Published:Updated:

``வயநாடு எம்.பி; ஆனாலும் இது என் குடும்பம்!” - தோல்விக்குப் பின் ராகுலின் முதல் அமேதி விசிட்

சத்யா கோபாலன்

காங்கிரஸின் பல நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் மனம் விட்டுப் பேசினர். அமேதியில் காங்கிரஸின் தோல்விக்கு தாங்களும் காரணம் எனப் பொறுபேற்றுக்கொண்டனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி ( Twitter/@INCIndia )

காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராஜீவ்காந்தி நான்கு முறை வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து ராஜீவ்காந்தியின் மகனான ராகுல் காந்தி நான்கு முறை போட்டியிட்டு மூன்று முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமேதியில் ராகுல் காந்தி
அமேதியில் ராகுல் காந்தி
Twitter/@INCIndia

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி, அமேதி மற்றும் கேரளாவில் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். நீண்ட நாள்களாக காங்கிரஸின் கையிலிருந்த அமேதி தொகுதியை இந்த முறை தட்டிப் பறித்துள்ளார் பா.ஜ.கவின் ஸ்மிருதி இரானி.

Vikatan

அமேதி தொகுதியில் தோல்வியடைந்த பிறகு நேற்று முதல் முறையாக அந்தத் தொகுதிக்கு நேரில் சென்று மக்களிடம் பேசியுள்ளார் ராகுல் காந்தி. மேலும், அந்தத் தொகுதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter/@INCIndia

அவர் மக்களிடம் பேசும் போது, ``இந்தத் தேர்தலுக்குப் பின் மக்கள் என்னை வயநாடு தொகுதியின் எம்.பி என அழைக்கலாம். ஆனால் அமேதி, என்றும் என் இதயத்தில் உள்ளது. தற்போது இங்கு வந்துள்ளது நீண்ட நாள்களுக்குப் பிறகு தாய் வீட்டுக்கு வருகை தருவதைப் போல உள்ளது. இது என்னுடைய குடும்பம். இங்கு உள்ளவர்களுக்கு ஏதேனும் தேவை என்றால் நான் 24 மணி நேரமும் இங்கு வரத் தயாராக உள்ளேன். அது நள்ளிரவு 1 மணியாக இருந்தாலும் சரி அல்லது அதிகாலை 4 மணியாக இருந்தாலும் சரி இங்கு ஓடி வருவேன்” எனக் கூறியுள்ளார்.

இதற்குப் பின்னர் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த ராகுல் காந்தி “ அமேதி மக்கள், ஸ்மிருதி இரானிக்கு வாக்களித்ததற்காக அவர்கள் மீது நான் குற்றம் சுமத்தப்போவதில்லை. நம் கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தத் தொகுதியில் தோல்விக்கு யாரையும் காரணம் கூறமுடியாது. இனிமேலாவது எதிர்க்கட்சி என்ற பொறுப்பைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து நேரத்திலும் மக்களுக்குத் துணை நில்லுங்கள். அவர்களின் தேவைகளை அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களின் தேவைகளுக்காகக் கடுமையாகப் போராடுங்கள். இதுதான் தற்போது காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான ஒன்றாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter/@INCIndia

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் பலத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தன் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் வேறு ஒரு தலைவர் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ராகுல் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.