Published:Updated:

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி யார்?! - போட்டியில் அ.தி.மு.க., பா.ஜ.க!

முல்லைப்பெரியாறு விவகாரத்தை மையப்படுத்தி, தி.மு.க-வுக்கு எதிரான அரசியலை பா.ஜ.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் வேகப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

முல்லைப்பெரியாறு விவகாரத்தை அடிப்படையாகவைத்து, பிரதான எதிர்க்கட்சி இடத்துக்கு அ.தி.மு.க., பா.ஜ.க இரண்டு கட்சிகளும் முட்டிமோதுவது அரசியல் அதிரிபுதிரியை உருவாக்கியிருக்கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தொடும்போதுதான், தமிழக அரசின் அதிகாரிகள் முன்னிலையில் அணை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 138.7 அடியைத் தொட்டவுடனேயே கேரள அரசு, அணையிலிருந்த நீரை வெளியேற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டித்து பா.ஜ.க., அ.தி.மு.க கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. நவம்பர் 8-ம் தேதி தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``தமிழகத்தின் முல்லைப்பெரியாறு உரிமையை முதல்வர் ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார். இதற்காக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று காட்டமாகியிருக்கிறார். அதேபோல, வைகைநதி பாயும் ஐந்து மாவட்டங்களில் நவம்பர் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க., திரளான கூட்டத்தைத் திரட்டிக் காட்டியிருக்கிறது. கம்பத்தில் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ``அ.தி.மு.க போராடிப் பெற்றுத்தந்த உரிமையை தி.மு.க கேரளாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது" என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இப்படி, முல்லைப்பெரியாறு விவகாரத்தை மையப்படுத்தி, தி.மு.க-வுக்கு எதிரான அரசியலை பா.ஜ.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் வேகப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

நம்மிடம் பேசிய பா.ஜ.க இரண்டாம்கட்டத் தலைவர் ஒருவர், ``சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, ``நாங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும், கட்சியை எப்படி வழிநடத்த வேண்டுமென்பதை மோடி எங்களிடம் தெளிவாகக் கூறியிருக்கிறார். அதன்படிதான் செல்வோம். ஊழலை எதிர்த்து களமாடுவோம்’’ என்று கூறியிருந்தார். அதன்படிதான், தமிழக பா.ஜ.க-வின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. ஊழலை வெளிக் கொண்டுவருவது, மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து போராடுவது போன்ற விஷயங்கள் மூலமாக பிரதான எதிர்கட்சியாக பா.ஜ.க செயல்படவிருக்கிறது. விரைவில் இரண்டு மாற்றங்கள் பா.ஜ.க-வில் நடக்கவுள்ளன.

``இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது வரவேற்க வேண்டிய விஷயம்"- பாஜக தலைவர் அண்ணாமலை!

ஒன்று, மாவட்டத் தலைவர்கள் மாற்றம். அ.தி.மு.க., தி.மு.க கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டிருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் அளிக்கப்படவிருக்கிறது. இரண்டாவது மாற்றம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துக் களமிறங்க முடிவெடுத்திருக்கிறோம். எங்களை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும், அ.தி.மு.க-வுக்கு எங்களுடைய வாக்குவங்கியை காட்டுவதற்கும் இந்தத் தனித்துப் போட்டி வியூகம் கைகொடுக்கும். தி.மு.க-வின் சித்தாந்தத்துக்கு எதிரான, அந்தக் கட்சிக்கு ஒரு மாற்றான முகமாக பா.ஜ.க உருவெடுத்திருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணிதான் தி.மு.க-வுக்கு நிகர் எதிரணியாக தமிழகத்தில் அமையப்போகிறது" என்றார்.

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி

தி.மு.க-வுக்கு எதிர்ப்பான அரசியல் என்கிற ஒற்றைப்புள்ளியை நோக்கி அரசியல் களத்தில் வேகமாக நகர்கிறது பா.ஜ.க. சமீபத்தில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் போனில் பேசியிருக்கும் பிரதமர் மோடி, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தாக்கியதன் மூலமாக தி.மு.க-வுக்கு அண்ணாமலை 'செக்' வைத்ததைப் பாராட்டிப் பேசினாராம். பா.ஜ.க ஒருபக்கம் களத்தில் 'ஸ்கோர்' செய்துவரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்திலிருக்கும் அ.தி.மு.க-வுக்குள், `நானா.. நீயா' போட்டி மல்லுக்கட்டுகிறது. தன்னுடைய வலுவைக் காட்டுவதற்காக, முல்லைப்பெரியாறு விஷயத்தை மையப்படுத்தி தென் மாவட்டங்களில் திரளான ஆர்ப்பாட்டத்தை நடத்திக் காண்பித்துவிட்டார் ஓ.பி.எஸ். சென்னையை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், உடனடியாக சாலையில் களமிறங்கி தன் பங்குக்கும் அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. இருவருக்கும் இடையில், `யார் களத்தில் எதிர்க்கட்சித் தலைவர்?' பஞ்சாயத்து களைக்கட்டுவதால், அ.தி.மு.க-வுக்குள் சலசலப்புகளுக்குப் பஞ்சமில்லை.

அரசுக்குக் கோரிக்கை: 'ஓ.பி.எஸ் பாணி அறிக்கை அரசியல்' - சசிகலாவின் புதிய திட்டம் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றொருபுறம், `அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர்' என்கிற பெயரில் அரசுக்கு எதிரான அறிக்கைகள் வெளியிடுவதன் மூலமாக, தன்னையும் ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அடையாளப்படுத்திக்கொள்ள முயல்கிறார் சசிகலா. அ.தி.மு.க-வுக்குள் நடைபெறும் இந்த முக்கோண யுத்தம், பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்த்தை அவர்கள் தக்கவைப்பதில் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. நம்மிடம் பேசிய அரசியல் வல்லுநர்கள் சிலர், ``முல்லைப்பெரியாறு விவகாரம் மட்டுமல்லாமல், கச்சத்தீவு, நிலக்கரி இறக்குமதி, தி.மு.க-வின் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது உள்ளிட்ட விவகாரங்களையும் கையிலெடுத்து அரசியல் செய்யவிருக்கிறது பா.ஜ.க. தங்களுக்குள் நடக்கும் 'ஈகோ' யுத்தத்தை அ.தி.மு.க முடிவுக்குக் கொண்டு வராதவரை, பிரதான எதிர்க்கட்சி என்கிற இடத்தை தக்கவைப்பதற்கு அவர்கள் போராடத்தான் வேண்டியிருக்கும். 2011-ல் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தன் பொறுப்பை உணர்ந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டிருந்தால், இன்றைக்கு அவர் கட்சி இரண்டு சதவிகித வாக்குகளுக்குக் கீழே பின்தங்கியிருக்காது. அது போன்ற நிலைமை ஏற்படாதவாறு அ.தி.மு.க-தான் புத்திசாலித்தனமாக அரசியல் செய்ய வேண்டும்" என்றனர்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

'தி.மு.க-வுக்கு மாற்று யார்?' என்று நடக்கும் இந்த யுத்தத்தில், பா.ஜ.க., அ.தி.மு.க-வுக்கு ஈடாக நாம் தமிழர் கட்சியும் களமாடுகிறது. எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கும் அந்தக் கட்சி, சித்தாந்தரீதியில் தி.மு.க-வை வீழ்த்தி, 'தமிழர்' என்கிற அடையாளத்துடன் இளைஞர்களின் வாக்குகளைக் கவர வியூகம் வகுக்கிறது. ஆனால், களத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க மல்லுக்கட்டுவதுபோல, இன்னமும் நாம் தமிழர் தம்பிகள் களமிறங்கவில்லை. 'பிரதான எதிர்கட்சி'-க்கான போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை வரும் உள்ளாட்சித் தேர்தல் வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும். பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு