அமுதசுரபி ஊழியர்கள் பரப்பி இருக்கிறார்கள். இதையறிந்த அமைச்சர் கமலக்கண்ணன், `இனி அவர்களைத் தொல்லைபடுத்த வேண்டாம்' என்று கருதினார். வாரத்துக்கு குறைந்தபட்சம் 3 தடவையாவது புதுவை தலைமைச்செயலகம் செல்ல வேண்டியிருப்பதால், இனி தன் சொந்தப் பணத்தில் செலவு செய்து டீசல் போட முடியாது என்று முடிவு செய்து தனக்கு தரப்பட்ட அரசு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கச் சொன்னார். பின்னர், காரைக்காலில் இருந்து அரசுப் பேருந்தில் புதுச்சேரிக்குச் சென்றார்.

முருக பூபதி
முருக பூபதி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சரின் வாகனத்தை ஏற்றுக்கொள்ளக் கூட தயங்கினார்கள். `அரசு தரப்பில் கொடுத்த வாகனத்துக்கு டீசல் வழங்கவில்லை என்றால் எப்படி அந்த வாகனத்தில் செல்ல முடியும். எனவே, அதை அரசிடம் ஒப்படைப்பதுதானே முறை' என்று எடுத்துச் சொல்லி அவர்களிடம் காரை ஒப்படைத்தேன்" என்று கூறினார். அமுதசுரபி ஊழியர்களோ, `அமைச்சரின் கார் டிரைவர் குறித்து எதுவும் பேசவில்லை' என்கிறார்கள்.