Published:Updated:

ராகுல், உதயநிதி பின்னே எடப்பாடி பழனிசாமி - மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு அரசியல்!

பொங்கல் வைத்த உதயநிதி
பொங்கல் வைத்த உதயநிதி

வரும் 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வருகை தரவிருப்பதால் அ.தி.மு.க-வினர் வரவேற்பு ஏற்பாடுகளை பிரமாண்டமாகச் செய்துவருகிறார்கள்.

பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிவரும் நிலையில், மதுரை மக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுடன் கூடுதல் உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார்கள்.

தி.மு.க-வின் பொங்கல் விழா
தி.மு.க-வின் பொங்கல் விழா

காளைகளின் ஜல்லிக்கட்டு ஒருபக்கம் என்றால், அதைக் காண வரும் அரசியல் தலைவர்களால், அரசியல் ஜல்லிக்கட்டின் களமாக மதுரை மாறியிருக்கிறது.

தமிழரின் பண்பாட்டு அடையாளமான பொங்கலும் ஜல்லிக்கட்டும் தேர்தலில் தங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு விழாக்களை கொண்டாடத் தொடங்கியிருக்கின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

சமீப நாள்களாக பா.ஜ.க தமிழகம் முழுவதும் பொங்கல் விழாக்களை நடத்தியது. தி.மு.க ஒவ்வோர் ஆண்டும் சமத்துவ பொங்கலுடன் தமிழ்ப் புத்தாண்டையும் கொண்டாடிவருகிறது.

இந்தநிலையில், மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டைக் காண காங்கிரஸ் எம்.பி-யும் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் வருகை தருகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

இன்று காலை மதுரை வில்லாபுரத்தில் எஸ்ஸார் கோபி ஏற்பாடு செய்த 2,000 பெண்கள் கலந்துகொண்ட சமத்துவப் பொங்கலைத் தொடங்கிவைத்தார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. அப்போது அவர் பேசும்போது, ``மதுரைன்னாலே ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும். பாசம், வீரம்.

பொங்கல் என்பது சமூகநீதியை, சமத்துவத்தை உருவாக்கும் வகையில் கலைஞர் உருவாக்கினார். விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி. நாம் இழந்த உரிமைகளைப் பெறுவோம். பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க-வை அகற்றுவோம்" என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காணச் சென்றார். மதியம் 12 மணிக்கு ராகுல் மதுரைக்கு வந்தார். அவருக்காக விமான நிலையம் முதல் மதுரை நகரமெங்கும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் வந்திருந்தனர்.

ராகுல் காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஒரு மணி நேரம் பார்த்து ரசித்துவிட்டுக் கிளம்பினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

வரும் 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வருகை தரவிருப்பதால் அ.தி.மு.க-வினர் வரவேற்பு ஏற்பாடுகளை பிரமாண்டமாகச் செய்துவருகிறார்கள். அரசியல் தலைவர்களின் தொடர்ச்சியான வருகையால் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு களைகட்டியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு