Published:Updated:

`ரஜினி விஷயத்தில் மட்டும் ஏன் மவுனம்?’- ராஜேந்திர பாலாஜியை சுற்றும் சர்ச்சை

ரஜினியை அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் விமர்சித்துப் பேசி வருவது ரஜினி ரசிகரான பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க-வினர் அப்போதே இதற்கு பதில் சொல்லிவிட்ட நிலையில் அ.தி.மு.க-வில் மட்டும் கொந்தளிப்பு தொடர்ந்துவருகிறது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினி, கமலை அட்டாக் செய்யும் வகையில் `வயது மூப்பினால் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள், அவர்களுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது' என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோரும் வெற்றிடம் பற்றி பேசிய ரஜினியின் கருத்தை விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.

இப்படி ரஜினியை அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் விமர்சித்துப் பேசி வருவது ரஜினி ரசிகரான பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள கூறப்படுகிறது. இதுவரை ரஜினி பேசிய ஒவ்வொரு கருத்துக்கும் ஆதரவாகப் பேசி வந்தவர், தலைமை தொடர்பாக ரஜினி விமர்சித்துப் பேசிய பிறகும் எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்துவருகிறார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

ஏற்கெனவே பல்வேறு விஷயங்களுக்கும் அதிரடியாக கருத்துக் கூறி கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்குகிறார் என்ற புகாரினால் எடப்பாடி கண்டித்த நிலையில், ரஜினியை எதிர்த்துப் பேசாமல் மௌனம் காப்பது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளால் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விருதுநகரில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போதும், ``நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டி மரியாதை செய்தது அ.தி.மு.க அரசுதான். இதுபற்றி தெரியாமல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்வரை விமர்சனம் செய்கிறார். அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். நடிகர்கள் ரஜினியும் கமலும் அவர்கள் பணியை மட்டும் செய்ய வேண்டும், நான் ரஜினி ரசிகன்தான் அவர் படத்தை விரும்பி பார்ப்பேன்'' என்று மென்மையாகப் பேசிவிட்டுச் சென்றார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

தனக்குப் பிடித்த ஹீரோ ரஜினியை, எடப்பாடி முதல் சக அமைச்சர்கள் வரை விமர்சித்துப் பேசி வருவது ராஜேந்திர பாலாஜிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.