Published:Updated:

பீகார்: `பிரசாரத்தின் போது அவர் பிக்னிக் சென்றிருந்தார்!’ - தோல்விக்கு ராகுலை சாடிய ஆர்ஜேடி தலைவர்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகாபந்தன் கூட்டணி தோல்வியைத் தழுவியதை அடுத்து. ஆர்ஜேடி தலைவர் சிவானந்த் திவாரி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் அதிகபட்சமாக 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வெறும் 19 இடங்களில் தான் வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக மகா கூட்டணி தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியை அடுத்து, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ``பீகார் தேர்தலில் 70 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த 70 இடங்களில் கூட பெருமளவில் பிரசாரங்கள் செய்யப்படவில்லை. ராகுல் காந்தி பிரசாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே வந்திருந்தார். பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வரவே இல்லை. அறிமுகமே இல்லாத நபர்கள் தான் இங்கே பிரசாரத்துக்கு வந்தார்கள்.

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்
பீகார்  தேர்தல்
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் பீகார் தேர்தல்

காங்கிரஸ் கட்சி நடக்கும் விதம் சரியில்லை. இந்த போக்கு பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமையும். பிரதமர் மோடி, ராகுலை விட வயதானவர், அவர் அதிக கூட்டங்களில் பங்கேற்றார். ராகுல் காந்தி, பிரதமர் மோடியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதிக இடங்களில் போட்டியிடக் காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், அதிக இடங்களில் வெற்றியைப் பெறுவதில்லை. பீகாரில் பல இடங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. இங்கு மட்டுமல்ல மற்ற பல இடங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருந்த நேரத்தில் சிம்லாவில் உள்ள பிரியங்கா காந்தியின் வீட்டுக்கு ராகுல் பிக்னிக் சென்றிருந்தார். இது மிகத் தவறான போக்கு" என்று சிவானந்த் திவாரி கூறியுள்ளார்.

ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி யாதவ்
ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி யாதவ்

கூட்டணி தர்மத்தை மீறியுள்ளதாக சிவானந்த் திவாரி மீது காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். முன்னதாக இந்த தேர்தலின் தோல்விக்கு காங்கிரஸ் மீது குற்றம் சுமத்த மாட்டோம் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் ஆர்.ஜே.டி-யின் சார்பாக, `இது சிவானந்த்தின் சொந்த கருத்து, கட்சியின் நிலைப்பாடு கிடையாது’ என்றும் பதிலளித்துள்ளார்கள்.

அடுத்த கட்டுரைக்கு