Published:Updated:

அவமதிப்பு; படுகொலை; மத விவகாரம் - தேர்தலை முன்வைத்துச் செயல்படுகின்றனவா பஞ்சாப் அரசியல் கட்சிகள்?

பஞ்சாப்
News
பஞ்சாப்

அமிர்தசரஸ் பொற்கோயிலில் இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்தநாளே, இதைப்போன்ற மற்றொரு சம்பவமும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது.

அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் நுழைந்த மர்மநபர், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பையும், புனித வாளையும் அவமதித்ததாகக் கூறி கோயில் பக்தர்களால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார். அதற்கு மறுநாளே, வேறொரு இடத்தில் சீக்கியக் கொடியை அவமதித்ததாகக் கூறி மற்றொரு நபரும் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களும், பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மேலும், உயிரிழந்த நபர்மீது வழக்கு பதிவு செய்திருக்கும் பஞ்சாப் காவல்துறை அடித்துக்கொலை செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதேபோல, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும், இதன் உள்நோக்கம் கண்டறியப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அரசியல் கட்சியினர்கூட கொலைசெய்தவர்களைக் கண்டிக்கவில்லை. இந்த மௌனத்திற்குப் பின்னால், சில மாதங்களில் நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநில சட்டமன்றத்தேர்தல் இருப்பதாகப் பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

பொற்கோவில் படுகொலை
பொற்கோவில் படுகொலை
ட்விட்டர்

கடந்த டிசம்பர் 18-ம் தேதி மாலை, சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழக்கமான வழிபாடு நடந்துகொண்டிருந்தது. அப்போது, கருவறைக்குள் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பை சீக்கிய மதகுருமார் ஒருவர் வாசித்துக்கொண்டிருக்க பக்தர்கள் வரிசையாக வந்து வழிபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்களுடன் வந்துகொண்டிருந்த ஒரு நபர், திடீரென கருவறையின் தடுப்பு கேட்டைத் தாண்டி உள்ளே குதித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த புனித வாளை கையில் எடுத்தார். இதைக்கண்ட கோயில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் உடனடியாக அந்த நபரை மடக்கிப்பிடித்து வெளியில் இழுத்துசென்றனர். கோயிலின் புனிதத்தன்மையை சீர்குலைத்தாகக்கூறி அந்த நபரை கடுமையாகத் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் பர்மிந்தர் சிங் பந்தல் (Parminder Singh Bhandal,DCP), உயிரிழந்த நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு 25-30 வயது இருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், அவருடன் எத்தனைப் பேர் வந்தார்கள்? என்ன நோக்கத்துக்காக நடத்தப்பட்டது என்பது குறித்து ஆராய, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

பர்மிந்தர் சிங் பந்தல்
பர்மிந்தர் சிங் பந்தல்

இந்த நிலையில், பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா, ``இறந்தவரிடம் செல்போன், பர்ஸ், ஆதார் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. மேலும், கண்காணிப்புக் கேமிராக்களை ஆய்வுசெய்தபோது, காலை 11 மணியிலிருந்து கோயிலில் நோட்டமிட்டிருப்பதும், மாலை 6 மணியளவில் வழிபாட்டில் கலந்துகொண்டு கருவறை தடுப்பு கேட்டைத்தாண்டி உள்ளே குதித்திருப்பதும் முதற்கட்ட காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது" எனக் கூறினார்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா
பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா

அதன்பின்னர், அமிர்தசரஸ் கமிஷனர் சுக்செயின் சிங் கில் (Sukhchain Singh Gill), ``இறந்துபோன நபரின்மீது மத நம்பிக்கையை புண்படுத்துதல் (சட்டப்பிரிவு 295ஏ), கொலைமுயற்சி (சட்டப்பிரிவு 307) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமிர்தசரஸ் பொற்கோயிலில் இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்தநாளே, இதைப்போன்ற மற்றொரு சம்பவமும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி கபுர்தலா மாவட்டம், நிஜாம்பூர் கிராமத்தில் உள்ள சீக்கியக் கோவிலுக்குள் (குருத்வார்) மர்ம நபர் ஒருவர் நுழைந்திருக்கிறார். அவர் அங்கிருந்த சீக்கியர்களின் புனிதக்கொடியான நிஷான் சாஹிப்பை அவமதித்ததாகக்கூறி, கோயில் நிர்வாகத்தினர் அவரைப் பிடித்து, தனியறையில் அடைத்து சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினரிடம் ஒப்படைக்க மறுத்த அவர்கள், தொடர்ந்து அந்த நபரை தாக்கியிருக்கின்றனர். இதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கபுர்தலா கோவிலில் படுகொலை செய்யப்பட்டவர்.
கபுர்தலா கோவிலில் படுகொலை செய்யப்பட்டவர்.
ட்விட்டர்

இந்தச் சம்பவம்குறித்து பேசிய கபுர்தலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்கமல் ப்ரீத் சிங் (Harkamal Preet Singh), ``சம்பந்தப்பட்ட அந்த நபர், கேஸ் சிலிண்டர் திருடுவதற்காகவே கோயிலுக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அவரைக் கொடி அவமதிப்பு செயலில் சம்பந்தப்படுத்திவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு கொலை சம்பவங்களால், பஞ்சாப் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

சீக்கியர்கள் கொடி
சீக்கியர்கள் கொடி
விக்கிபீடியா

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, விசாரணையைத் தீவிரப்படுத்த ஆலோசனை நடத்திவருகிறார். இன்னும் இரண்டு நாள்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், அகாலிதள கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், `இந்தக் கொடூரமான முயற்சி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது' என தெரிவித்திருக்கிறார். அதேபோல, பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங், ``குரு கிரந்த சாஹிப்பை களங்கப்படுத்த நடைபெற்றிருக்கும் முயற்சி மிகவும் மோசமானது. அத்துமீறிய அந்த மர்மநபரின் உண்மையான நோக்கத்தை அரசாங்கம் கண்டறிய வேண்டும்" என கண்டனம் விடுத்தார். அதேபோல, பா.ஜ.க தரப்பில் `இந்த விவகாரத்தை, சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாப்பை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்தச் சம்பவங்களில், கொலையானவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவமதிப்பு செயலையே கண்டித்திருக்கின்றனர். ஆனால், இதுவரையில் அடித்துக்கொலை செய்தவர்கள்மீது அரசாங்கம் வழக்கு பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும், கண்டனங்களையும் அரசியல்கட்சியினர் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணம், எதிர்வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்தான் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாபில் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தவர்களும் வாழ்ந்துவந்தாலும், சீக்கியர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். இந்தச் சம்பவம் குறித்து எதிர்கருத்து வைத்தாலோ அல்லது நடவடிக்கை எடுத்தாலோ அது தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை தேர்தலில் ஏற்படுத்தும் என அனைத்துக் கட்சிகளும் அஞ்சுகின்றன.

பஞ்சாப் - 2022 தேர்தல்
பஞ்சாப் - 2022 தேர்தல்

பெரும்பான்மை மக்களான சீக்கியர்களின் ஓட்டுவங்கியே பஞ்சாப் ஆட்சியை தீர்மானிக்கிறது. எனவே ஆளும் காங்கிரஸ் அமைதிகாக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான அகாலி தளம், ஏற்கெனவே 2015-ல் நடந்த இதேபோன்றதொரு கலவரத்தை சாதூரியமாக கையாளாததால், சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாகி, கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை இழந்தது. அதிலிருந்து பாடம்கற்றதால் இந்தமுறை மௌனம்காக்கிறது. பா.ஜ.க, ஆம் ஆத்மி மற்றும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கிட்டதட்ட இதுபோன்ற நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன.

பஞ்சாப்
பஞ்சாப்

இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த சில தசாப்தங்களாக தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடப்பது வாடிக்கையாக நிகழ்ந்துவருகிறது. சமீபத்தில் நடந்த மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட கலவரங்களும் இதற்கு சிறந்த உதாரணம்.