Published:Updated:

`நான் பேசினால் சிக்கல்!'- அத்திவரதர் தரிசனத்தில் ராஜாத்தி அம்மாள்

கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரின் மறைவுக்கு முன்புவரை இலைமறைக் காயாக அவரின் குடும்பத்தினர் ஆலய பிரவேசம் செய்துவந்தனர்.

அத்திவரதரை தரிசிக்கும் ராஜாத்தி அம்மாள்
அத்திவரதரை தரிசிக்கும் ராஜாத்தி அம்மாள்

கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரின் குடும்பத்தினர் ரகசியமாகக் கோயிலுக்குச் செல்வது அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும். ஆனால், தற்போது எல்லோரையும்போல அவர்கள் சகஜமாக கோயிலுக்குச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. மதச் சடங்குகள் தொடர்பாக ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டு எழுவதுண்டு. அப்போதெல்லாம், ``நாங்கள் கடவுளை வணங்குபவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. என் குடும்பத்தில் உள்ளவர்களே கடவுளை வணங்குகிறார்கள். நான் யாருடைய விருப்பத்துக்கும் தடை போட்டது கிடையாது” என்பார். அதை மெய்ப்பிப்பதுபோல தற்போது எல்லோரையும் அடிக்கடி ஆலயங்களில் பார்க்க முடிகிறது.

அத்திவரதர் வைபவத்தில் ராஜாத்தி அம்மாள்
அத்திவரதர் வைபவத்தில் ராஜாத்தி அம்மாள்

அத்திவரதரை தரிசனம் செய்ய இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவு காஞ்சிபுரம் வருகிறார்கள். தினமும் ஒன்றரை லட்சத்திலிருந்து 3 லட்சம் பேர் வரை அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் தினமும் அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள். அதில் கருணாநிதியின் குடும்பத்தினரும் அடங்கும். நாற்பது வருடங்களுக்கு முன்பு 1979-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. ஆனால், அப்போது கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து யாரும் அத்திவரதரை தரிசனம் செய்யவில்லை.

தற்போது துர்கா ஸ்டாலின், சபரீசன், கனிமொழியின் கணவர் அரவிந்தன், அமிர்தம், காந்தி அழகிரி, உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உள்ளிட்ட பலர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அதுபோல் முன்னாள் தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் தினம் தினம் அத்திவரதரை தரிசனம் செய்துவருகிறார்கள். தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார். தி.மு.க-வினர் அதிக அளவு அத்திவரதரை தரிசிக்கின்றனரே எனச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ``பொதுவாக எங்களுக்கு அதில் பெரிய நம்பிக்கை இல்லை” எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அத்திவரதர் தரிசனத்தில்  ராஜாத்தி அம்மாள்
அத்திவரதர் தரிசனத்தில் ராஜாத்தி அம்மாள்

கருணாநிதி மறைந்து ஒரு வருடம் நிறைவு பெற இரண்டு நாள்களே இருக்கின்றன. கருணாநிதி மறைவுக்குப் பிறகு ராஜாத்தியம்மாள் சோகத்தில் வீட்டிலேயே முடங்கிவிட்டார். அவரின் உடலும் முன்புபோல் ஆக்டீவாக இல்லை. இந்த நிலையில், நேற்று மாலை கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் அத்திவரதரை தரிசனம் செய்வதற்குக் காஞ்சிபுரம் வந்திருந்தார். சமீப காலமாகவே அவர் நீண்ட தூரம் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். அதனால் காரில் இருந்து இறங்கியதும் அவரை வீல் சேரில் அழைத்துவந்தனர். வி.வி.ஐ.பி தரிசனம் வழியாக உள்ளே நுழைந்ததும் வீல் சேரில் இருந்து மெதுவாக அத்திவரதர் இருக்கும் வசந்த மண்டபத்துக்கு நடந்தே வந்து சேர்ந்தார். அவருடன் மலர் மருத்துவமனை உரிமையாளரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

ராஜாத்தியம்மாள் வசந்த மண்டபம் உள்ளே நுழைந்த பிறகு அர்ச்சகர் அவரிடம் துளசித்தட்டை நீட்டினார். அர்ச்சகரிடம் நீண்ட நேரமாக உருக்கமாக வேண்டுதலை சொல்லிக்கொண்டிருந்தார் ராஜாத்தி அம்மாள். பிறகு துளசி கொண்டு அவரின் வேண்டுதலுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பூ, துளசி, ரோஜாப்பூ மாலை ஆகியவற்றை அர்ச்சகர்கள் அவரிடம் கொடுத்தனர். அவரை அர்ச்சகர்கள் அத்திரவர் எதிரே அமரச் சொன்னார்கள். அவரின் உடல்நிலை காரணமாக வேண்டாம் என மறுத்துவிட்டார்.

ராஜாத்தி அம்மாள், அத்திவரதர்
ராஜாத்தி அம்மாள், அத்திவரதர்
பா.ஜெயவேல்

அத்திவரதரை கைகூப்பி தொழுதபோது ராஜாத்தி அம்மாளின் கண்கள் கலங்கின. அத்திவரதருக்காக முந்திரி, திராட்சை, கற்கண்டுகளையும் கொண்டுவந்திருந்தார் ராஜாத்தி அம்மாள். வசந்த மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டார். பின்பு கொண்டுவந்த கற்கண்டு, முந்திரி, திராட்சை உள்ளிட்டவற்றை உடன் வந்திருந்தவர்களுக்கு தன் கையால் அள்ளிக்கொடுத்தார்.

அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ``அத்திவரதரிடம் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?” என்ற கேள்விக்குப் பதில் அளித்த ராஜாத்தி அம்மாள், ``வேண்டுதலை வெளியே சொல்லலாமா? அதெல்லாம் வெளியே சொல்லக் கூடாது” என சிரித்துக்கொண்டே சொன்னார். ``1979-ல் நடந்த அத்திவரதர் தரிசனத்துக்கு வந்தீர்களா?” என்ற கேள்விக்கு, ``1979-ல் அத்திவரதர் வைபவம் நடந்தது எங்களுக்குத் தெரியாது. இப்போது அத்திவரதர் தரிசனம் நடைபெறுவதால் வந்திருக்கிறேன்” என்றார்.

ராஜாத்தி அம்மாள், அத்திவரதர்
ராஜாத்தி அம்மாள், அத்திவரதர்
பா.ஜெயவேல்

``சயனக் கோத்திலும் அத்திவரதரை பார்த்துச்சென்றீர்கள், இப்போதும் பார்த்தீர்கள்? இதை எப்படி உணர்கிறீர்கள்? என்ற கேள்விக்குப் பதில் அளித்த ராஜாத்தி அம்மாள், ``கடந்த முறை அத்திவரதரை சயனக் கோலத்தில் பார்த்தேன். இப்போது நின்ற கோலத்தில் பார்த்தேன். எவ்வளவு உயரமாக இருக்கிறார்?! பார்ப்பதற்கே ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது'' என்றவரிடம், ``அத்திவரதர் தரிசனம் பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்ற கேள்விக்கு, ``தலைவர் கடவுள் இல்லை என்று சொல்லுவார். நான் சுவாமி இருக்குன்னு சொல்ல வேண்டி வரும். நான் சுவாமியைப் பற்றிப் பேசினால் ஏதாவது சிக்கல் வந்துவிடும்” என்றார். சிறிய ஓய்வுக்குப் பிறகு அங்கிருந்து மெதுவாக நடந்து வாயில் வரை வந்தார். அங்கிருந்தவர்கள் கொண்டுவந்த வீல் சேரில் ஏறி காருக்குச் சென்றார்.