Published:Updated:

`ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த எஸ்பி!’ - அமித் ஷாவுக்குப் பறந்த புகாருக்கு காவல்துறை விளக்கம்

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும் என பா.ஜ.க நிர்வாகி ஒருவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு புகார் மனு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Letter to amit shah
Letter to amit shah

ஒவ்வொரு விஜயதசமி நாளன்றும், ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, புதுக்கோட்டை அருகே உள்ள இலுப்பூரில், 1 கி.மீ தூரத்திற்கு அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ், அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டார் என்று கூறி, பா.ஜ.க மாநில இணைச் செயலாளர் மற்றும் ராமநாதபுரம் கோட்ட இளைஞரணிச் செயலாளர் பாண்டியராஜன், உள்துறை அமைச்சருக்கு புகார் மனு அனுப்பி யுள்ளார்.

`ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த எஸ்பி!’ - அமித் ஷாவுக்குப் பறந்த புகாருக்கு காவல்துறை விளக்கம்

அந்த மனுவில், ``ஒவ்வோர் ஆண்டும் விமரிசையாக அணிவகுப்பு நடத்துகிறோம். இந்த ஆண்டு அணிவகுப்பில் சுமார் 10 ஆயிரம் பேர் வரையிலும் கலந்துகொண்டிருப்பார்கள். ஆனால், இந்த முறை அணிவகுப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை. புதுக்கோட்டை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் எஸ்பி செல்வராஜ் அனுமதி கொடுக்க மறுக்கிறார். எனவே, அவரை உடனே இங்கிருந்து பணிமாற்றம் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாண்டியராஜன் கூறும்போது, ``தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால், புதுக்கோட்டையில் கடைசி நேரத்தில் மறுத்துள்ளனர். ஆளும்கட்சி பிரமுகர்கள் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட அமைச்சரின் அழுத்தத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க வளர்ச்சியடையக்கூடாது என்று நினைக்கின்றனர்" எனக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, இதுதொடர்பாக தற்போது காவல்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ``விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தும் ஊர்வலத்துக்கு அனுமதி கோரப்பட்டது. உரிய கவனத்துடன் அந்த மனு பரிசீலிக்கப்பட்டது. கூடவே ஊர்வலம் குறித்து விளக்கம் கேட்டு குறிப்பாணை ஒன்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நிகழ்ச்சிக்கு எந்த விதத்திலும் அனுமதி மறுக்கப்படவில்லை. மாறாக, அனுமதி கோரிய இடமான இலுப்பூர் சின்னக்கடை வீதி மிகவும் நெரிசலான பகுதி என்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி, அந்த இடத்துக்கு அருகே ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்து அவர்களாகவே ஊர்வலத்தை ரத்து செய்துள்ளனர். காவல்துறை அனுமதி அளித்த தகவல்களை மறைத்து, வேண்டும் என்றே ஒருசிலர் சமூக ஊடகங்களில் காவல்துறை அனுமதி மறுத்ததாகப் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். முற்றிலும் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சர்ச்சைகளுக்கு மத்தியில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதில், ஒத்திவைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பேரணியை வரும் 20-ம் தேதி நடத்துவது என்றும், அதற்கான அனுமதி கேட்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.