Published:Updated:

`கோவிட்19 சூழலை பாகிஸ்தான் கூட சிறப்பாக கையாண்டுள்ளது!’ - சர்வதேச அறிக்கை குறித்து ராகுல்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கொரோனா நோய் தொற்று சூழலை இந்தியாவை விட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட சிறப்பாக கையாண்டுள்ளதாகவும், இந்தியாவின் இந்த பொருளாதார வீழ்ச்சி பா.ஜ.க அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதியம் (International Monetary Fund -IMF), உலக பொருளாதார நிலை தொடர்பான ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 10.3% சரிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதியத்தின் ஆய்வறிக்கையில், இந்தியாவின் தனி நபர் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 1,877 டாலராக சரியும் எனவும், ஆனால் வங்கதேசத்தில் தனிநபர் ஜி.டி.பி 1,888 டாலராக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, ஊரடங்கு காரணமாக, வங்கதேசத்தை விட இந்திய பொருளாதாரம் படுமோசமான சரிவைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இரட்டை இலக்க சரிவை சந்திக்கும் என்பதால், தொழில்துறை மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம், நடப்பு நிதியாண்டில் வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி மைனஸில் செல்லாமல் 3.80 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும், நேபாளம் 2.50 சதவீதம், மியான்மர் 2 சதவீதம், சீனா 1.90 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும் கணித்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அந்த வரைபடத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, "இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி பா.ஜ.க அரசின் மகத்தான சாதனை" என்று மத்திய அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், கொரோனா நோய் தொற்று சூழலை இந்தியாவை விட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட சிறப்பாக கையாண்டுள்ளதாகவும், இந்தியாவின் இந்த பொருளாதார வீழ்ச்சி பா.ஜ.க அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், 6 ஆண்டு ஆட்சியில் பா.ஜ.கவின் வெறுப்பு நிரம்பிய கலாசார தேசியவாதத்தின் அருமையான சாதனை, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது என்பது தான் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 2021 ம் ஆண்டில் இந்தியா 8.8 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னேற வாய்ப்புள்ளது, இதனால் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் நிலையை மீண்டும் பெற முடியும், இது சீனாவின் வளர்ச்சி விகிதத்தை விட 8.2 சதவீதம் தாண்டிவிடும் என்று சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு