Published:Updated:

வேலூர்: `இப்ப இல்லைனா எப்பவுமே இல்லை!’ - அதிரவைத்த ரஜினி மக்கள் மன்றத்தின் அரசியல் போஸ்டர்

ரஜினியின் அரசியல் போஸ்டர்
ரஜினியின் அரசியல் போஸ்டர்

‘‘அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்! இப்ப இல்லைனா எப்பவுமே இல்லை’’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் திடீரென ஒட்டியிருக்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் வருகைக்காக நீண்டகாலமாகக் காத்திருக்கிறார்கள், அவரின் ரசிகர்கள். `வரும் நவம்பரில் கட்சி தொடங்கப் போகிறார்; மதுரையில் மாநாடு நடக்கப்போகிறது. அடுத்த ஆண்டு முதல் தீவிர அரசியலில் இறங்கப்போகிறார்’ என்று ஓடிக்கொண்டிருக்கும் செய்திகளால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘நான்... ரஜினிவழியில் செல்லத் தயார். நவம்பரில் நல்ல சேதி வரும்’ என்று நடிகர் ராகவா லாரன்ஸும் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

ரஜினி
ரஜினி

அதேசமயம், லாக்டௌன் காரணமாக தடைப்பட்டுப்போன ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கும் நவம்பரில்தான் தொடங்கப்போகிறது என்கிறார்கள். எனவே, `கட்சி தொடங்கும் பணியில் கவனம் செலுத்தப்போகிறாரா அல்லது படப்பிடிப்புக்குச் செல்லப் போகிறாரா?’ என்பதுதான் மீண்டும் குழப்பத்துக்குக் காரணம். இந்தச் சூழலில், ரஜினியின் அரசியல் வருகை தொடர்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் போஸ்டர் ஒட்டி அரசியல் சூட்டை கிளப்பியிருக்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.

மக்கள் நடமாட்டமுள்ள அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய போஸ்டர்களாக ஒட்டியிருக்கிறார்கள். அதில், `மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களைப் பற்றிச் சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்தால்... அரசியல் மாற்றம்! ஆட்சி மாற்றம்!’, `இப்ப இல்லைனா எப்பவுமே இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

ரஜினியின் அரசியல் போஸ்டர்
ரஜினியின் அரசியல் போஸ்டர்

இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது, ``தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதிலும், குறிப்பாக எங்கள் தலைவரின் ஆன்மிக அரசியலுக்காக காத்துக்கிடக்கிறார்கள். தலைவர் விரைவில் கட்சி தொடங்கி மக்களைச் சந்திப்பார். அப்போது, மிகப்பெரிய எழுச்சி ஏற்படும்’’ என்றனர் ஆரவாரமாக. இந்த போஸ்டர்களால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு