Published:Updated:

புதுச்சேரி: `ரணகளத்துலயும் போட்டோவுக்கு போஸா?' - பி.ஜே.பி தொண்டர்களை விரட்டிய கிராம மக்கள்

தூய்மைப் பணியில் பி.ஜே.பி பொதுச்செயலாளர்
தூய்மைப் பணியில் பி.ஜே.பி பொதுச்செயலாளர்

தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தச் சென்ற பி.ஜே.பி தொண்டர்களைக் கிராம மக்கள் விரட்டியடித்த சம்பவம் புதுச்சேரியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில் தவளக்குப்பத்தை அடுத்து அபிஷேகப்பாக்கம் கிராமம் இருக்கிறது. அங்கு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் ’பிரதமரின் தூய்மை இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்தனர் பி.ஜே.பியினர். அதையடுத்து நேற்று அங்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட பி.ஜே.பி தொண்டர்கள் பேனர்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களிடம் சென்ற அப்பகுதி மக்கள் `பட்டியலின மக்களுக்கு எதிரா எல்லாத்தையும் பண்ணிட்டு, இங்க வந்து நல்லவங்க மாதிரி வேஷம் போடுறீங்களா ? உ.பியில் 19 வயசுப் பொண்ணை சாகடிச்சப்போ எங்க போனீங்க? உங்க சுத்தம் எங்களுக்கு வேணாம். பேனர்லாம் எடுத்துட்டுப் போயிடுங்க’ என்று தெரிவித்திருக்கின்றனர். பி.ஜே.பி தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்பினருக்கு வாக்குவாதம் முற்றியிருக்கிறது. அப்போது விழாவுக்காக வைத்திருந்த பட்டாசை தரையில் வைத்து கொளுத்தியிருக்கிறார் பி.ஜே.பி தொண்டர் ஒருவர்.

கலவரத்தை வேடிக்கை பார்க்கும் தூய்மைப் பணியாளர்கள்
கலவரத்தை வேடிக்கை பார்க்கும் தூய்மைப் பணியாளர்கள்

அதில், கடுப்பான அப்பகுதி மக்கள் அங்கிருந்த பேனர்களை கிழித்துப் போட்டதுடன், பி.ஜே.பி தொண்டர்களை நோக்கி ஆவேசமாக திரும்பியிருக்கின்றனர். விபரீதம் நடப்பதற்கு முன்பு சென்று விட வேண்டும் என்று நினைத்த பி.ஜே.பி தொண்டர்கள், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். ஆனாலும், நீண்ட தூரம் அவர்களை விரட்டிக் கொண்டு மக்கள் சென்றதாகச் சொல்கிறார்கள்.

அப்போது விழாவை துவக்கி வைக்க அங்கு சென்ற புதுச்சேரி பி.ஜே.பியின் பொதுச்செயலாளர் `ஏம்பலம்’ செல்வம், தொண்டர்கள் ஓடும் காட்சியைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்ர். தொண்டர்களை விரட்டிச் சென்ற மக்கள், நம் பக்கம் திரும்புவதற்குள் வந்த வேலையை உடனே பார்ப்போம் என்று நினைத்தாரோ என்னவோ, தன்னுடன் வந்த ஒருவருடன் துடைப்பத்துடன் நின்றுகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டு இடத்தைக் காலி செய்தார் `ஏம்பலம்’ செல்வம்.

Vikatan

தொடர்ந்து அதனை பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார். அந்தப் புகைப்படத்தில் இவர் போஸ் கொடுத்துக் கொண்டிருக்க பின்னணியில் அந்த கலவரக் காட்சியும், தூய்மைப் பணியார்கள் அதனை வேடிக்கை பார்க்கும் காட்சியும் பதிவாகியிருக்கிறது. அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் ’ரணகளத்துலயும் குதூகலமா’ என்று பி.ஜே.பியினரைக் கலாய்த்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு