Published:Updated:

அடுத்தடுத்த ரெய்டுகள்... ஆட்டம் காணும் அ.தி.மு.க!

ரெய்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டுகள்

பா.ஜ.க-வுக்குள் இருக்கும் தங்கள் ஆதரவு நபர்கள் மூலமாக, அந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ‘புரொமோஷன்’ கொடுத்து, லாகவமாக வேறொரு இடத்துக்கு மாற்றவைத்துவிட்டது காங்கிரஸ்

அடுத்தடுத்த ரெய்டுகள்... ஆட்டம் காணும் அ.தி.மு.க!

பா.ஜ.க-வுக்குள் இருக்கும் தங்கள் ஆதரவு நபர்கள் மூலமாக, அந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ‘புரொமோஷன்’ கொடுத்து, லாகவமாக வேறொரு இடத்துக்கு மாற்றவைத்துவிட்டது காங்கிரஸ்

Published:Updated:
ரெய்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டுகள்

அ.தி.மு.க தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள், முன்னாள் மாண்புமிகுக்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றன. திட்டமிட்டபடி, பொதுக்குழுவைக் கூட்டி, ஒற்றைத் தலைமையாகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சூழலில்தான், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலாக வலம்வரும் சந்திரசேகர், எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபர் செய்யாதுரை ஆகியோரின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறது வருமான வரித்துறை. அடுத்தகட்டமாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ அமைப்புகளையும் அ.தி.மு.க மீது டெல்லி ஏவவிருப்பதாகப் பரவும் தகவல்களால் கழகத்துக்குள் கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன!

அடுத்தடுத்த ரெய்டுகள்... ஆட்டம் காணும் அ.தி.மு.க!

மறைமுக டீல்... ரசிக்காத பா.ஜ.க!

வருமான வரித்துறையின் இந்த அதிரடி ரெய்டை அ.தி.மு.க தலைவர்கள் எவருமே எதிர்பார்க்கவில்லை. வேலுமணியின் வலதுகரமான சந்திரசேகர், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது அம்மா’-வின் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். தொழிலதிபர் செய்யாதுரை மீது 2018-ம் ஆண்டு ஏற்கெனவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, எடப்பாடியின் சம்பந்தி சுப்பிரமணியமும் செய்யாதுரையும் இணைந்து அ.தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையின் பெரும்பாலான ஒப்பந்தப் பணிகளை எடுத்ததாக அப்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தச் சூழலில்தான், கடந்த ஜூலை 6-ம் தேதி காலை சந்திரசேகர், செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தியிருக்கிறது வருமான வரித்துறை.

இது குறித்து நம்மிடம் பேசிய தென் மாநிலங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பா.ஜ.க தலைவர் ஒருவர், “ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களை நிறைவேற்றவிருந்தனர். அவற்றில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானமும் இருந்தது. ஆனால், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானம் நீக்கப்பட்டது. டெல்லியை உஷ்ணப்படுத்த இதைவிட வேறென்ன வேண்டும்... தவிர, தேர்தல் வியூக வகுப்பாளர் ஒருவர் மூலமாக, காங்கிரஸ் தலைவர்களுடன் எடப்பாடி அண்ட் கோ மறைமுக டீல் போட்டதை, பா.ஜ.க மேலிடம் ரசிக்கவில்லை.

அடுத்தடுத்த ரெய்டுகள்... ஆட்டம் காணும் அ.தி.மு.க!

ஏன் நடந்தது ரெய்டு?

தமிழ்நாடு அரசியல் குறித்து மத்திய உள்துறைக்கு நேரடியாக ரிப்போர்ட் அளித்துவந்தார் ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி. சசிகலாவை அ.தி.மு.க-வில் இணையவிடாமல் தடுத்ததிலும், அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை தொடர்வதிலும் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஜூன் 23-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி முடிசூட்டிக்கொள்ள முடியாமல் போனதற்கு அந்த அதிகாரியும் ஒரு காரணம். தவிர, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் சில அசைன்மென்ட்டுகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில்தான், பா.ஜ.க-வுக்குள் இருக்கும் தங்கள் ஆதரவு நபர்கள் மூலமாக, அந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ‘புரொமோஷன்’ கொடுத்து, லாகவமாக வேறொரு இடத்துக்கு மாற்றவைத்துவிட்டது காங்கிரஸ். அதற்குப் பிறகுதான், டெல்லியுடன் மோதுவது என்கிற தீவிரமான முடிவுக்கே எடப்பாடி வந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ரூட்டைக் கையிலெடுத்து, டெல்லியில் தங்களுக்குச் சாதகமாகச் சில விஷயங்களை முடித்துக்கொண்டது எடப்பாடி தரப்பு. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான ‘உதவி’யை அளிக்கவும் எடப்பாடி தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பதிலுக்கு, ‘எடப்பாடியை ஒற்றைத் தலைமையாகக் கொண்டுவர அரசியல்ரீதியாக உதவ வேண்டும்’ என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தச் சூழ்ச்சியை டெல்லி பா.ஜ.க மேலிடம் புரிந்துகொள்ள சில நாள்களாகிவிட்டன.

சந்திரசேகர்
சந்திரசேகர்

தங்களுக்கு எதிராகவே காங்கிரஸ் மூலம் எடப்பாடி காய்நகர்த்துவதை அறிந்த பின்னர்தான், அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் வருமான வரித்துறை மூலம் ‘ஷாக்’ கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. பொதுக்குழுவில் எடப்பாடிக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென்பதற்காக, அவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த பாக்ஸ்களை ‘நமது அம்மா’ வெளியீட்டாளர் சந்திரசேகரும், தொழிலதிபர் செய்யாதுரையும்தான் பெருமளவு கச்சிதமாகக் கொண்டுசேர்த்தார்கள். இதனால்தான், அவர்கள் இருவர் தொடர்புடைய இடங்களும் ரெய்டில் குறிவைக்கப்பட்டன. இந்த ரெய்டு அஸ்திரம் இனி தொடரும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் என 30 பேரைப் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறது வருமான வரித்துறை. அவர்கள் அனைவரின் மீதும் ரெய்டு நடத்தப்படலாம். தவிர, அமலாக்கத்துறை மூலமாகவும் அ.தி.மு.க தலைவர்களுக்குச் செக் வைக்க திட்டமிட்டிருக்கிறது டெல்லி. காங்கிரஸ் கட்சியுடன் எடப்பாடி ஏற்படுத்திக்கொண்ட சகவாசத்துக்கு, உரிய விலையை அவர் கொடுத்தாக வேண்டும். டெல்லி அதில் உறுதியாக இருக்கிறது” என்றார் விரிவாக.

செய்யாதுரை
செய்யாதுரை

மிதுனுக்குச் செக்? - சி.பி.ஐ வளையத்தில் எடப்பாடி...

சந்திரசேகர், செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆலயம் அறக்கட்டளை, கே.சி.பி நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, வேலுமணிக்கு நெருக்கமானவராக இருந்த சந்திரபிரகாஷின் இடங்களும் ரெய்டுக்கு உள்ளாகின. வருமான வரித்துறையின் கேள்விகளால் வெளிறிப்போன சந்திரபிரகாஷ், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 9-ம் தேதியன்றும், நான்காவது நாளாக ரெய்டு தொடர்ந்ததால், அ.தி.மு.க தலைவர்களிடம் ஏற்பட்ட பீதிக்கு அளவேயில்லை. இதற்கிடையேதான், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜுக்குத் தொடர்புடைய 49 இடங்களில் அதிரடியாகச் சோதனையில் இறங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதால் பரபரப்பு எகிறியது. ஆர்.காமராஜின் வீட்டிலிருந்து கணக்கில் வராத 15.5 லட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இப்படி அடுத்தடுத்து ரெய்டு அஸ்திரம் பாய்வதால், அ.தி.மு.க-வினர் ஆட்டம் கண்டு போயிருக்கின்றனர்.

காமராஜ்
காமராஜ்

நம்மிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர், “2018-ம் ஆண்டு தொழிலதிபர் செய்யாதுரை, எடப்பாடியின் சம்பந்தி சுப்பிரமணியம் வீடுகளில் ரெய்டு நடந்தபோது, சில அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை, எடப்பாடியின் ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறும் வகையில் இருப்பதால், அவற்றை அடிப்படையாகவைத்தே எடப்பாடியின் மகன் மிதுன் மீது வழக்கு பதிய முடியும். மிதுனுக்கு செக் வைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகியிருக்கின்றன. தவிர, 2018-ல் எடப்பாடி மீது தி.மு.க தொடர்ந்த ஊழல் வழக்கில், சி.பி.ஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அந்த வழக்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. இந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டால், சி.பி.ஐ பிடிக்குள் எடப்பாடி கொண்டுவரப்படலாம். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கையும் சி.பி.ஐ கையில் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றனர்.

அடுத்தடுத்த ரெய்டுகள்... ஆட்டம் காணும் அ.தி.மு.க!

தன்மீது தாக்குதல் தீவிரமாவதால், டெல்லியைச் சமரசப்படுத்த எடப்பாடி எடுத்த முயற்சிகள் பலவும் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சேலம் இளங்கோவனை சென்னைக்கு வரவழைத்து, சில ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களை பார்க்கச் சொன்னாராம் எடப்பாடி. ஆனால், அந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் கடைசி நேரத்தில் மீட்டிங்கை கேன்சல் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. “பன்னீரால் பா.ஜ.க-வுக்கு அரசியல்ரீதியாக எதுவும் லாபம் இல்லை. ஆனாலும், எடப்பாடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியது டெல்லி. தற்போது, ஒற்றைத் தலைமையாக தன்னை எடப்பாடி முன்னுறுத்திக் கொண்டதால், நேரடியாகவே அவருடன் மோதுவதற்குத் தயாராகிவிட்டனர். இனிதான் ஆட்டம் சூடுபிடிக்கப்போகிறது” என்கிறார்கள் விவரமறிந்த அ.தி.மு.க மூத்த தலைவர்கள்.

பொதுக்குழு நடந்துகொண்டிருந்த அதேசமயத்திலும், கோவையில் வருமான வரித்துறை சோதனையும் ஒருபக்கம் நடந்துகொண்டே இருந்தது. ஒரு யுத்தத்தை எடப்பாடி ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு எதிராக டெல்லியும் இப்போது ஆயுதம் தூக்கிவிட்டது என்கிறார்கள். இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த யுத்தம் தீவிரமடையும் என்பதே தகவல்!