Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: `அமைச்சர் எதிர்வினைகளை அனுபவிப்பார்’ - நீக்கப்பட்ட அதிமுக-வினர் கொதிக்கும் பின்னணி!

வேட்பாளரை  மாற்றக் கோரி நடைபெற்ற  போராட்டம்
வேட்பாளரை மாற்றக் கோரி நடைபெற்ற போராட்டம்

`மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் சர்வாதிகாரப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். அவர் சொல்வதைத் தான் தலைமையும் கேட்கிறது. உண்மையான விசுவாசிகளைக் கட்சியிலிருந்து அகற்ற வைத்திருக்கிறார்’ என்கிறார்கள் நீக்கப்பட்ட அதிமுக-வினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே உட்கட்சி பூசல் பூதாகரமாகி ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தது. அறந்தாங்கி தொகுதியைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வேட்பாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் போராடிய நிலையில் ஒரு கட்டத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆலங்குடியில், போராட்டங்கள் ஓயவில்லை.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இரண்டு மாதம் கூட ஆகாத தர்ம.தங்கவேலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் சிபாரிசால் மட்டுமே ஆலங்குடி வேட்பாளராக சீட் கிடைத்திருக்கிறது. ஆலங்குடிக்கு அறிமுகம் இல்லாத வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று அந்தப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த கே.ஆர்.கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொத்தமங்கலம் தி.பாண்டியன், கறம்பக்காடு சண்முகநாதன், மாவட்ட வழக்கறிஞரணி துணைத் தலைவர் நெவளிநாதன், முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலத்தின் மகள் தனலெட்சுமி, விவசாய அணி செயலாளர் மாசிலாமணி ஆகியோர் வேட்பாளருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரசாரத்துக்கு வந்த முதலமைச்சரின் வேனை மறிக்கவும் முயன்றனர். அதிலும், குறிப்பாக, `எங்களது சமூகத்துக்குத் தொடர்ந்து வாய்ப்புப் புறக்கணிக்கப்படுகிறது.

தனலட்சுமி
தனலட்சுமி

அனைத்துக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் காரணம். எனவே, விராலிமலை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அமைச்சரைத் தோற்கடிப்போம்’ என்று கூறி ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலத்தின் மகள் தனலெட்சுமி, மாவட்ட வழக்கறிஞரணி நெவளி நாதன் ஆகியோர் விராலிமலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே தான், போர்க்கொடி தூக்கிய சிலர் அமைச்சர் விஜயபாஸ்கரால் சமாதனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. விஜயபாஸ்கரைக் குறைகூறியும், தன்னை கட்சியிலிருந்து விடுவிக்கக் கோரியும் இரண்டு பக்க அறிக்கையைத் தலைமைக்கு அனுப்பியிருப்பார் நெவளிநாதன். இதற்கிடையே நெவளிநாதனுக்கு மாநில பதவியைக் கொடுத்து அமைச்சர் ஆப் செய்துவிட்டாராம். வேட்புமனுத் தாக்கல் செய்த வேகத்தில், நெவளிநாதன் வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.

மக்களைத் திரட்டி போராட்டம் செய்த தி. பாண்டியனுக்கு, ஒன்றிய செயலாளர் பதவியை வாங்கிக் கொடுத்து அவருக்கும் கைக்கட்டு போட்டுவிட்டதாக கூறும் உட்கட்சி விவகாரங்கள் அறிந்த அ.தி.மு.க-வினர், முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலத்தின் மகள் தனலெட்சுமி மட்டும், அமைச்சரை எதிர்ப்பது என்று கடைசி வரையிலும் ஒரே முடிவிலிருந்தாராம். தனலெட்சுமி விவகாரத்தில் அம்மா, மாமனார் உள்பட குடும்பத்தை அழைத்துச் சமாதானம் என எத்தனையோ அம்புகளைக் கையில் எடுத்தும் அமைச்சரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. பணம், பதவி என அமைச்சரின் சமாதானத்தை ஏற்காமல் ஒரே நிலைப்பாட்டிலிருந்த தனலெட்சுமி, தீப்பட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தான் வாக்குப்பதிவு முடியும் வரைக் காத்திருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் கழகத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்று ஒரு லிஸ்டை தலைமைக்கு அனுப்பியுள்ளாராம். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் மாசிலாமணி, 41வது வார்டு கழக செயலாளர் கே.ஆர்.ஜி.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலத்தின் மகள் தனலெட்சுமி ஆகியோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதோடு, நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டதோடு, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும் இன்று முதல் கழகத்தில் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகள் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இவர்களை நீக்குவதாகவும், இவர்களுடன் கழக உடன்பிறப்புகள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி ஆகியோர் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

புதுக்கோட்டை: `அமைச்சர் எதிர்வினைகளை அனுபவிப்பார்’ - நீக்கப்பட்ட அதிமுக-வினர் கொதிக்கும் பின்னணி!

ஏற்கெனவே, திருமயம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகுசுப்பையா கட்சியிலிருந்து விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நீக்கப்பட்டவர்களின் தரப்பில் கேட்டபோது,

``மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் சர்வாதிகாரப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். அவர் சொல்வதைத் தான் தலைமையும் கேட்கிறது. கட்சியில் பல வருடங்கள் உழைத்த எங்களுக்கு எந்தவித வாய்ப்பும் கொடுக்காமல், நேற்று கட்சியில் சேர்ந்தவரை வேட்பாளருக்குப் பரிந்துரைக்கிறார். இதுபற்றி விளக்கம் கேட்டதற்குத் தான், தற்போது உண்மையான விசுவாசிகளைக் கட்சியிலிருந்து அகற்ற வைத்திருக்கிறார். இது நாங்கள் எதிர்பார்த்தது தான். கட்சியினரை ஆலோசிக்காமல் தனிப்பட்டு அவர் எடுத்த முடிவுகளுக்கான எதிர்வினைகளை விரைவில் அனுபவிப்பார். மாவட்டத்தில் கட்சியும் சறுக்கலைச் சந்திக்கும்" என்றனர்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

இதுபற்றி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், "அமைச்சர் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து தான் வேட்பாளர் பரிந்துரை செய்யப்பட்டது. புதுக்கோட்டை அ.தி.மு.க வேட்பாளர்களை அ.தி.மு.க தலைமை தான் பரிசீலித்து இறுதி செய்து பட்டியலை வெளியிட்டது. இதில், அமைச்சர் தன்னிச்சையாக செயல்பட்டார் என்று கூறுவது தவறானது. தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் அவரது பணியை சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.

பதவி கொடுக்கவில்லை, வேட்பாளராக அறிவிக்கவில்லை என்று தாய் கழகத்திற்கே சிலர் துரோகம் செய்ய நினைத்தனர். வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அமைச்சருக்கும், அ.தி.மு.க கழகத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் கழகத்திலிருந்து கொண்டே கழக வேட்பாளர்களை சிலர் எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டதோடு எதிர்கட்சிக்கு சாதகமாக இவர்கள் செயல்பட்டனர். கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். தற்போது தலைமை அதனைத் தான் செய்திருக்கிறது" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு