Published:Updated:

``இதுதான் நேரம்; எடப்பாடி பதவி விலக வேண்டும்; சசிகலா என்ட்ரி கொடுக்க வேண்டும்" - புகழேந்தி!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பின்னடவைச் சந்தித்திருப்பதால், ``எடப்பாடி பழனிசாமி தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்கிற கோஷத்தை முன்வைத்திருக்கிறார் புகழேந்தி.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அவர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில்கூட வெற்றியைப் பெறவில்லை. தேர்தலைச் சந்தித்த அனைத்து மாவட்டங்களிலும் ஆளுங்கட்சியான தி.மு.க-வே முன்னிலையில் இருக்கிறது. அக்டோபர் 12-ம் தேதி மாலை 4 மணி நிலவரப்படி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மட்டும் தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. அந்தக் கட்சி வலுவாக இருக்கும் தென்மாவட்டங்களிலேயேகூட, எதிர்பார்த்த அளவுக்கான சீட்களை அ.தி.மு.க-வால் பெற முடியவில்லை.

``ஆர்டர்லாம் போடாதீங்க விஜயபாஸ்கர்" கோபமான ஓ.பி.எஸ்! - அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
புகழேந்தி
புகழேந்தி

இது குறித்து நம்மிடம் பேசிய புகழேந்தி, ``அ.தி.மு.க-வின் இந்தச் சறுக்கல் எதிர்பார்த்த ஒன்றுதான். அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்வதால், இந்தத் தோல்வியை அடைந்திருக்கிறார்கள். இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் தன் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெறும். நானே தலைமையேற்று இது போன்ற போராட்டங்களை நடத்தவிருக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள சசிகலா தவறக் கூடாது. இனியும் தாமதிக்காமல் அவர் அரசியல் என்ட்ரி கொடுக்க வேண்டும். கழகத் தொண்டர்களெல்லாம் சுணங்கிப்போயிருக்கிறார்கள். உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை. அதைச் செய்தால் மட்டுமே கட்சி உயிர்ப்போடு இருக்கும். இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் வாயிலாக, தி.மு.க பலத்தோடு இருப்பதை அறிய முடிகிறது. விரைவில் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்குள் சசிகலா ஒரு முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

அ.தி.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளராகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த புகழேந்தி, கடந்த ஜூன் மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமியின் அழுத்தத்தால்தான் புகழேந்தி நீக்கப்பட்டதாக அப்போது பரபரப்பு கிளம்பியது. அன்றிலிருந்து அவ்வப்போது அரசியல் சரவெடிகளைப் பற்றவைக்கும் புகழேந்தி, தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பின்னடைவைச் சந்தித்திருப்பதால், 'எடப்பாடி பழனிசாமி தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்கிற கோஷத்தை முன்வைத்திருக்கிறார். வரும் சில நாள்களில் இந்த கோஷம் அதிர்வைக் கிளப்புமா, அமுங்கிப் போகுமா என்பது தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு