Published:Updated:

`ட்விட்டரில் கவிதைப் போர்; ராகுலின் நேரடி கேள்வி!’-எல்லைப் பிரச்னையில் மோதிக்கொள்ளும் காங் - பா.ஜ.க.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``கைகளில் வலி இருக்கும்போது அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டும். ஆனால், அந்த வலிக்கு கைதான் முக்கியக் காரணமாக இருக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்...”

இந்தியா- சீனாவுக்கு இடையே, கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பதற்றம் நிலவிவந்தது. இதையடுத்து, இருநாடுகளும் தங்கள் நாட்டுப் படைவீரர்களை எல்லைகளில் குவித்துவந்தன. இதனால், போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் நிலவிவந்தது. இந்த நிலையில், இரு நாடுகளின் அரசாங்கமும் பிரச்னையை அமைதியான முறையில் பேசித்தீர்க்கத் தயாரானது. தொடர்ந்து, பேச்சுவார்த்தைகளும் ராணுவ உயர் அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றன. எல்லையில் உள்ள சீனப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் இந்தியா கோரிக்கை விடுத்ததாகவும், சீனாவும் அதை ஒப்புக்கொண்டு வீரர்களை எல்லையிலிருந்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த எல்லைப் பிரச்னை தொடர்பான குழப்பங்கள் தொடர்ந்து நிலவிவருவதாகத் தெரிகிறது. தற்போது, இந்தப் பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க கட்சித் தொண்டர்களுடன் காணொலி வழியாக உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குப் பிறகு, தங்கள் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் திறன் வேறு ஏதேனும் நாட்டுக்கு இருந்தால், அது இந்தியா தான். இதை உலக நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன” என்று கூறியிருந்தார். இதை விமர்சிக்கும் விதமாக, ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பிரபல உருது - பாரசீகக் கவிஞரான மிர்சா காலிப்பின் வரிகளின் வடிவத்தைப் பயன்படுத்தி, ``எல்லைகளில் நிலவும் யதார்த்தமான சூழல் பற்றி அனைவருக்கும் தெரியும். இதயத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க இது ஒரு நல்ல யோசனையாக இருக்கும்” என்று கூறினார்.

ராகுல் காந்தி ட்வீட் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கைகளில் வலி இருக்கும்போது அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டும். ஆனால், அந்த வலிக்கு கைதான் முக்கியக் காரணமாக இருக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்” என்று பதிவிட்டார். இந்த வரிகளை 20-ம் நூற்றாண்டின் கவிஞர் மன்சார் லக்னவி என்பவர் எழுதியுள்ளார். அவர் எழுதியதில் உள்ள 'இதயம்' என்ற வார்த்தைக்குப் பதிலாக ராஜ்நாத் சிங்,'கை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்த கவிதைக்கு ராகுல் காந்தி, ``கை சின்னத்தைப் பற்றி அவர் தனது கருத்தைப் பதிவுசெய்து முடித்துவிட்ட பிறகு, அவரால் `சீனப் படையினர் லடாக் பகுதியை ஆக்கிரமித்துள்ளார்களா’ என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியுமா” என்று நேரடியாகத் தனது கேள்வியை எழுப்பியுள்ளார்.

`லாக்டௌன், வைரஸூக்குப் பதிலாகப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது!’-ராகுல் காந்தி உரையாடலில் ராஜீவ் பஜாஜ்
அடுத்த கட்டுரைக்கு