Published:Updated:

`இன்னும் ரசிகர்களாகவே பார்க்கப்படுகிறோம்!’ - அப்செட்டில் ரஜினி மக்கள் மன்றத்தினர்

ரஜினி
ரஜினி

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.

`உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது. ரஜினி படத்தையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது, தேர்தலில் போட்டியிடவும் கூடாது, யாருக்கும் வாக்கு கேட்கக் கூடாது, மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தலைமை நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளது ரஜினி மக்கள் மன்றத்தினரை மிகவும் அப்செட்டாக்கியுள்ளது.

மதுரை ரஜினி மன்றத்தினர்
மதுரை ரஜினி மன்றத்தினர்

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். அதிலும் மதுரை மாநகரிலும் புறநகர் மாவட்டத்திலும் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தி வந்தார்கள்.

மதுரை மாவட்ட நிர்வாகிகள் பால தம்புராஜ், ரபீக், அழகர், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி குமாரவேல், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சகோதரர் சிவானந்தம் ஆகியோர் முன்னின்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் ஆண்கள் பெண்கள் என்று திரண்டு வந்தார்கள்.

ரஜினி
ரஜினி

உள்ளாட்சித் தேர்தலை நாம் எப்படிச் சந்திப்பது, வார்டு வாரியாக வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்துவது என்றெல்லாம் ஆலோசனை நடத்தினார்கள். இவ்வளவு எனர்ஜியாகக் கூட்டங்களை நடத்தி வந்தவர்களின் பேட்டரியைப் பிடுங்கியதுபோல சுதாகரின் அறிக்கை உள்ளதாக மக்கள் மன்ற நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.

`2021-ல் தமிழக மக்கள் அரசியலில் அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்!' - ரஜினி

நம்மிடம் பேசிய ரஜினி மக்கள் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர், ``இன்று நேற்றல்ல, பாண்டியன், அண்ணாமலை படத்துக்கும் அதற்குப் பின் பாட்ஷா பட விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கும் ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்த தொல்லைகளால் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடந்த 25 வருடங்களாகச் சோர்ந்துபோன நிலையில்தான் கடந்த வருடம் அரசியலுக்கு வரும் அறிவிப்பை தலைவர் வெளியிட்டார்.

மதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர்
மதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர்

அதோடு நாங்கள் ரொம்ப மகிழ்சியானோம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலிலும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதன்பின் நடந்த இடைதேர்தலிலும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது நல்ல வாய்ப்பாக உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மீது மக்கள் நம்பிக்கையில்லாமல் இருக்கும் சூழலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியில் இறங்கினால் ஆதரவு கிடைக்கும் என்றுதான் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். இப்போது இப்படி அறிவித்துள்ளார்கள்.

`என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை வீண்போகாது'- `தர்பார்' இசை விழாவில் ரஜினி!

ரஜினிக்குப் பிறகு, நடிக்க வந்த விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், சீமான் மட்டுமல்ல, இயக்குநர்கள் களஞ்சியம், கௌதமன் எல்லோரும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். நடிகர் கமலும் தில்லாக இறங்கிவிட்டார். அவர்களின் ரசிகர்கள் எல்லோரும் கரைவேட்டிக் கட்டிக்கொண்டு அரசியல்வாதிகளாகிவிட்டார்கள். இன்றைக்கு ஒரு சர்வகட்சி கூட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் இவர்கள் போகிறார்கள். ஆனால், எங்களால் போக முடியவில்லை

மதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர்
மதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர்

எங்களை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவே மாட்டேன்கிறார்கள். நாங்கள் இன்னும் ரசிகர்களாகவே பார்க்கப்படுகிறோம். ரஜினி ரசிகர்களான நாங்கள் வயசாகி சாக வேண்டியதுதானா? இதைத்தான் சூப்பர் ஸ்டார் விரும்புகிறாரா? அடுத்த சட்டமன்றத் தேர்தலையாவது சந்திப்பாரா... அப்பவும் இப்படி அறிக்கை விட்டுவிட்டு நடிக்கப்போயிடுவாரா'' என்று ஆதங்கப்பட்டார். 2021-ல் ரஜினி சொன்ன அதிசயம் அற்புதம் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு