Published:Updated:

இ-பாஸ் விவகாரம்: ரஜினி மீது நடவடிக்கை பாயுமா?

ரஜினி
ரஜினி

ரஜினி, பொது முடக்கக் காலத்தில், சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இ-பாஸ் இல்லாது பயணம் மேற்கொண்டாரா?

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் அமலிலுள்ளது. இந்தக் காலகட்டத்தில், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல இ-பாஸ் பெறுவது அவசியம். அதிலும் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர்களில் மருத்துவ அவசரம், திருமணம் மற்றும் இறப்பு போன்ற காரணங்களுக்காக முறையான ஆவணங்கள், சரியான காரணங்கள் உள்ளவர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது.

Rajini
Rajini

இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்து கார் ஓட்டுவது போல ஒரு புகைப்படம் வெளியானது. அதற்கு அடுத்த நாள் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டில் தன் மகள், மருமகன் மற்றும் பேரனுடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது.

பொது முடக்கக் காலத்தில், சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இ-பாஸ் இல்லாது பயணம் மேற்கொண்டாரா ரஜினி என்ற சர்ச்சை கிளம்பியது. இதைத் தொடர்ந்து 23-ம் தேதி ரஜினி பெற்றிருந்த இ-பாஸ் வெளியானது. அந்த இ-பாஸில் விவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால், சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ரஜினி
ரஜினி
ரஜினி இ-பாஸ் விவகாரத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை! செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் #NowAtVikatan

ரஜினி கார் ஓட்டுவது போலப் புகைப்படம் வெளியானது 20-ம் தேதி, மகள் குடும்பத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது 21-ம் தேதி. இ-பாஸ் பெறப்பட்டிருப்பது 22-ம் தேதி, பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பது 23-ம் தேதி. 23-ம் தேதி அனுமதி வழங்கப்பட்ட இ-பாஸ் மூலம் எப்படி இரண்டு தினங்களுக்கு முன்னரே பயணம் மேற்கொண்டார் ரஜினி..?

அதுமட்டுமல்லாது அந்த இ-பாஸ் மருத்துவ அவசரம் என்ற காரணத்துக்காகப் பெறப்பட்டுள்ளது. சிஸ்டம் சரி இல்லை, சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று சொல்லிய ரஜினியே இப்படி சிஸ்டத்தை மீறியது சரியா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பான விவரமறிந்த ஒருவரிடம் கேட்டபோது, "இதற்கு முன்னரும் ரஜினி, இந்தப் பண்ணை வீட்டுக்கு அவ்வப்போது வருவார். இங்கிருக்கும்போது பண்ணை வீட்டைச் சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்வார். இந்த முறை அவர் வந்த புகைப்படம் வைரலானதால் உடன் பிரச்னையும் கிளம்பியது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளானதும் அவர் வந்த தேதிக்கு அடுத்து இ-பாஸ் பெறும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு இ-பாஸ் பெறப்பட்டது." என்று கூறினார்.

rajini epass
rajini epass

தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் நிலவிவரும் சூழலில், முறையான ஆவணங்களும், சரியான காரணமும் கூறியுமே பலருக்கு பாஸ் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். பாஸ் கிடைக்காது ஏராளமானோர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது போன்ற நிலையில், ரஜினி போன்று அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் எப்படி சுலபமாக பாஸ் கிடைத்துவிடுகிறது என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இதுகுறித்து ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம். "சிங்கப்பூரில் ரஜினி சிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பியதில் இருந்தே, அவர் உடல்நலனில் அவர் குடும்பம் மிக எச்சரிக்கையாக இருக்கிறது. கொரோனா காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள சித்த மருத்துவப்படி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து முறைகளை சமீபத்தில் ஒரு சித்த மருத்துவரிடம் ரஜினி கேட்டறிந்தார். இதன்படி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காகத்தான் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு ரஜினி சென்றார்.

ரஜினி
ரஜினி

மூலிகை குளியல், தினமும் 5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி, அரை மணிநேரம் நீச்சல், மூலிகை வேது பிடித்தல் எனப் பல சிகிச்சைகளை அங்கு எடுத்துக்கொண்டார். மெடிக்கல் எமர்ஜென்சி என்றால், அதற்கு மருத்துவமனைதான் செல்ல வேண்டும் என்பதில்லை. எங்கு நமக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதோ, அங்கு செல்வதில் தவறில்லையே? போயஸ் கார்டனில் இருந்தால் ரஜினியால் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியுமா? தன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளத்தான் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குச் சென்றார்.

அச்சமயத்தில் இளைய மருமகன் விசாகன் வணங்காமுடி தன்னுடைய புது காரை எடுத்து வந்திருந்ததால், மருமகனின் ஆசைக்காக அந்தக் காரை ஓட்டிப் பார்த்தார். இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இன்னோவாவில் செல்ல விண்ணப்பித்துவிட்டு, பி.எம்.டபிள்யூ காரில் எப்படிச் சென்றார் என்று குழந்தைத்தனமாகச் சிலர் கேட்கின்றனர். பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரக எஸ்.யு.வி மாடல் காரில் செல்லவும்தான் அந்த இ-பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. மருந்து கண்டுபிடித்தால்தான் ரஜினி வீட்டைவிட்டு வெளியே வருவார் எனத் தவறான பிரசாரம் செய்து கொண்டிருந்தவர்களால், ரஜினியின் இந்தத் திடீர் உற்சாகத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள்தான் இந்த இ-பாஸ் பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள்” என்றனர்.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் பேசியபோது,``நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ள இ-பாஸ் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இ-பாஸ் பெற்றதில் முறைகேடு ஏதும் நடந்திருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முடித்துக்கொண்டார்.

லாக்டௌனில் பிரபலங்களுக்குச் சலுகை; இந்தக் குற்றச்சாட்டு குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

மாவட்டம் விட்டு மாவட்டம் இ-பாஸ் இல்லாது பயணம் மேற்கொண்டது மட்டுமல்லாமல், முறையான ஆவணங்கள் இல்லாது மருத்துவ அவசரம் என்று இ-பாஸ் பெற்றிருப்பது தொடர்பாக ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக விஷயமறிந்த சிலர் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு