Published:Updated:

`யார் அந்தக் கறுப்பு ஆடு?' - சீறிய ரஜினி

ரஜினி
ரஜினி

`மக்களிடம் சுனாமி போன்ற எழுச்சி ஏற்படும்வரை, ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை’ என்பதாக ஒரு செய்தி அரசியல் அரங்கில் பரவுவது ரஜினியைக் கோபப்படுத்தியிருக்கிறது.

``கட்சி தொடங்குவது குறித்து ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லை. அவர் அரசியலுக்குள் நுழைந்தால் வின்னராகத்தான் இருப்பாரே ஒழிய, ரன்னராக இருக்க மாட்டார்...” இப்படி ஒரு தகவல் பரவுவது அரசியல் அரங்கில் ரஜினியைக் கடுங்கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறதாம்.

`சுனாமிபோல ஓர் எழுச்சி ஏற்பட்டால்தான் அவர் அரசியலுக்கு வருவார்’ என ரசிகர் மன்றத்தின் ஒரு மூத்த நிர்வாகி கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தச் செய்தியின் ரியாக்‌ஷன் குறித்து ரஜினியின் பல்ஸ் அறிந்தவர்களிடம் பேசினோம்.

ரஜினி
ரஜினி

``மக்களிடம் ஓர் எழுச்சி, அரசியல் மாற்றத்துக்கான களம் அமைந்தால்தான் ரஜினி அரசியலுக்கு வருவார் என திடீர்ச் செய்திகள் முளைக்கின்றன. இதைத்தான் ரஜினி ஏற்கெனவே கூறிவிட்டாரே, இதில் புதிதாக என்ன இருக்கிறது... 66,627 பூத் கமிட்டிகளுக்கு தலா பத்துப் பேர் வீதம் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. பகுதி, வட்ட, கிளை அலுவலகங்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்டுவிட்டன. மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பல சீனியர்கள் ரஜினியுடன் தொடர்பிலிருக்கிறார்கள். மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் தினமும் இரண்டு மணி நேரமாவது ரஜினி கலந்தாலோசிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் ஒருபக்கம் ரஜினியை யோசிக்கவைப்பது உண்மைதான். அதற்காகத் தேர்தல் நெருங்கிவிட்டால், அவர் கொரோனாவைக் காரணம்காட்டி ஒதுங்கிவிடுவார் என்பதெல்லாம் பொய்யான செய்தி.

அன்புள்ள ரஜினிகாந்துக்கு தமிழக மக்களின் சார்பாக ஒரு கடிதம்!

சமீபத்தில், டெல்லியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் `மக்களிடம் அரசியல் மாற்றத்துக்கான விருப்பம் இருக்கிறதா?’ என தமிழகத்திலுள்ள 172 தொகுதிகளில் சர்வே நடத்தியது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த ரகசிய சர்வே எடுக்கப்பட்டு முடிவுகள் ரஜினியிடம் அளிக்கப்பட்டுள்ளன. சர்வேயில் கலந்து கொண்ட ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் புதிய அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. மக்களிடம் எழுச்சி ஏற்பட ஆரம்பித்திருப்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வரப்போவது உறுதி; தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

ரஜினி
ரஜினி

உயர்மட்ட நிர்வாகி ஒருவர், `சுனாமி போன்ற எழுச்சி ஏற்பட்டால்தான் ரஜினி அரசியலுக்கு வருவார். அதுவரை வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனக் கூறியதாகச் சில செய்திகள் உலாவருகின்றன. ரஜினியின் அரசியல் வரவால் அரண்டு போயிருக்கும் ஓர் அரசியல் கட்சியின் குடும்பப் பிரமுகர் மூலமாக இந்தச் செய்தி பரப்பப்படுகிறது. அதாவது, ரஜினி அரசியலுக்கே வர மாட்டார் என்பதுபோல ஒரு சித்திரிப்பைக் காட்ட முயல்கிறார்கள். இந்தச் செய்தியைப் படித்துவிட்டு ரஜினி கோபமாகிவிட்டார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை போனில் அழைத்த ரஜினி, `நம்ம நிர்வாகிங்க யாரும் இப்படி பேசியிருக்க மாட்டாங்க. மக்கள்கிட்ட எழுச்சி ஏற்பட ஆரம்பிச்சிருச்சுனு அவங்களுக்குத் தெரியாதா... யார் அந்தக் கறுப்பு ஆடுனு கண்டுபிடிங்க’ என்று சீறியிருக்கிறார்.

தொடர்ந்து சென்னை, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்ட மன்ற பிரமுகர்களை அழைத்த ரஜினி, `இது வெறும் தொடக்கம்தான். நாம் களமிறங்கும்போது இதைவிட தப்புத் தப்பா ஆயிரம் செய்தி உலாவரும். நீங்க மன்றத்தை வலுப்படுத்தும் வேலையை ஆரம்பிங்க. பூத்துக்கு இன்னும் பத்துப் பேரை கூடுதலாகப் போடுங்க’ என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் ஆட்டத்தை ஆடத் தொடங்குவதற்கு முன்னதாகவே, எதிர்த்தரப்பில் அலறத் தொடங்கிவிட்டனர்” என்றனர்.

`நவம்பர் மாதத்துக்குள் ஓர் அறிவிப்பு வரும்’ என ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு