Published:Updated:

ரஜினி அரசியல்: அர்ஜுனமூர்த்தி; தமிழருவி மணியன் - சீமான் பாணி... எந்தக் கட்சியிலும் இல்லாத பொறுப்பு!

ரஜினி பத்திரிகையாளர் சந்திப்பு

அரசியலுக்கு ரஜினி வருவார்; இல்லை வர மாட்டார் என்கிற மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில், சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ரஜினி அரசியல்: அர்ஜுனமூர்த்தி; தமிழருவி மணியன் - சீமான் பாணி... எந்தக் கட்சியிலும் இல்லாத பொறுப்பு!

அரசியலுக்கு ரஜினி வருவார்; இல்லை வர மாட்டார் என்கிற மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில், சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
ரஜினி பத்திரிகையாளர் சந்திப்பு
ஓருவழியாக கடந்த மூன்று வருட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும், அது தொடர்பான விவரங்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிட்டார் ரஜினி.

கடந்த 2017-ம் ஆண்டு, மே மாதம்15 முதல்19-ம் தேதி வரை, தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் ரஜினிகாந்த். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழகத்தில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது. சிஸ்டம் சரியில்லை. இது மொத்தத்தையும் சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும். அதற்கான நேரம் வரும்" என்று சூசகமாகச் சில கருத்துகளை முன்வைத்தார். அப்போதே நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினி ஆலோசனைக் கூட்டம்
ரஜினி ஆலோசனைக் கூட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து 2017-ம் ஆண்டு, டிசம்பர் 26 முதல் 31-ம் தேதி வரை, இரண்டாம்கட்டமாக, ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அவர்கள் முன்னிலையில், ``நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போகிறோம். போருக்குத் தயாராக இருங்கள்" என அரசியலுக்கு வருவது பற்றிய அறிவிப்பை அந்தச் சந்திப்பின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதி வெளியிட்டார். தொடர்ந்து பலமுறை ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்புகள், ரஜினி வருவார், இல்லை வரமாட்டார் என்கிற மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில், சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார் ரஜினி.

``வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்... நிகழும்!!! #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல"
ரஜினியின் ட்விட்டர் பதிவு

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அர்ஜுனமூர்த்தி!

தொடர்ந்து, இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்திருப்பதாக அறிவித்தார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி, முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர். முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர், தி.மு.க-விலிருந்து விலகிய இவர், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மீது அதிக பற்றுக்கொண்ட இவர், முதலில் பா.ஜ.க-வின் வர்த்தகப் பிரிவில் பதவி வகித்துவந்தவர்.

அர்ஜுனமூர்த்தி
அர்ஜுனமூர்த்தி

பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் இவர் தலைமையிலான குழுதான் கவனித்துவருகிறது. பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தலைவராகப் பதவியேற்றதன் 100-வது நாள் விழாவைக் கடந்த நவம்பர் 11-ம் தேதிதான் கொண்டாடியிருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. டெல்லி, தமிழக பா.ஜ.க தலைமையுடன் நெருக்கமாக இருந்த இவர், ரஜினியின் புதிய கட்சியில் பொறுப்பேற்றதால், பா.ஜ.க-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்திருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்திருக்கிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அர்ஜுனமூர்த்தி நீக்கப்படுவதாகவும் பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் பா.ஜ.க., கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழருவி மணியன்!

பள்ளி ஆசிரியராக இருந்தவர், காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். காமராஜரின் மறைவுக்குப் பிறகு ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து, லோக்சக்தி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் பயணித்துவந்தவர், 2009-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளில், `காந்திய மக்கள் இயக்கம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர் அதை அரசியல் கட்சியாக மாற்றி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். பின்னர், 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில், 2,000 வாக்குகளுக்குக் கீழ் வாங்கினால் பொதுவாழ்க்கையைவிட்டு விலகுவதாக அறிவித்தார். முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாததால், சில காலம் பொது வாழ்விலிருந்து ஒதுங்கயிருந்தவர், ரஜினி தன்னைச் சந்திக்க விரும்பிய செய்தி அறிந்ததும், 2017-ம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தார்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாதங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் ரஜினிக்கு ஆதரவாகப் பேசிவந்தார். ரஜினியின் அரசியல் ஆலோசகராகவே பார்க்கப்பட்டுவந்த அவர், தற்போது புதிய கட்சியின் மேற்பார்வையாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக அரசியல் வரலாற்றில் கட்சிகள் தொடங்கப்படும்போது, தலைவர், பொதுச்செயலாளர் போன்ற பதவிகள்தான் உயரிய பதவிகளாக இருக்கும். அ.தி.மு.க-வில்கூட ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளெல்லாம் கொண்டுவரப்பட்டன. ஆனால், தமிழக அரசியல் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியில் மட்டுமே தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் எனும் பதவி இருக்கிறது. சீமான் அந்தப் பொறுப்பை வகித்துவருகிறார். அந்தக் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்களாகப் பலர் இருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக, ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியில்தான், `தலைமை ஒருங்கிணைப்பாளர்’ எனும் பொறுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ரஜினி கட்சியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பலர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேபோல, தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருக்கும் `மேற்பார்வையாளர்’ எனும் பொறுப்பு இதுவரை எந்தக் கட்சியிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism