Published:Updated:

குமரி: ஃபிட்னெஸ் பற்றிக் கேட்ட மாணவி - ஒற்றைக் கையில் தண்டால் எடுத்து அசத்திய ராகுல் காந்தி!

தண்டால் எடுக்கும் ராகுல் காந்தி
தண்டால் எடுக்கும் ராகுல் காந்தி

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டும் என்பதுதான் என் கருத்து. அறப்போராட்டமாகவும், அன்பு போராட்டமாகவும் அது இருக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்களின் சாகசங்களையும், கண்டுபிடிபுகளையும் பார்வையிட்ட ராகுல்காந்தி பேசுகையில், "உங்கள் அறிவின் சிறிய உதாரணத்தை நான் பார்த்து பூரிப்படைந்துள்ளேன். இன்ப அதிர்ச்சியில் நான் நின்றுகொண்டிருக்கிறேன். மாணவர்களின் கலைத் திறன் அருமையாக இருந்தது. பள்ளியில் அனைத்து திறமைகளையும் தந்து வளர்ப்பதை கண்டு பெருமை அடைகிறேன்.

பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது
பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது

அரசியல் தலைவர்கள் பலரும் பலவிதமாக சொல்லலாம். நான் அரசியல்வாதி என்பதை கடந்து பல விஷயங்களை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டின் வளர்ச்சி பற்றியும் மாணவர்களின் வளர்ச்சி பற்றியும் சிந்தித்து கொண்டிருக்கிறேன். ஒரு உதாரணத்துக்கும், இரண்டு மாணவிகளை எடுத்துக்கொண்டால், இருவருக்கும் தனித்தனி கனவுகள் உள்ளன. ஒரு மாணவி டாக்டர் ஆக வேண்டும் எனவும், மற்றொரு மாணவி வங்கி மேலாளர் ஆக வேண்டும் எனவும் விரும்புகிறார். வங்கி மேலாளர் ஆக விரும்புபவரை டாக்டராக ஆக்கினால் என்ன ஆகும். மாணவர் சமுதாயத்தால் என்னென்ன இலக்குகள் அடைய முடியும் என்பதை நாம் திட்டமிட வேண்டும். உங்கள் கனவுகளை அறிந்துகொண்டால் நமக்கான எதிர்கால திட்டங்களை போட முடியும் என்பதால் இந்த நிகழ்வுகளில் நான் கலந்துகொள்கிறேன்" என்றார்.

பின்னர் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்து பேசினார். மாணவ, மாணவிகளின் கேள்விகளும் அதற்கு ராகுல் அளித்த பதில்களும் பின்வருமாறு:

"எல்லோரும் வெவ்வேறு துறைகளில் என்னனென்ன ஆகவேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் அரசியலுக்கு வரவேண்டும் என யாரும் விரும்பவில்லையே?"

" அரசியலில் பல உதாரணங்கள் உள்ளன. சிலர் கொள்ளையடிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் அரசியலில் பல நல்ல தலைவர்கள் வழிகாட்டியாக உள்ளனர். நான் சீக்கிரமாக வந்ததால் உங்கள் பள்ளிக்கு வரும் வழியில் டீ சாப்பிட போனேன். அங்கு சின்ன குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் பேசினேன். ஒரு இளைஞன் விண்வெளி ஆராய்ச்சி அதிகாரியாக ஆகவேண்டும் என்றார். நான், `இஸ்ரோ அதிகாரிக்கு கடிதம் எழுதி நீங்கள் உள்ளே சென்று பார்க்க முடியுமா என முயற்சிக்கிறேன்` என்றேன்.

குமரி: `தமிழர்களைப் பிறர் ஆட்சி செய்ய தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே வரலாறு! - ராகுல்

அந்த மாணவர் நல்ல நம்பிக்கை கொண்டிருக்கிறார். இன்னும் ஊக்கப்படுத்தினால் அவர் நிலவுக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இஸ்ரோவுக்குள் போய் பர்த்துவிட்டு நமக்கு இது வேண்டாம் என முடிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது. அவரை அந்த துறையில் ஊக்குவிப்பது அரசியல் தலைவரின் கடமையாகும். அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தால், இங்கிருந்து நிறைய அரசியல் தலைவர்கள் வர வாய்பு உள்ளது. நேர்மையான தலைவர்கள், ஏழைகளுக்கு உதவக்கூடிய தலைவர்களாக உள்ளனர். நீங்கள் நல்ல தலைவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்"

"மாநில சிலபசில் படித்து கஷ்டப்பட்டு மார்க் எடுத்தபிறகும் டாக்டர் ஆக முடியவில்லை. தடையாக இருக்கும் நீட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வித்துறையின் தூண்கள். இருவரும் முக்கியமானவர்கள். ஆசிரியர் இல்லாமல் மாணவர் படிக்க முடியாது, மாணவர் இல்லாமல் ஆசிரியரால் பாடம் நடத்த முடியாது. என்ன வேண்டும் என மாணவர்களிடம் கேட்காமல் திட்டம் தயாரித்தால் அது வீணாக போகும். நீட் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை தகர்க்கும் மோசமான, பயனில்லாத திட்டம். நான் மாணவனாகவும், ஆசிரியராகவும் இல்லாமல் படிக்க ஆலோசனைக் கூறினால் நன்றாக இருக்குமா? அதே சமயம் நான் உங்களிடம், என்ன தேவை இருக்கிறது, என்ன வேண்டும் என கேட்க வேண்டும். பணிவு என்பது மிகவும் நல்ல காரியம். உங்களைப் போல நானும் மாணவனாக இருந்தபோது, யாரவது அப்படி படி, இப்படி படி என ஆலோசனை கூறினால் எரிச்சலாக வரும். எனக்கே எரிச்சல் வந்தபோது நான் உங்களிடம் என்ன சொல்ல முடியும். அதற்கும் லிமிட் இருக்கிறது"

மாணவர்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி
மாணவர்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி

"நம் பிரதமரை சந்தித்தால் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?"

"தந்திரமான கேள்வி கேட்கிறீர்கள்" என பாராட்டியவர் தொடர்ந்தார். "இந்திய மக்கள் தொகை 130 கோடி. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. பல கலாச்சாரம், பண்பாடு, மொழிகள் கலந்த நாடு. இப்படி எல்லாம் இருக்கும்போது, அனைத்து மக்களும் என்ன நினைக்கிறார்கள், எதை விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு நீங்கள்பதில் பேச வேண்டும் என்று சொல்வேன்" என்றார்.

"நம் நாட்டுக்கு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவைப்பட்டால் என்ன செய்வது?"

"நானும் அதைதான் யோசிக்கிறேன். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டும் என்பதுதான் என் கருத்து. அறப்போராட்டமாகவும், அன்பு போராட்டமாகவும் இருக்க வேண்டும். கோபமும், பயமும் மக்களுக்கு இருக்கிறது. எல்லா பிளவுகளும் அகன்று மகிழ்ச்சியான இந்தியா அமைய வேண்டும்"

"உங்கள் உடலை எப்படி மெயிண்டன் பண்ணுகிறீர்கள்?"

"ரன்னிங், நீச்சல், சைக்கிளிங் ஆகிய பயிற்சிகளை செய்கிறேன். ஜூடோ பயிற்சி மேற்கொள்கிறேன். அதிகமாக இனிப்பு சாப்பிடுவதில்லை. அரிசி, சப்பாத்தி அதிகமாக சாப்பிடுவதில்லை. அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுகிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும். தினமும் நூறு தண்டால் எடுத்தால் தோள் வலிக்க தொடங்கும். எனவே ரன்னிங், சைக்கிலிங், தண்டால் என கலந்து செய்ய வேண்டும். கைக்கு, காலுக்கு என தனித்தனியாக பயிற்சி செய்ய வேண்டும். இந்திய தேசத்திற்கும் அப்படித்தான் செய்ய வேண்டும். குறைவாகவும் சாப்பிடக்கூடாது, கூடுதலாகவும் சாப்பிடக்கூடாது. நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே எல்லாம் செய்து கொடுக்கக் கூடாது" என்றார்.

தண்டால் எடுக்கும் ராகுல் காந்தி
தண்டால் எடுக்கும் ராகுல் காந்தி

மாணவர்களிடம் கலந்துரையாடிய ராகுல்காந்தி ஒரு மாணவியின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவியுடன் நடனமாடினார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் பின்னர் உடலை பேணுவது குறித்து கேட்ட மாணவி முன்பு ஒரு கையால் தண்டால் எடுத்து அசத்தினார் ராகுல் காந்தி.

அடுத்த கட்டுரைக்கு