Published:Updated:

`கல்லூரி மைதானத்தில் திடீரெனத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்’- ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய ராகுல்! #Video

பிரசார் கூட்டம் முடிந்ததும், ராகுல் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படியே அவர் ஹெலிகாப்டரில் ஏறினார்.

Rahul
Rahul ( ANI )

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பா.ஜ.க காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது.

ராகுல்
ராகுல்

இந்நிலையில் நேற்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ஹரியானா மாநிலத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலை காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியாது எனவும் அவருக்குப் பதிலாக ராகுல் காந்தி பிரசாரத்தில் கலந்து கொள்வார் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஹரியானா மாநிலத்தில் நேற்று மதியம் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர், தன் தாய்க்கு வைரல் தொற்று இருந்ததால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார். பிரசார கூட்டம் முடிந்ததும் ராகுல் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படியே அவர் ஹெலிகாப்டரில் ஏறினார்.

ராகுல்
ராகுல்

ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மோசமான வானிலை காரணமாக கே.எல்.பி கல்லூரி மைதானத்தில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது. மேற்கொண்டு டெல்லிக்கு எப்படி பயணிக்கலாம் என அதிகாரிகள் திட்டமிட்டுக்கொண்டி ருக்க, மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களுடன் இணைந்துகொண்டார், ராகுல்.

பின்னர், அவர்களைப் பந்து வீசச் சொல்லி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். எந்த டென்ஷனும் இல்லாமல் பந்துகளை அடித்து விளையாடினார் ராகுல். இந்த வீடியோ செம வைரலாக இணையத்தைச் சுற்றிவருகிறது.

சுமார் 20 நிமிடங்கள் மாணவர்களுடன் அவர் ஜாலியாக கிரிக்கெட் விளையாடியதாகத் தெரிவித்தார் ரேவாரி போலீஸ் துணை கமிஷனர். கிரிக்கெட் விளையாடிய மாணவர்கள், ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இறுதியாக, மோசமான வானிலை தொடர்ந்ததால், சாலை மார்க்கமாக டெல்லிக்குப் புறப்பட்டார்.