Published:Updated:

ரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு... நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு? - பாகம் 1

ரஜினியின் உண்ணாவிரதம்
ரஜினியின் உண்ணாவிரதம் ( விகடன் )

``நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் அளிப்பேன்'' என ரஜினி அறிவித்த தினம் 2002 அக்டோபர் 13-ம் தேதி.. ஆம் நாளை! ரஜினி ஏன் அப்படி சொன்னார். இந்த 17 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.

``இந்த நாள். உன்னோட காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ. இன்னைல இருந்து உன்னோட அழிவு காலம் ஆரம்பமாகிடுச்சு'' - 'அண்ணாமலை' படத்தில் ரஜினி பேசும் டயலாக் இது.

அண்ணாமலை படத்தில் ரஜினி
அண்ணாமலை படத்தில் ரஜினி

ரஜினியின் வாழ்க்கை காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய முக்கியமான நாள் ஒன்று உண்டு.

அது 2002 அக்டோபர் 13-ம் தேதி.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை இல்லம் ரஜினி ரசிகர்களால் நிரம்பியிருந்தது. மேடையின் பின்னணியில் காந்தி, திருவள்ளுவர், பாபா ஆகியோர் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் படங்களுக்குக் கீழே `உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு' என எழுதப்பட்டிருந்தது. வெள்ளை உடையில் விறுவிறு என மேடையேறிய ரஜினி, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

போராட்டம் மாலையில் முடிவுக்கு வந்தபோது ``நதி நீர் இணைப்புக்கு 1 கோடி ரூபாய் அளிப்பேன்'' என அதிரடியாக அறிவித்தார் ரஜினி.

`ரஜினி அரசியலுக்கு வருகிறார்' எனப் பேச ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு மகாமகம் ஆகிவிட்டது. ரஜினிக்கும் அரசியலுக்கும் தொடர்பு உண்டாக்கிய 1996-ம் ஆண்டு தொடங்கி, 23 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் அவர் அரசியலுக்குள் முழுமையாக அடியெடுத்து வைக்கவில்லை.

ரஜினியின் அரசியல் என்ட்ரி போலவே அவர் அளித்த இந்த வாக்குறுதியும் இன்னும் நிறைவேறாமல்தான் இருக்கிறது. ``நதி நீர் இணைப்புக்கு 1 கோடி ரூபாய் அளிப்பேன்'' என ரஜினி சொல்லி, 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. `ஒரு கோடி ரூபாய் அளிப்பேன்' என ரஜினி அறிவித்த தினம் நாளை.

ரஜினியும் பாரதிராஜவும்...
ரஜினியும் பாரதிராஜவும்...
விகடன்

``பத்த வச்சிட்டியே பரட்ட...'' என பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் வரும் பன்ச் டயலாக் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். இந்த டயலாக்கை எழுதிய பாரதிராஜா 2002-ல் பத்த வச்ச விவகாரம்தான் ரஜினி ஒரு கோடி ரூபாய் அறிவிப்பை வெளியிடக் காரணம்.

17 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது?

2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம். குறுவை சாகுபடியை இழந்துவிட்டு, சம்பா பயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருந்தன டெல்டா மாவட்டங்கள். காவிரி நீரைக் கர்நாடகம் திறந்துவிடாததால் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. விவசாயம் முற்றிலும் முடங்கிப்போய் விவசாயிகள் செத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது மத்தியில் வாஜ்பாயும், தமிழகத்தில் ஜெயலலிதாவும், கர்நாடகாவில் எஸ்.எம். கிருஷ்ணாவும் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள்.

ஜெயலலிதா, கிருஷ்ணா, வாஜ்பாய்...
ஜெயலலிதா, கிருஷ்ணா, வாஜ்பாய்...

`காவிரி நீரைத் தரக் கூடாது' எனக் கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. தமிழகத்துக்கு எதிராக வன்முறையும், கலவரமும் தலைவிரித்தாடியது. தமிழக வாகனங்கள், தமிழர் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது திரையுலகமும் தன் பங்குக்கு இரண்டு மாநிலங்களிலும் கோதாவில் குதித்தது.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பெப்சி யூனியன் ஆகிய சங்கங்கள் இணைந்து, `தமிழர் பாதுகாப்பு அணி' என்ற ஓர் அமைப்பை, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் உருவாக்கின. 2002 அக்டோபர் 2-ம் தேதி சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் தமிழர் பாதுகாப்பு அணி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

`காவிரி நதியைக் கர்நாடகம் உரிமை கொண்டாடுவதால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குத்தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் 2002 அக்டோபர் 12-ம் தேதி நெய்வேலியில் பேரணி நடத்தி, அனல் மின்நிலையத்தை முற்றுகையிடுவோம்' எனத் தீர்மானம் போட்டது.

இந்தப் போராட்டத்துக்குப் பல தரப்பில் இருந்தும் ஆதரவுகள் குவிந்தன. ``எங்கே சினிமாக்காரர்கள் நம்மைக் கைவிட்டுவிட்டார்களோ என்று சந்தேகத்துக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். ஆனால், தமிழ்த் திரையுலகினர் ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது'' என ராமதாஸ் அறிக்கை விட்டார்.

ராமதாஸ்
ராமதாஸ்

சினிமா நடிகர்களை எதிர்த்து வந்த ராமதாஸிடமிருந்து இப்படியான ஆதரவு கிடைத்தது ஆச்சரியம். போராட்டம் நடக்கும் நெய்வேலி ஏரியா பா.ம.க-வின் கோட்டை. அதனால் அந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது.

ஆனால், ரஜினியிடமிருந்து எதிர்வினை கிளம்பியது. ``இது தேவையில்லாத போராட்டம்" எனச் சொல்லி அதிர வைத்தார் ரஜினி. `திரையுலகம் நடத்தும் போராட்டம் தேவையில்லாதது. நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என ரஜினி அறிக்கைவிட... விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

ரஜினி
ரஜினி

திரையுலகத்தினரோடு எப்போதும் ஒத்துப் போகும் ரஜினி, ஏன் இந்த முடிவை எடுத்தார்? அதற்குக் காரணம் பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த விவாதம்தான். நெய்வேலி போராட்டம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பாம்குரோவ் ஹோட்டலில் கூட்டம் நடத்தப்பட்டபோது ரஜினியைப் பலர் சீண்டிப் பேச ஆரம்பித்தார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழ் நடிகர்கள் வறுத்தெடுக்கப்பட்டார்கள். அதில் ரஜினியும் தப்பவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்டுத்தான் நெய்வேலி போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் ரஜினி.

`காவிரி போராட்டம்' பிறகு 'ரஜினி எதிர்ப்பு'ப் போராட்டமாக மாற ஆரம்பித்தது. அக்டோபர் 4-ம் தேதி நடிகர் சங்கத்தில் பாரதிராஜா தலைமையில் அவசரக் கூட்டம் கூடியது. ``நன்றி கெட்டவர் ரஜினி... ரஜினியை வளர்த்துவிட்டது தவறு... ரஜினியை வைத்து இனி படங்களை எடுக்கக் கூடாது...'' என ரஜினிக்கு எதிராகக் கூட்டத்தில் குரல்கள் எழுந்தன. `ரஜினியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என சிலர் கோரிக்கை வைத்தனர்.

சத்யராஜ் பேசும்போது, ``கர்நாடகத்தில் உள்ள நடிகன், தனது மாநிலத்துக்காகப் போராடுகிறான். தமிழகத்தில் இருக்கிறவன் தமிழனுக்காகப் போராடித்தான் ஆக வேண்டும்.'' என்றார்.

பாரதிராஜா
பாரதிராஜா
விகடன்

கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரதிராஜா, ``எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறச் சொல்ல ரஜினிக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழகத்தின் உப்பைத் தின்றுவிட்டு, தண்ணீர் குடிக்கும் ரஜினிகாந்தை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்காமல் தானாகவே நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்'' என ரஜினியை ஒரு பிடி பிடித்தார்.

``காவிரிப் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை மதிக்காத கர்நாடகத்தை ரஜினி கண்டிக்கவே இல்லை. `தமிழ்நாட்டைக் கண்டிப்பதில் மட்டும் ஏனோ ரஜினி இந்தியன் ஆகிவிடுகிறார். தமிழகத்துக்குத் துரோகம் செய்யும் கர்நாடகாவை விமர்சிக்க வாயில்லாத ரஜினி, தன்னைத் தமிழன் என எப்படிச் சொல்லிக் கொள்ளலாம்? நெய்வேலி போராட்டம் தமிழர்களின் போராட்டம். சினிமாக்காரர்கள் நடத்தும் போராட்டம் கிடையாது. சினிமாக்காரர்கள் முன்னே நிற்கிறோம், அவ்வளவுதான். இந்தப் போராட்டம் தமிழ் இனம் தொடர்புடையது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வெட்கமில்லாமல் சொல்கிறார் ஒரு நடிகர். இதை எப்படி மறுபரிசீலனை செய்ய முடியும்?

தமிழன் என்றால் கேவலமா? கர்நாடகத்தில் நடந்துவரும் போராட்டங்களை அந்த நடிகர் மறுபரிசீலனை செய்யச் சொல்வாரா? கர்நாடகக்காரர்களிடம் தமிழகத்துக்காக அவர் பேசினாரா? அப்படி ரஜினி பேசியிருந்தால் நாங்களும் போராட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தயார்?

ரஜினியுடன் பாரதிராஜா...
ரஜினியுடன் பாரதிராஜா...

பெங்களூரில் தமிழ்த் தாய் உருவ பொம்மையைக் கத்தியால் குத்தியபடியே ஊர்வலம் போகிறார்கள். அதைக் கர்நாடகா நடிகர்கள் வரவேற்கிறார்கள். அதை ரஜினி கண்டிக்கவில்லை. இது உனக்கும் எனக்கும் உள்ள பிரச்னை என்றால் மறுபரிசீலனை செய்யத் தயார். ஆனால், இது தமிழ் இனத்தின் பிரச்னை. உயிர் பிரச்னையில் மறுபரிசீலனை செய்யச் சொல்கிற நடிகரை எந்த ரகத்தில் சேர்ப்பது? ரஜினிக்கு நன்றி உணர்ச்சி இல்லை. பிரதமரை இவர் பார்த்து என்ன ஆகிவிடப் போகிறது. இவரிடம் அப்படி என்ன பெரிய சக்தி மறைந்திருக்கிறது?'' என பாரதிராஜா கொதித்தார்.

நெய்வேலி போராட்டம் தொடர்பாக முடிவு எடுப்பதற்காக நடிகர் சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி பங்கேற்றார். அந்தக் கூட்டத்திலும் `நெய்வேலி போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார் ரஜினி. ``கர்நாடகாவுக்கு மின்சாரத்தைத் தடை செய்ய வேண்டும் எனப் போராடத் தேவையில்லை. நெய்வேலியில் போராட்டம் வேண்டாம்.. சென்னையில் நடத்தலாம்'' என ரஜினி சொன்னபோது, தமிழ் உணர்வு நடிகர்கள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாதியிலேயே ரஜினி கிளம்பிப் போனார். ``கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்'' எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

கோட்டையில் ஜெயலலிதாவை சந்தித்த பாரதிராஜா குழு...
கோட்டையில் ஜெயலலிதாவை சந்தித்த பாரதிராஜா குழு...

நெய்வேலி போராட்டம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை பாரதிராஜா தலைமையில் திரைக் கலைஞர்கள் குழு கோட்டையில் சந்தித்தது. ``நெய்வேலி போராட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார்'' என்கிற தகவலை பாரதிராஜா பத்திரிகையாளர்களிடம் சொன்னார். ``முதல்வர் என்ற முறையில்தான் ஜெயலலிதாவைச் சந்தித்தோம். மற்ற கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் எண்ணம் இல்லை'' எனவும் சொன்னார் பாரதிராஜா. நெய்வேலி போராட்டத்தில் அரசியல் கலக்க ஆரம்பித்திருந்தது.

முதல்வர் ஜெயலலிதா - பாரதிராஜா குழு சந்திப்பு நடந்த அன்றுதான், காவிரி பிரச்னை குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த, வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசைக் கண்டித்து தமிழகத்தில் அக்டோபர் 9-ம் தேதி பந்த் நடத்த முடிவானது.

இப்படிப்பட்ட சூழலில் ரிஷிகேஷ் கிளம்பிப் போன ரஜினி, விமானநிலையத்தில் நிருபர்களிடம், ``நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தில் ரத்த ஆறு ஓடும் சூழல் உருவானால் அதில் கலந்து கொள்ள மாட்டேன்'' என்றார்.

ஜெயலலிதாவின் ஆதரவால், நெய்வேலி போராட்டத்துக்கு அரசு இயந்திரங்கள் அனைத்தும் உதவ ஆரம்பித்தன. நெய்வேலி போராட்டக்களம் சூடுபிடித்த நிலையில், ``என் வழி தனி வழி'' என ஜகா வாங்கினார் ரஜினி. பாரதிராஜாவின் பதிலடியால் ரஜினிக்கு எதிராக திரையுலகத்தின் ஒரு பகுதியினர் திரள ஆரம்பித்தனர். ரஜினிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. தன்னுடைய உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதை எல்லாம் ரஜினியே எதிர்பார்க்கவில்லை.

பேட்டி அளிக்க மாடிப்படிகளில் இறங்கி வரும்  ரஜினி...
பேட்டி அளிக்க மாடிப்படிகளில் இறங்கி வரும் ரஜினி...
விகடன்

ரிஷிகேஷிலிருந்து அக்டோபர் 8-ம் தேதி மாலை சென்னை திரும்பியிருந்தார் ரஜினி. அடுத்த நாள் 9-ம் தேதி காவிரிக்காகத் தமிழகம் முழுவதும் பந்த் நடந்துகொண்டிருந்த நேரத்தில், பத்திரிகையாளர்களுக்கு ரஜினியிடமிருந்து அதிரடி அழைப்பு. போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் வீடு புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்ததால், போட் கிளப் ஏரியாவில் தற்காலிகமாக ரஜினி வசித்து வந்தார். அங்கேதான் பிரஸ்மீட். ஆரஞ்ச் நிற பனியனும் பேன்ட்டும் அணிந்து, மொட்டைத் தலையுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. வீட்டின் ஹாலில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தபோது மாடிப்படிகளில் இறங்கி வந்த ரஜினி மளமளவென வார்த்தைகளை வீசினார்.

``நான் முதலில் இந்தியன். அதன்பிறகுதான் தமிழன். நெய்வேலியில் திரையுலகினர் போராட்டம் நடத்தினால் என்ன நடந்துவிடும். கர்நாடகத்துக்குப் போகும் மின்சாரத்தைத் தடுத்துவிட முடியுமா? அந்தப் போராட்டத்தைச் சென்னையில் நடத்தி, கவர்னரிடம் மனு அளிக்கலாம். நாம் நடத்தும் போராட்டத்தால், கர்நாடகத்தில் உள்ள 40 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் நெய்வேலி போராட்டத்தை எதிர்த்தேன். `கர்நாடகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டாம்' என நான் சொல்லவில்லை. `நெய்வேலி வேண்டாம். சென்னையில் நடத்தலாம்' என்றேன். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

காவிரி... ரஜினி பிரஸ் மீட்
காவிரி... ரஜினி பிரஸ் மீட்
விகடன்

என் மீதுள்ள பொறாமையாலும் என் மீது இருக்கும் பயம் காரணமாகவும் தவறான தகவல்களைச் சிலர் பரப்புகிறார்கள். விஷயத்தைத் திசை திருப்புகிறார்கள். அவர்கள் யார், அவர்களைத் தூண்டும் அரசியல்வாதிகள் யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அவர்களைத் தேர்தல் நேரத்தில் நான் பார்த்துக் கொள்வேன். நெய்வேலி போகிறவர்கள் போகட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நான் சென்னையில் அமைதியாக வள்ளுவர் கோட்டத்திலோ, ஃபிலிம் சேம்பரிலோ, நடிகர் சங்கத்திலோ உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். காவிரியில் தண்ணீர் விட வேண்டும் எனக் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன். நெய்வேலி போகிறவர்கள் போகலாம். என்னுடன் உண்ணாவிரதம் இருக்க விரும்புகிறவர்கள் இருக்கலாம்'' என விரிவாகவே பேசினார் ரஜினி.

``எனக்கு எதிராகப் பேசுகிறவர்களைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகள் யார்? என்பது எனக்குத் தெரியும். அவர்களைத் தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்வேன்'' என ரஜினி மறைமுகமாகச் சொன்னது ஜெயலலிதாவைத்தான். பாரதிராஜாவுக்கு ஆதரவாக இருக்கும் ஜெயலலிதாவைத்தான் மறைமுகமாகத் தனது பேட்டியில் பொடி வைத்துப் பேசினார் ரஜினி.

ஜெயலலிதாவுடன் பாரதிராஜா...
ஜெயலலிதாவுடன் பாரதிராஜா...
விகடன்

நெய்வேலி போராட்டத்தை ரஜினி புறக்கணிக்க இன்னொரு காரணமும் உண்டு. நெய்வேலி போராட்டம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்புதான் `பாபா' பட பிரச்னை ஏற்பட்டு, ரஜினிக்கும் பா.ம.க-வுக்கும் இடையே மோதல் உருவானது. `பாபா’ படத்தில் ரஜினி சிகரெட் பிடிப்பதையும் மது அருந்துவதையும் சுட்டிக் காட்டி, ``ரஜினி இளைஞர்களைக் கெடுத்து வருகிறார்'' என ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

'பாபா' படத்தில் ரஜினி...
'பாபா' படத்தில் ரஜினி...

அதோடு, ``நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களே இருக்கக் கூடாது. ரஜினி ரசிகர்கள் தங்கள் நெற்றியில் `முட்டாள்’ என எழுதிக் கொள்ளுங்கள்'' எனவும் காட்டமாகச் சொன்னார் ராமதாஸ். இப்படிப்பட்ட சூழலில் `பாபா' ரிலீஸ் ஆனபோது, படப் பெட்டிகளை பா.ம.க.-வினர் கடத்தி, தியேட்டர் திரையைக் கிழித்தார்கள். ரஜினி மன்ற நிர்வாகிகளின் வீடுகளையும் அலுவலகங்களையும் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநிகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை உண்டாக்கினார்கள்.

இந்தச் சம்பவங்கள் நடந்த கொஞ்ச நாளிலேயே நெய்வேலி போராட்டம் நடைபெற்றது. தன்னை மிகக் கடுமையாக எதிர்க்கும் பா.ம.க-வின் கோட்டையான நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்றால், தனக்கு எதிராக பா.ம.க-வினர் கோஷம் போடுவார்கள் என நினைத்தார் ரஜினி. நெய்வேலி போராட்ட அறிவிப்பை பாரதிராஜா அறிவித்தபோது ராமதாஸிடமிருந்துதான் முதல் ஆதரவு கிடைத்தது. அதனால்தான் `சென்னையில் போராடலாம்' என ரஜினி சொன்னார். இப்படியான காரணத்தால்தான் நெய்வேலி போராட்டத்தை ரஜினி புறக்கணித்தாக செய்திகள் கிளம்பின.

`சென்னையில் உண்ணாவிரதம்' என ரஜினி அறிவித்த பிறகு, `மெரினா சீரணி அரங்கம், காந்தி சிலை, வள்ளுவர் கோட்டம் என ஏதாவது ஒன்றில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி தாருங்கள்' என அன்றைக்குச் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாரிடம், ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா கடிதம் கொடுத்தார். நெய்வேலி போராட்டம் நடந்த 12-ம் தேதிதான் ரஜினியும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். விஜயகாந்த் கேட்டுக்கொண்டதால் அடுத்த நாளுக்கு உண்ணாவிரத தேதியை மாற்றினார் ரஜினி.

ரஜினி..
ரஜினி..
விகடன்

நெய்வேலியில் நடிகர்கள் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக நெய்வேலி மின் நிலையம் வந்தார்கள். அங்கே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பாரதிராஜா தலைமையில் ஒரு குழு, என்.எல்.சி. தலைவர் ஜெயராமனைச் சந்தித்து மனு அளித்தது. நெய்வேலி போராட்டத்தில் பாரதிராஜாவின் பேச்சுதான் ஹைலைட்.

`தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமையைக் குலைக்க நினைக்கிறார் ரஜினி. எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றால் அது நடக்காது. எங்களுக்குத் தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்துக்கு எங்கள் மண்ணில் எங்கள் உழைப்பில் உருவாகும் மின்சாரத்தைக் கொடுக்கக் கூடாது எனச் சொல்லக் கூடாதா, நெய்வேலியை முற்றுகையிட்டால் தண்ணீர் வந்துவிடுமா என்கிறார்கள். தனியாக உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தண்ணீர் வந்துவிடுமா?

`தமிழர்கள் ஒற்றுமையாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார். தன் சுயரூபம் தெரிந்துவிடும் என்ற அச்சத்தால்தான் உண்ணாவிரதம் இருக்கிறார். காவிரிப் பிரச்னையைக் களங்கப்படுத்த முயற்சி செய்பவர்களைக் காலம் மன்னிக்காது'' என ஆவேசமாகக் கர்ஜித்தார் பாரதிராஜா.

அதன்பின் என்ன நடந்தது? நாளை பார்க்கலாம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு