Published:Updated:

ஊரெல்லாம் பினாமி கம்பெனிகள்... ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தும் வேலுமணி நெட்வொர்க்!

வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி

வேலுமணியின் சொந்த ஊரான கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருந்துவந்தது

ஊரெல்லாம் பினாமி கம்பெனிகள்... ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தும் வேலுமணி நெட்வொர்க்!

வேலுமணியின் சொந்த ஊரான கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருந்துவந்தது

Published:Updated:
வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி

இது ரெய்டு சீஸன். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு அடித்து சற்றே ஓய்ந்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ். அடுத்தடுத்து ரெய்டுகள் தொடர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை. வேலுமணி மீதான ரெய்டுக்குக் காரணம் என்ன? கோவையில் நடந்த சில விவகாரங்களை மட்டும் பார்ப்போம்.

ஹிப்பி ஹேர்ஸ்டைல், கிரிக்கெட், சினிமா வாய்ப்பு தேடல் என்று சுற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரை, அப்போதைய கோவை மாவட்டம் பேரூர் எம்.எல்.ஏ கே.பி.ராஜூவிடம் “உதவிக்கு வெச்சுக்கோங்கண்ணே” என்று சேர்த்துவிடுகிறார், அந்த இளைஞரின் தந்தை பழனிசாமி. அவரும் அ.தி.மு.க நிர்வாகிதான். அதன் பிறகு குனியமுத்தூர் பேரூராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் சிறு சிறு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்கிறார் அந்த இளைஞர். பணிகள் முடிந்ததும் பில் தொகைக்காக ஒவ்வொரு டேபிளாக ஃபைல்களை எடுத்துக்கொண்டு பவ்யமாக வலம்வருவார். அவர்தான் பிற்காலத்தில் அ.தி.மு.க-வின் அதிமுக்கிய அமைச்சராகக் கோலோச்சிய எஸ்.பி.வேலுமணி! பழைய வரலாறு இது. இன்றைக்கு அவரை சுற்றிச் சுழன்றடிக்கும் ஊழல் விவகாரங்களைப் பார்ப்போம்.

ஊரெல்லாம் பினாமி கம்பெனிகள்... ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தும் வேலுமணி நெட்வொர்க்!

வேலுமணியின் சொந்த ஊரான கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருந்துவந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டால், பதில் கிடைக்காது. மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. இந்தநிலையில்தான், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கோவை மாநகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்ற ராஜகோபால் சுன்கரா, சுமார் 2,500 மாமன்றத் தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட்டார். அதேசமயம், கோவையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் தியாகராஜன், மாநகராட்சியின் வரவு, செலவு குறித்த ‘பேபுக்’-ஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கினார். கிட்டத்தட்ட 15,000 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணங்கள்தான் சுடச் சுட நம்மைத் தேடிவந்தன. அதன் அடிப்படையில், களத்தில் இறங்கி, பலரிடமும் விசாரித்தது ஜூ.வி டீம்.

என்ன நடந்தது என்பதை நம்மிடம் விவரித்தார் கோவை சமூகச் செயற்பாட்டாளர் எஸ்.பி.தியாகராஜன். ‘‘மாநகராட்சியின் வரவு, செலவு குறித்த பேபுக்-ஐ ஆராய்ந்தபோது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் சில நிறுவனங்கள் பல நூறு கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளன. வேலுமணியின் அண்ணன் அன்பரசனுக்குச் சொந்தமான செந்தில் அண்ட் கோ மற்றும் அவருக்கு வேண்டப்பட்ட கே.சி.பி., வர்தன், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா உள்ளிட்ட 12 நிறுவனங்கள் 2016 மார்ச் முதல் 2021 மார்ச் வரை கோவை மாநகராட்சியில் 697 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்து பணிகளைச் செய்துள்ளன. இது தவிர, 123 கோடி ரூபாய்க்கு பணிகள் முடிக்கப்பட்டு, பணம் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது. 135 கோடி ரூபாய்க்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 1,000 கோடி ரூபாய்க்குப் பணிகள் நடக்கின்றன. அதிலும் பெரும்பாலான டெண்டர்களை இதே நிறுவனங்கள்தான் எடுத்திருக்கின்றன. இதில், டெண்டர் விதிமீறல்களும், திட்டப்பணிகளில் முறைகேடுகளும் நடந்துள்ளன. கோவை மாநகராட்சியிலிருக்கும் ஐந்து மண்டலங்களில் 60 சதவிகிதப் பணிகள் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் மட்டுமே நடந்துள்ளன. இந்த இரண்டு மண்டலங்களில்தான் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியும், அவரது வீடும் இருக்கின்றன. எனவே, இது குறித்து தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் சீரியஸாக.

கிழித்த கோட்டைத் தாண்டாத அதிகாரிகள்!

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் உள்விவரங்களை அறிந்த அதிகாரிகள் சொன்ன தகவல்கள் இவை... ‘‘வேலுமணி தரப்பினரின் முறைகேடுகளுக்கு அதிகாரிகளின் நெட்வொர்க் பெரும் துணை போயிருக்கிறது. உள்ளாட்சித்துறையில் எந்த அதிகாரியாக இருந்தாலும், வேலுமணி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார்கள். தீர்மானங்களை உடனடியாகப் பதிவேற்றச் சொல்லி, உள்ளாட்சி முறைமன்ற நடுவம் உத்தரவிட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும்கூட, அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையாளர்களாக இருந்தவர்கள் அதைச் செய்யவில்லை. மேற்கு மண்டலத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ள சரவணக்குமாருக்கு மட்டுமே சுமார் 1,000 கோடி ரூபாய் பணிகளை முடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே மூன்று முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; ஐந்து முறை எச்சரிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி வாகனப் பராமரிப்பு பணிமனையில் டீசல் மாயமான புகாரிலும் சிக்கினார். இப்படி ஏராளமான புகார்களில் சிக்கிய சரவணக்குமாருக்கு, மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளர், ஸ்மார்ட் சிட்டி செயற்பொறியாளர் (பொறுப்பு), JnNURM திட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு), வெள்ளலூர் குப்பைக்கிடங்கு திடக்கழிவு மேலாண்மை செயற்பொறியாளர் (பொறுப்பு) என்று பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதற்கு முக்கியக் காரணம், வேலுமணியிடம் இவர் காட்டிய விசுவாசம்தான்.

அன்பரசன், சந்திர பிரகாஷ், சந்திரசேகர்
அன்பரசன், சந்திர பிரகாஷ், சந்திரசேகர்

வெள்ளலூரில் 94 லட்ச ரூபாயில் வாகனப் பராமரிப்பு பணிமனை அமைப்பதற்கு, 2017-ல் அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார். பொதுவாக, மாநகராட்சியில் பணிகள் நடக்க வேண்டுமானால், தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், ‘இது அவசரப் பணி என்பதால், பிறகு தீர்மானம் நிறைவேற்றிக்கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டு, அந்தப் பணி கே.சி.பி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு அதற்குத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்கு வாகனப் பராமரிப்பு பணிமனை அமைக்கப்படவில்லை. கோவை பெரியகுளம் அருகே ஸ்மார்ட் சிட்டி பணிக்காகக் கட்டப்பட்ட தடுப்புச் சுவர், சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது. இந்தப் பணியை செய்ததும் இதே நிறுவனங்கள்தான். அப்படியென்றால், இந்த நிறுவனங்கள் 2,000 கோடி ரூபாய் பணிகளை எப்படிச் செய்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை!’’ என்று படபடத்தார்கள்.

இந்த விவகாரத்தின் பின்னணியில் சில நிறுவனங்களும் கைமாறியதாகக் கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் லோகநாதன். ‘‘டெண்டர் முறைகேடு சர்ச்சையில் சிக்கிய வர்தன், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா இரண்டு நிறுவனங்கள், கடந்த ஆண்டு வேறு நிறுவனங்களுக்குக் கைமாறியுள்ளதாக கோவை மாநகராட்சி தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கன்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை ஹர்ஷா இன்ஃப்ரா நிறுவனமும், வர்தன் நிறுவனத்தை இ.கே.இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனமும் வாங்கியுள்ளன. வர்தன் நிறுவனத்தை வாங்கியுள்ள இ.கே.இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், ஆர்.எஸ்.இன்ஃபோ- டெயின்மென்ட் என்ற சினிமா நிறுவனத்தை நடத்திவரும் எல்ரெட் குமாருக்குச் சொந்தமானது. மேலும், இவர்களின் நெட்வொர்க்கில் உள்ளதாகக் கூறப்படும் கே.சி.பி.இன்ஃப்ரா, கான்ஸ்ட்ரோமால் ஆகிய நிறுவனங்களில், கடந்த ஓராண்டில் புதிதாகப் பலர் இயக்குநர்களாகப் பொறுப்பேற்றுள்ளார்கள். இதையெல்லாம் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது’’ என்றார்.

ஒரே நெட்வொர்க்... பல நிறுவனங்கள்!

டெண்டர் விவகாரங்களில் அனுபவமுள்ள சிலரோ, “புகாருக்குள்ளான கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷும், ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரும் நெருக்கமானவர்கள். சந்திரசேகரும் கே.சி.பி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து விலகினார். சந்திர பிரகாஷின் தாய் சுந்தரி, வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர். கன்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விஷ்ணுவர்தன், கார்த்திக் ஆகியோர் பார்ட்னர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சந்திர பிரகாஷின் உறவினர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் வேறு சில நிறுவனங்களிலும் பொறுப்புகளில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கார்த்திக் என்பவர் `பழனிசாமி ரங்கராஜன்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர், அந்த இரண்டு பெயர்களிலுமே கே.சி.பி இன்ஃப்ரா, ஆலயம் வெல்ஃபேர், ஆலயம் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட சில நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறார். இப்படி இவர்களின் நெட்வொர்க்கில் இயங்கும் பல நிறுவனங்கள், வெவ்வேறு நிறுவனங்களைப் போல டெண்டரில் கலந்து கொள்ளும். ஆனால், இவர்களின் நெட்வொர்க்கைத் தாண்டி டெண்டர் எடுக்க முடியாது. போத்தனூர் பகுதியில் சாக்கடைக் குழாய்களை மாற்றியமைக்கும் 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணிக்கு கன்ஸ்ட்ரானிக்ஸ், வர்தன் இரண்டு நிறுவனங்களுமே விண்ணப்பித்தன. அதில், வர்தன் நிறுவனத்துக்கு டெண்டர் கிடைக்கிறது. இப்படிப் பெரும்பாலான டெண்டர்களில் இவர்களின் நிறுவனங்களே கலந்துகொண்டு, அதில் ஒரு நிறுவனம் பணி எடுப்பது வாடிக்கையாக இருக்கிறது.

தியாகராஜன்
தியாகராஜன்

பல்டி அடிக்கும் சந்திர பிரகாஷ்!

கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டால், இந்த விவகாரத்தில் தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார் திட்டவட்டமாக. ‘‘கடந்த ஐந்தாண்டுகளாக மாநகராட்சியில் நான் வேலையே எடுத்ததில்லை. இதற்கு முன்பும்கூட, ஒரு சதவிகித, இரண்டு சதவிகித அளவில் மட்டுமே பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். இப்போது அதுவும் கிடையாது’’ என்றவரிடம், ‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாநகராட்சி அளித்துள்ள விவரங்களின் அடிப்படையில்தான் கேட்கிறோம்’’ என்றதற்கு, ‘‘டெண்டரில் வேண்டுமானால் நான் கலந்துகொண்டிருப்பேன். பணிகளை எடுக்கவில்லை. மற்ற நிறுவனங் களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’’ என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 39 கோடி ரூபாய் மதிப்பில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, ‘ஐ லவ் கோவை’, செல்ஃபி கார்னர், தண்ணீர் ஏ.டி.எம் ஆகிய திட்டப் பணிகளை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். அப்போது கே.சி.பி நிறுவனத்தின் பேட்ஜுடன் இதே சந்திர பிரகாஷ்தான் வலம் வந்தார். ஐ லவ் கோவை, ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலையில் வைக்கப்பட்டுள்ள கடிகாரம் போன்ற ஸ்மார்ட் சிட்டியின் பல்வேறு பணிகளிலும் கே.சி.பி நிறுவனத்தின் முத்திரை இருக்கும் நிலையில் சந்திர பிரகாஷின் பதில் விநோதமாக இருக்கிறது!

மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணக்குமாரிடம், அவர்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டோம். ‘‘என்னுடன் பணியாற்றும் அலுவலர்கள், காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான தகவல்களைக் கூறிவருகிறார்கள். அதில் எதுவும் உண்மை இல்லை. உயரதிகாரிகள் கூறும் பணியை முடிக்க வேண்டியது என் கடமை. அதைத்தான் நானும் செய்தேன். என் மீதான புகார்களுக்கு அதிகாரிகளிடம் விளக்கம் அளித்திருக்கிறேன்” என்றார்.

லோகநாதன்
லோகநாதன்

இந்த முறைகேடுகள் குறித்து, விளக்கம் கேட்டு தற்போதைய கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவைத் தொடர்பு கொண்டோம். நேரில் வரச் சொன்னார். நாம் டெண்டர் பணிகள் தொடர்பான விவரங்களைக் கூறிய உடனேயே, ‘‘சரவணக்குமாரிடமிருந்து JnNURM பொறுப்பு மாற்றப்பட்டுவிட்டது. மற்றபடி, இது குறித்து நான் எதுவும் கருத்து கூற முடியாது. தீர்மானங்களை இப்போதுதான் வெளியிட்டிருக்கிறோம். நான் அதற்குள் போகவில்லை. நீங்கள் விஜிலென்ஸ் துறையில் கருத்து கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்க வேலுமணியைத் தொடர்புகொண்டோம். அவரது எண் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. அவரின் உதவியாளர்கள் சந்தோஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்புகொண்டபோதும் பலன் இல்லை. தொடர்ந்து நமது கேள்விகளை mlathondamuthur@tn.gov.in மெயிலுக்கு அனுப்பியுள்ளோம்.

*****

தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்கள்!

(2016-21 கோவை மாநகராட்சியில் எடுத்த பணிகள்)

செந்தில் அண்ட் கோ - ரூ.32.71 கோடி

கே.சி.பி இன்ஜினீயர்ஸ் – ரூ.140.32 கோடி

வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் – ரூ.152.23 கோடி

கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா – ரூ.80 கோடி

ஓசூர் பில்டர்ஸ் – ரூ.64.63 கோடி

எஸ்.பி பில்டர்ஸ் – ரூ.39.94 கோடி

மெட்ராஸ் இன்ஃப்ரா – ரூ.51.75 கோடி

விஷ்ணு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் – ரூ.43.69 கோடி

ஜே.ராபர்ட் ராஜா – ரூ. 38.73 கோடி

ஆர்.ராஜன் – ரூ. 20.25 கோடி

(குறிப்பு: இவை கோவை மாநகராட்சியின் பொதுப்பணிகள் மட்டுமே. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தனி)