Published:Updated:

கொரோனாவுக்குப் பின்னும் மக்களுக்குச் செய்ய வேண்டும்’ -நலம் விசாரித்த ரஜினி; உற்சாகத்தில் நிர்வாகிகள்

உதவிப் பொருள்கள் வழங்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
உதவிப் பொருள்கள் வழங்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ( ம.அரவிந்த் )

ரஜினி ஒன்றும் செய்யவில்லை என விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதுடன், அவரைப் பற்றிய புரிதல் இல்லாததையும் காட்டுகிறது.

தஞ்சாவூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன. அப்போது கொரோனாவுக்குப் பிறகு மக்களுக்குச் செய்ய வேண்டியது நிறைய இருக்கு. அதற்கு தயாராக இருக்கும் வகையில் உங்கள் உடல் நலனிலும் அக்கறையோடு கவனமுடன் இருக்க வேண்டும் என ரஜினி கூறியதாக தலைமை நிர்வாகிகள் எங்களிடம் அடிக்கடி பேசி வருவது உற்சாகத்தை தந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ரஜினி கணேசன்
ரஜினி கணேசன்

தஞ்சாவூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் கொரோனாவால் வருமானமிழந்து தவித்த 250 ஏழைக் குடும்பங்களுக்கு 15 நாள்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் கொடுக்கப்பட்டன. தகுதியானவர்களுக்கு உதவிகள் போய் சேர வேண்டும் என்பதை உணர்ந்து நிர்வாகிகள் மூலம் கஷ்டப்படுபவர்களின் விவரத்தை அறிந்து கொண்டதுடன் ஒரே நேரத்தில் கூட்டம் கூடி விடாமல் இருப்பதற்காக அவர்களிடம் டோக்கன் கொடுத்து வரவழைக்கப்பட்டனர்.

அத்துடன் பொருள்கள் கொடுக்கப்பட்ட இடத்தில் போதுமான சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பொருள்களை வாங்க வந்தவர்களை முதலில் சானிடைஸர் கொடுத்து கைகளைக் கழுவ வைத்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு முகக் கவசம் வழங்கியதுடன், நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுரக் குடி நீரும் குடிப்பதற்குத் தரப்பட்டது. உதவிப் பொருள்களைப் பெற்றுக்கொண்ட மூதாட்டி ஒருவர் ரஜினி போலவே உங்களுக்கும் தங்க மனசு எனப் பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா உதவி
கொரோனா உதவி

இது குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் ரஜினி கணேசன் கூறுகையில், ``எங்க தலைவர் கூறியதன் அடிப்படையில் தலைமையிலிருந்து அடிக்கடி நிர்வாகிகளின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். அப்போது கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது முக்கியம். அதே நேரத்தில் உங்க உடல் நலனிலும் அக்கறையோடு இருக்க வேண்டும். உங்களை நம்பி உங்கள் குடும்பம் இருக்கிறது. அதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

அதே நேரத்தில் கொரோனாவிற்குப் பிறகு மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கு. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என ஒவ்வொரு நிர்வாகிகளிடம் பேசி வருகின்றனர். இது எங்களுக்கு மகிச்சியையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் ரஜினி மக்களுக்கு உதவி செய்யவில்லை எனச் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கொரோனா பணியில் ரஜினி மக்கள் மன்றத்தினர்
கொரோனா பணியில் ரஜினி மக்கள் மன்றத்தினர்

பொதுவாக எங்கள் தலைவர் செய்கின்ற உதவியை மற்றவர்களுக்குத் தெரியக்கூடிய வகையில் செய்யமாட்டார். அவர் வலது கையில் கொடுப்பது இடது கைக்குத் தெரியாது. இதை நாங்கள் அவரின் ஆரம்ப காலம் தொட்டே அறிந்து வருகிறோம். அப்படியிருக்கையில் ரஜினி ஒன்றும் செய்யவில்லை என விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதுடன், அவரைப் பற்றிய புரிதல் இல்லாததையும் காட்டுகிறது.

சிறிய அளவிலான உதவிகளைச் செய்து விட்டு விளம்பரம் தேடும் நபர்களுக்கு மத்தியில் கோடிக்கணக்கில் உதவி செய்தாலும் அவற்றை யாரிடமும் சொல்லக் கூடாது, வெளியே தெரியக் கூடாது என்று அன்புக்கட்டளை யிட்டிருக்கிறார். ரஜினியின் தலைமையின் கீழ் நாங்கள் பணி செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் சேவை செய்கின்ற வகையில் தொடங்கியுள்ள அவருடைய புதிய அரசியல் பயணத்தில் நாங்களும் இருப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு