Published:Updated:

புலமைப்பித்தன்: எம்.ஜி.ஆரின் கவிஞர்; ஜெயலலிதாவின் அவைத் தலைவர்! - புலவரின் அரசியல் பயணம்!

புலமைப்பித்தன்
புலமைப்பித்தன்

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, புலமைப்பித்தன் எழுதியிருந்த பாடலைத்தான் பட்டித்தொட்டியெங்கும் அதிமுக-வினர் ஒலிக்கவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிமுக அவைத்தலைவராக இருந்தவரும், தமிழக அரசின் அரசாங்கப் புலவராக ஜொலித்தவருமான கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கி, ஒரு கட்சியின் அவைத்தலைவராக உயர்ந்ததுவரை புலமைப்பித்தனின் பயணம் அளப்பரியது.

புலவர் புலமைப்பித்தன்
புலவர் புலமைப்பித்தன்

புலமைப்பித்தனின் உண்மையான பெயர் ராமசாமி. கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்திலிருந்தபோது, பஞ்சாலைப் பணி, பேரூர் தமிழ்க் கல்லூரியில் படிப்பு என உழைப்பால் தன்னை வளர்த்துக்கொண்டவர். 1961-ல் புலவர் பட்டம் பெற்ற பிறகு, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தமிழ் ஆசிரியர் பணி கிடைத்தது. சினிமாவில் பாட்டெழுத வேண்டுமென்ற துடிப்பும் அவரிடம் நிரம்பியிருந்தது. கோவை முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் அவர் பணிபுரிந்த காலத்தில், ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு வரவேற்புரை நிகழ்த்த புலமைப்பித்தனை அழைத்திருக்கிறார்கள். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கே.சங்கர், புலமைப்பித்தனின் வரவேற்புரையில் சிலிர்த்து அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். புலமைப்பித்தனின் சினிமாவுக்கான தொடர்பு அங்கேயிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது.

'எம்.ஜி.ஆர் பெயரில் கைவைத்தால், யாராக இருந்தாலும் அவ்வளவுதான்!' - எச்சரிக்கும் நயினார் நாகேந்திரன்

பிற்பாடு சென்னை வந்த புலமைப்பித்தன், சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டே சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு தேடியிருக்கிறார். எம்.ஜி.ஆரை வைத்து 1968-ல் `குடியிருந்த கோயில்' படத்தை இயக்கிய கே.சங்கர், அந்தப் படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பை புலமைப்பித்தனுக்குத் தந்தார். அந்தப் படத்தில், 'நான் யார் நான் யார் நீ யார்?' என்று புலமைப்பித்தன் எழுதிய பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன்பிறகு எல்லாம் ஏற்றம்தான். `அடிமைப் பெண்’, `நினைத்ததை முடிப்பவன்’, `இதயக்கனி’ என எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலெல்லாம், அவரின் ஆஸ்தான புலவர்களுள் ஒருவராக புலமைப்பித்தன் மாறிப்போனார். திமுக-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டு, அதிமுக-வைத் தொடங்கியபோது, அவருக்கு உற்ற பலமாக இருந்தவர்களுள் புலமைப்பித்தனும் ஒருவர்.

புலவர் புலமைப்பித்தன்
புலவர் புலமைப்பித்தன்

எம்.ஜி.ஆரின் விசுவாசியாக இருந்ததால், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பொறுப்பும் புலமைப்பித்தனைத் தேடிவந்தது. மேலவை துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2001-ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, கட்சியின் அவைத்தலைவராக இருந்த காளிமுத்துவை சபாநாயகராக்கினார் ஜெயலலிதா. இதனால் காலியான அவைத்தலைவர் பொறுப்புக்கு புலமைப்பித்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுசூதனன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வரை புலமைப்பித்தன்தான் அதிமுக-வின் அவைத்தலைவர். கட்சிக்கு அப்பாற்பட்டு தனக்கென தனி மதிப்பை உருவாக்கியிருந்த புலமைப்பித்தனின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மே 11, 1973: நெருப்பாய் கொதித்த களம்; அதிரடி எம்ஜிஆர்! - உலகம் சுற்றும் வாலிபனும் தமிழக அரசியலும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புலமைப்பித்தனின் மறைவு குறித்து நம்மிடம் பேசிய அமமுக-வின் செய்தித் தொடர்பாளர் வீர.வெற்றி பாண்டியன், ``2002-ல் அதிமுக-வின் மதுரை மாவட்ட மாணவரணித் துணை அமைப்பாளராக நான் இருந்தபோது, புலமைப்பித்தன் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தை மதுரையில் நடத்தினோம். எங்களைப் போன்ற இளைஞர்களின் மேடைப் பேச்சுகளையெல்லாம் கேட்டு தோளில் தட்டிக் கொடுத்தவர் அவர். சமூக அவலத்தை எளிய சொற்களால் பாமரர்களுக்கும் புரியும்வண்ணம் தன் பாடல்களால் கொண்டு சேர்த்தவர். தன் இறுதி மூச்சுவரை ஈழத்துக்காகக் குரல் கொடுத்தவர். புலமைப்பித்தனின் மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்றார்.

வீர.வெற்றி பாண்டியன்
வீர.வெற்றி பாண்டியன்

ஆக்ஸ்ட் 22, 1975-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த படம் 'இதயக்கனி.’ அரசியல்ரீதியாக எம்.ஜி.ஆரின் 'கிராப்' எகிறியிருந்த நிலையில் இந்தப் படம் வெளியானது. படத்தின் தொடக்கத்திலேயே, `நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' என்றொரு பாடல் வரும். அதை எழுதியவர் புலமைப்பித்தன். அக்டோபர் 1984-ல் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, புலமைப்பித்தன் எழுதியிருந்த இந்தப் பாடலைத்தான் பட்டித்தொட்டியெங்கும் அதிமுக-வினர் ஒலிக்கவிட்டனர். தொண்டர்களின் பிரார்த்தனையின் பலனாக அமெரிக்க சிகிச்சை முடிந்து உடல்நலத்துடன் தமிழகம் திரும்பினார் எம்.ஜி.ஆர். பிற்பாடு ஜெயலலிதாவின் பொதுக்கூட்டங்களிலும் இந்தப் பாடல் ஒலித்தது. இன்று வரை அதிமுக-வின் கூட்டங்களில், 'இதயக்கனி'-யின் பாடல் இடம்பெறாமல் போகாது. அந்த அளவுக்கு அதிமுக-விலும், எம்.ஜி.ஆர் இடத்திலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருந்த புலமைப்பித்தன், உடல்நலக் குறைவால் மறைந்தது உள்ளபடியே அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு பேரிழப்புதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு