Published:Updated:

“தமிழக பி.ஜே.பி-யின் அடுத்த தலைவர் யார்?”- தொடங்கியது விவாதம்!

ந.பொன்குமரகுருபரன்

தமிழக பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த மாநிலத் தலைவர் யார்? என்கிற விவாதம் தொடங்கியுள்ளது.

kamalalayam
kamalalayam

தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பல கடும் விமர்சனங்கள், தோல்விகள், அரசியல் சூறாவளிகளுக்கு இடையில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பி.ஜே.பி-யை வழிநடத்தி வந்தவருக்கு, தகுந்த சன்மானத்தை டெல்லி மேலிடம் வழங்கியுள்ளது என பி.ஜே.பி-காரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

என் கடுமையான உழைப்புக்குக் கிடைத்த மரியாதையாகத்தான் இதைப் பார்க்கிறேன். ஆண்டவனுக்கும், ஆள்பவருக்கும் (மோடிக்கும்) என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழிசை

முதுபெரும் காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தனின் மகள்தான், தமிழிசை செளந்தரராஜன். தந்தையின் பாதைக்கு நேர் எதிர்ப்பாதையைத் தேர்ந்தெடுத்த தமிழிசை, பி.ஜே.பி-யில் மாநிலப் பொதுச் செயலாளர், துணைத் தலைவர், தேசியச் செயலாளர் எனப் படிப்படியாக மேலே வந்தவர். தமிழக பி.ஜே.பி-யின் முதல் பெண் மாநிலத் தலைவரும் அவர்தான்.

தமிழகத்தில் என்.ஐ.ஏ 'அதிரடி' - தேசப் பாதுகாப்பா, பி.ஜே.பி உள்நோக்கமா?

தெலங்கானா, ஆந்திரா என ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டபோதிலும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான இ.எஸ்.எல்.நரசிம்மனே இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வந்தார். சமீபத்தில்தான் ஆந்திராவுக்குப் புதிய ஆளுநராக பிஸ்வாபுஷன் ஹரிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, தற்போது தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டவுடன், தமிழக பா.ஜ.க-வின் அடுத்த மாநிலத் தலைவர் யார்? என்கிற விவாதம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பி.ஜே.பி. மாநில நிர்வாகி ஒருவர், “முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கான வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளது.

`மருத்துவ அணிச் செயலாளர் முதல் தெலங்கானா ஆளுநர் வரை...!' - தமிழிசை கடந்துவந்த பாதை

புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், கட்சியின் இமேஜை மாற்றலாம் என்கிற கருத்தும் டெல்லித் தலைமைக்கு இருப்பதால், கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி. நரசிம்மன், திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன” என்றார்.

அமித் ஷா
அமித் ஷா

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களைவிட இங்கு வேறு வகையான அரசியல் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறாராம் பி.ஜே.பி. தலைர் அமித் ஷா. தமிழகத்தில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் உள்ள பட்டியலின மக்களின் பிரதிநிதியாகக் குறிப்பிடும்படி, பி.ஜே.பி-யில் இதுவரையில் பெரிய தலைவர்கள் இல்லை. அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு அளிப்பதால், பட்டியலின வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் எனவும் பி.ஜே.பி. கணக்குப் போடுகிறதாம். ‘யாரும் எதிர்பார்க்காத ஒருவர்தான் சர்ப்ரைஸாக தலைவராவார்’ என்கிறது டெல்லி பி.ஜே.பி. வட்டாரம்.

இதனிடையே, தமிழிசையை மாநிலங்களவை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சர் பொறுப்பு தருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆளுநர் பொறுப்பு வழங்கியதே அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டத் தான் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்துள்ளது. ஆயிரம் எதிர்கருத்துக்கள் எழுந்தாலும், தன் உடல் ரீதியிலான விமர்சனங்களையும் தைரியமாக எதிர்க்கொண்டு, தமிழகத்தில் பி.ஜே.பி. இருப்பதை பட்டித்தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியவர் தமிழிசை. அவரது உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாகத் தான் இதைப் பார்க்க முடியும்.