Published:Updated:

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கட்சி கொறடா ரேஸ்! -அ.தி.மு.க-வில் முந்துவது யார்?

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் (கோப்பு படம்)
அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் (கோப்பு படம்)

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக, ‘அவர் கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சூழலில், அவருக்கு எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டால், அவர் கைதுசெய்யப்படும்பட்சத்தில் கட்சியின் இமேஜ் பாதிக்கும்’ என்று பேசியிருக்கிறது சீனியர் வட்டாரம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்தே அ.தி.மு.க-வில் இன்னும் முடிவுறாத நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகளை எட்டிப்பிடிக்க நடக்கும் ரகளை, கட்சியில் களைகட்டியிருக்கிறது. வரும் ஜூன் 14-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், இந்த இரு பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படவிருக்கின்றனர். பதவிகளுக்கான ரேஸில் யாரெல்லாம் இருக்கிறார்கள்... அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது என்பதை கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் (கோப்பு படம்)
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் (கோப்பு படம்)

நம்மிடம் பேசிய டெல்டா மாவட்ட அ.தி.மு.க சீனியர் தலைவர் ஒருவர், “கொறடா பொறுப்புக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் பெயர் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க-வுக்குப் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக, கட்சியின் கொறடா பதவிதான் அதிகாரமிக்கது. ஆகவே, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன் ஆகிய இருவரில் ஒருவருக்கு கொறடா பதவியளித்தாக வேண்டிய நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இவர்களில் அன்பழகன் சீனியர் என்பதால், அவருக்கு சான்ஸ் கிடைக்கலாம்.

”நானும் முன்னாள் முதலமைச்சர்தான்” - அறிக்கை ஈகோ யுத்தத்தில் பன்னீர் - எடப்பாடி!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கெனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான பஞ்சாயத்து இருந்தபோது, எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும்விதமாக, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தனபாலை எதிர்கட்சித் தலைவராக்க வேண்டுமென்று கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கொம்பு சீவிவிட்டார். தலைவர் பொறுப்பை எடப்பாடி தட்டிச் சென்றுவிட்டதால், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பதவியளித்தாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மற்றொருபுறம், தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக குமுறலில் இருக்கும் முக்குலத்தோர் சமூக எம்.எல்.ஏ-க்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைக் கேட்கிறார்கள். குறிப்பாக, சீனியர்களான வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடையே போட்டி வலுத்திருக்கிறது. இவர்களுக்கு இடையே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன் பங்குக்கு நெருக்குதல் கொடுக்கிறார்.

எடப்பாடியிடம் வாழ்த்து பெறும் சி.விஜயபாஸ்கர்
எடப்பாடியிடம் வாழ்த்து பெறும் சி.விஜயபாஸ்கர்

ஜூன் 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த விஜயபாஸ்கர், ‘என்னை எப்படியாவது சிறையில் அடைத்துவிட வேண்டுமென்று தி.மு.க-வினர் தீவிரமாக முயல்கிறார்கள். கட்சியில் அமைப்புச் செயலாளராக இருந்தாலும், அரசுரீதியாக ஒரு பதவி இருந்தால்தான் எனக்குப் பாதுகாப்பாக இருக்கும். கடந்த காலங்களில் கட்சிக்காக எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். பல பழிச்சொல்களைத் தாங்கியிருக்கிறேன். விராலிமலை தொகுதியில் எனக்கு வந்த மிரட்டல்கள், நெருக்கடிகளையெல்லாம் கடந்துதான் ஜெயித்திருக்கிறேன். பன்னீர் அண்ணனுக்கும் உங்களுக்கும் நான் பொதுவானவன். எனக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைத் தாருங்கள்’ என்று கேட்டிருக்கிறார். ‘நான் யோசித்துவிட்டுச் சொல்கிறேன்’ என்று விஜயபாஸ்கரை எடப்பாடி அனுப்பிவிட்டார்.

``எப்போதுமே நம்பர் டூ தானா?” - பன்னீர் கோட்டைவிட்ட தருணங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்தநாள் காலையில் எழும்பூரிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பன்னீரை எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர், சேலம் இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அங்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்துப் பேச்சு ஓடியது. அப்போது எடப்பாடி, ‘துணைத் தலைவர் பதவியை விஜயபாஸ்கர் கேட்கறாப்ள. அதான் உங்ககிட்ட பேசிக்கலாம்னு வந்தேன்’ என்றார். அதற்கு பன்னீர், ‘நீங்க யாரைச் சொல்றீங்களோ, அவங்களை ஏத்துக்கப் போறோம். நீங்களே முடிவெடுங்க’ என்றுவிட்டார். இரு தலைவர்களுமே மறுப்பேதும் தெரிவிக்காததால், தனக்குத்தான் பதவி கிடைக்குமென விஜயபாஸ்கர் நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால், கட்சிக்குள் இது சர்ச்சை அலையை உருவாக்கியிருக்கிறது.

பன்னீரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்
பன்னீரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்

பொள்ளாச்சி பாலியல் கொடுமை விவகாரம் வெடித்தபோது, அப்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை அந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி சர்ச்சையானது. அதற்கு ஜெயராமன் மறுப்பு வெளியிட்டும், சர்ச்சை ஓயவில்லை. ‘அரசுப் பதவியில் இருப்பவர்கள் மீது சர்ச்சைகள் கிளம்பினால், அது தேவையில்லாமல் கட்சியின் இமேஜை பாதிக்கும்’ என்று அப்போதே சீனியர்கள் சிலர் எடப்பாடிக்கு அட்வைஸ் செய்தனர். இப்போது, விஜயபாஸ்கர் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. குட்கா வழக்கு, கொரோனா ஊழல் என ஏதாவது ஒரு வழக்கில் அவர் கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சூழலில், அவருக்கு எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டால், அவர் கைதுசெய்யப்படும்பட்சத்தில் அது, கட்சியின் இமேஜை பெருமளவு பாதிக்கும். ‘அ.தி.மு.க-வின் சட்டமன்ற துணைத் தலைவர் கைது‘ என்றுதான் பத்திரிகைகள் பெரிதாக எழுதும். இதெல்லாம் தேவையா?’ என பன்னீரிடமும் எடப்பாடியிடமும் சில சீனியர்கள் கேட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம்தான் அ.தி.மு.க-வில் அடுத்த சர்ச்சைக்கு வித்தாக இருக்கப்போகிறது” என்றார்.

ஜூன் 14-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பெரிய சலசலப்பு ஏதும் ஏற்படாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கூட்டத்துக்கு முதல்நாளே, யாருக்கு எந்தப் பதவி என்பது கட்சியின் எம்.எல்.ஏ-க்களுக்கு தெரியப்படுத்தப்படுமாம். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பாகவும் இந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. எதிர்கட்சித் துணைத் தலைவர், கொறடா பதவிகளுக்கான ரேஸில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது அன்றைய தினம் தெரிந்துவிடும்.

மிஸ்டர் கழுகு: பன்னீரின் தனிக்குழு யோசனை... மௌனம் காக்கும் எடப்பாடி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு