Published:Updated:

`விசாரணை வேண்டும் என்றேன்; உன்னை விசாரிக்க வேண்டும் என்றார் தினகரன்!’ - பெங்களூரு புகழேந்தி

அ.ம.மு.க எனக்குச் சொந்தமான கட்சி, அதை தொடங்கியதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. அதனால் யாரும் என் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியாது, நீக்கவும் முடியாது என தஞ்சாவூரில் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

புகழேந்தி
புகழேந்தி ( ம.அரவிந்த் )

தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த அ.ம.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``பா.ஜ.க-வினர் ஒரே நாடு, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தி மொழி என்கிற குரலை எழுப்பியுள்ளனர். அதை அவர்களால் சாதிக்க முடியாது.

புகழேந்தி
புகழேந்தி

இந்தி மொழிக்கு எதிராக பல தலைவர்கள் எதிர்த்துப் போராடிய வரலாறு இருக்கிறது. ஆகவே, ஒரே மொழி என்கிற திட்டம் எல்லாம் தேவையற்ற ஒன்று. அதை முயலவும் வேண்டாம். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரிடம் ஒப்புதல் பெற்று சசிகலா என்னைச் செய்தி தொடர்பாளராக நியமித்தார். எனவே, என்னைச் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து விடுப்பதோ, தொடுப்பதோ யார் கையிலும் இல்லை. அவர்கள் விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

எந்தக் காலத்திலும் எதையும், யாரையும் நம்பி நான் இல்லை. கொள்கையை நம்பிதான் இருக்கிறேன். எதையும் சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். திராவிட பாரம்பர்யத்தில் வந்தவன் நான். ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த வெற்றிவேல் எல்லாம் என்னைப் பற்றி பேசுவதுதான் கஷ்டமாக உள்ளது. கட்சியிலிருந்து பலரும் விலகிச் செல்லுகிறார்கள். இதைத் தடுக்க வேண்டும். அதற்கு ஒரு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தினகரனிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் என்னை விசாரிக்க வேண்டும் எனக் கூறினார்.

புகழேந்தி
புகழேந்தி

அப்படி விசாரிக்க வேண்டும் என என்னை தினகரன் இப்போது அழைத்தாலும் சென்று, என் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கவும் தயாராக உள்ளேன். தினகரன் கடந்த ஓராண்டுக்கு முன்பே, விசாரணைக் குழு அமைத்திருந்தால், யாரும் கட்சியை விட்டுச் சென்றிருக்கமாட்டார்கள். தினகரனை கட்சியை விட்டு தனிமைப்படுத்த வேண்டும் என திவாகரன் ஏதோ கோபத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார். அ.ம.மு.க எனக்குச் சொந்தமான கட்சி, அதை தொடங்கியதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. அதனால் யாரும் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, நீக்கவும் முடியாது.

நான் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டதாக புரளி கிளப்புகிறார்கள். ஆனால், நான் எந்தக் கட்சிக்கும் இதுவரை செல்லவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில்,15 ஆண்டுகளாக ஜெயலிலதா, சசிகலாவுக்கான வழக்கு ஆவணங்களைத் துாக்கிக்கொண்டு அலைந்திருக்கிறேன். சொத்துக் குவிப்பு வழக்கில் பல ரகசியங்கள் இருக்கிறது. அவற்றை நேரம் வரும்போது வெளியே சொல்வேன். சசிகலாவுக்கு தினகரன் மீது அதிருப்தி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறையில் என்னைப் போன்றோரை வைத்துக் கொண்டு தினகரனிடன் பேசும்போது நன்றாகத்தான் பேசுகிறார்.

புகழேந்தி
புகழேந்தி

ஆனால், நாங்க வந்த பிறகு இருவரும் தனியாகப் பேசும்போது எப்படி பேசுகிறார் எனத் தெரியவில்லை. சசிகலா முதல்வராக வரக் கூடாது என்பதற்காகவே சிறைக்கு அனுப்பினார்களா என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார். அமைச்சர் ஜெயக்குமாரை தவிர வேறு யாரும் முதல்வர் உட்பட சசிகலாவை விமர்சனம் செய்து பேசவில்லை. அதனால், அவர் வெளியே வந்த பிறகு ஆட்சியாளர்கள் அவரை ஏற்றுக்கொள்வர்கள்.

சசிகலாவும், இளவரசியும் கன்னடத்தில் நன்றாகப் பேசுகின்றனர். இதைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டேன். எல்லா கட்சியிலும் வாரிசுகள் இருக்கின்றனர். ஜெய் ஆனந்த், விவேக் ஜெயராமன் ஆகியோர் வருவதை தினகரன் ஏன் விரும்பவில்லை எனத் தெரியவில்லை என்றார்.